பல்/ஆர். வத்ஸலா

சிறு வயது முதலே
வலு குன்றிய பற்கள்
என்னுடையவை

நான் விழுங்கிய கால்சியம் மாத்திரைகள்
கணக்கிலடங்கா
சந்தையில் அவற்றின் விலையேற்றத்திற்கு காரணம்
என் பற்களே
என்பதென் ஊகம்

சொத்தைப் பற்கள்
கோலோச்சிய என்
வாயில்
பற்களை விட அதிகமாக
இருந்தன
ஓட்டைகள்

சாய்வு நாற்காலியில் அமர்த்தி இயந்திரத்தால்
‘குர்’ரென குடைந்து
என் பல் சொத்தை
எடுத்து கவசமிட்டு
பல சொத்துக்களுக்கு
அதிபர் ஆனார்
பல் மருத்துவர்

இப்போதெல்லாம் பல்
வலிப்பதேயில்லை
ஆனாலும்
என் பல் மருத்துவர் என்னவோ முன்பை விட அதிகமாக சொத்து சேர்க்கிறார்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
எனக்கு புதுப் பல் கட்டி