
ஓயாமல் வலித்துக் கொண்டிருந்தது
முனகிக் கொண்டே
தலையணையில் சாய்ந்துகொண்டிருந்தேன்
உடலே பெரும் சுமையானது
கன்னம் பூசினாற்போல
வீங்கி இருந்தது
நாலைந்து நாட்களாக
ஆகாரம் செல்லவில்லை
வாழ்வு பெரும்
துக்கமாகத் தெரிந்தது
வீட்டில் பல்வலிதானே
என்று பரிகாசம் செய்தனர்
மெத்தையில் சுருண்டு
படுத்துக் கொண்டேன்
வேதனையிலிருந்து தப்பிக்க
தூங்குவது ஒன்றே வழியென்று
முடிவுசெய்தேன்
மரப்பூசி போட்டு
பல்லைப் பிடுங்கியபோது
வலியில்லை
ஆனால் நறநறவென்றது
உடலைவிட்டு அகன்றது
பல்லானாலும்
வருத்தம் இருக்கவே செய்தது
ஒவ்வொரு முறை
நோயில் விழும்போதெல்லாம்
மனம் கழிவிரக்கம்
கொள்ளவே செய்கிறது
பிடுங்கப்பட்ட இடத்தை
நாக்கால் துழாவினேன்
ஏதோவொன்று என்னைவிட்டு
நழுவியது போலிருந்தது
உயிர்போய்விடும் வலி
இப்போது இல்லை
மூன்று நாட்களுக்குப்பின்
எப்போதும் போல்
அன்றாட அலுவல்களை
மனம் நினைக்கத் தொடங்கியது!
