
இராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி, எனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. விழாவில் உரையாற்றியதற்காக, ஓரடி உயரமுள்ள நின்ற கோலத்தில் விவேகானந்தர் சிலை, சான்றிதழ், பத்துக்கும் மேற்பட்ட பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்களும், புகைப்பட ஆல்பங்களும் என பிறந்தவீட்டு சீதனம்போல் ஒரு பெரிய பை நிறைய, மனம் நிறைந்த பரிசுகள்! அவற்றில், அன்றைய தினம் வெளியிடப்பட்ட நான்கு நூல்களும் இருந்தன.
முகநூலில் திரு மாலன் அவர்களின் கமெண்ட் பார்த்த பிறகுதான் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி எழுதாதது எனக்குத் தெரிந்தது. ஒவ்வொரு புத்தகமும் மிகவும் சுவாரஸ்யமான பல விபரங்களை உள்ளடக்கியவை. இன்றைய இளைய சமுதாயம் மட்டுமன்றி, பெரியவர்களும் வாசித்து அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய தகவல்கள் உள்ள அருமையான புத்தகங்கள். எல்லாம் கடந்த நூறாண்டில் இராமகிருஷ்ண விஜயம் இதழ்களில் வெளியான சிறப்பான கட்டுரைகளின் தொகுப்புகள். ஒரு முன்னோட்டம் இங்கே, பின்னர் விரிவாக எழுத ஆசை – பகவான் இராமகிருஷ்ணரின் அருள் வேண்டும்!
- தேசத்தின் உயிர் மையங்கள் – சுவாமி அபவர்கானந்தர். ஶ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை-4. மனிதனை இறைவனோடு தொடர்பு கொள்ள வைக்கும் கருவியாக விளங்குபவை கோயில்கள். திருக்கோயில் சமுதாய இயக்கத்தை ஏற்றுக்கொண்டிருப்பதால்தான் ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழி பிறந்தது. கோயில்கள் மற்றும் அதன் சிறப்பு, பல்லவ, பாண்டிய, சோழப் பேரரசுகள் கட்டிய கோயில்கள் போன்றவற்றுடன் ராமகிருஷ்ண இயக்கத்தின் கோயில்களையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
கோயிலும் மனித உடலும் என்ற கட்டுரை, கோயில்களின் அமைப்பையும், மனித உடலமைப்பையும் ஒப்பிடுகிறது. சைவக் கோயில்கள், வைணவக் கோயில்கள் பற்றிப் பேசுகிறது. அதிட்டானம் (பீடம்), பித்தி அல்லது சுவர் (கால்), பிரஸ்தரம் (கூரை), க்ரீவம் (கழுத்து), சிகரம் (தலை), குடம் (ஸ்தூபி) என்ற கோயிலின் ஆதாரப் பகுதிகளை விளக்குகின்றது.
சங்க இலக்கியங்கள் காட்டும் கோயில்கள், பல்லவர் கால குடைவரைக் கோயில்கள், சோழர் காலக் கோயில் வளர்ச்சி (சோழர்களின் கோயில்களிலேயே மிகவும் தொன்மையானது தில்லை நடராஜர் கோயில்!), தஞ்சைப் பெரிய கோயில், பாண்டியர் காலக் கோயில்கள், நாயக்கர் காலக் கோயில்கள், நகரத்தார் கோயில் பணிகள், பகவான் இராமகிருஷ்ணர் கோயில்கள் என மிக சுவாரஸ்யமான தகவல்கள்.
ஆலயம் காப்போம் என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகள், இன்றைய கோயில்களின் நிலையைக் கூறி, கோயில்களையும், கோயில் சிலைகளையும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. வாசிக்க வேண்டிய புத்தகம்.
- நூறாண்டு ஶ்ரீராமகிருஷ்ண விஜய பாரம்பரியம் – மாலன். ஶ்ரீராமகிருஷண மடம், சென்னை-4. தமிழ் ஆன்மீக – பண்பாட்டு மாத இதழான ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்து இதழ்களின் தேனை எடுத்து, ஒவ்வொரு மாதமும் தொடராக எழுதியதின் தொகுப்புதான் இந்த நூல். மூத்த எழுத்தாளர் திரு.மாலன் அவர்களின் அனுபவ முத்திரை ஒவ்வொரு கட்டுரை சொல்லும் செய்திகளின் சாரத்திலும் தெரிகிறது.
ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஶ்ரீசாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகிய தெய்வத் திருமூவரின் வாழ்க்கையையும், உபதேசங்களையும் எடுத்துச் சொல்ல, சுவாமி பிரம்மானந்தரின் சீடர் சுவாமி சர்வானந்தர் 1921 ஆம் ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற மாத இதழைத் தொடங்கினார். திரு அண்ணா என்.சுப்ரமணியம், திரு மயில்வாகன பண்டிதர் (சுவாமி விபுலானந்தர்), திரு கே.சி. ராமசாமி ஐயர் மூவரும் பத்திரிகை ஆசிரியப் பொறுப்பேற்க,
“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”.
என்ற திருக்குறளைக் (352) கொள்கை விளக்க வரிகளாகக் கொண்டு ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் தன் பயணத்தைத் தொடங்கியது. அதிலிருந்து, நூறாண்டு கால இதழ்களின் பக்கங்களிலிருந்து பகவான், அன்னை, சுவாமி ஆகியோரின் உபதேசங்களையும், ரவீந்திரநாத் தாகூர், தாமஸ் எடிசன், ரா.பி. சேதுப்பிள்ளை, உ.வே.சா., மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, பகவான் ரமணர், வ.வே.சு. ஐயர், சகோதரி நிவேதிதை, கி.வா.ஜ., ராஜாஜி, காமராஜர், ஏக்நாத் ரானடே, கிருபானந்த வாரியார், ஜெயகாந்தன், கண்ணதாசன், எம் எஸ் உதயமூர்த்தி, தென்கச்சி சுவாமிநாதன் போன்றோர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
“ஆன்மீகத்தைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் ஒரு சேரப் பேசிய இதழ்கள் தமிழில் இல்லை. கலாசாராத்தைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் ஒரு சேரப் பேசிய இதழ் ஏதுமில்லை. இலக்கியத்தைப் பற்றியும், சமூக சேவையைப் பற்றியும் பேசிய இதழோ, இளைஞர்களைப் பற்றியும், சான்றோர்களைப் பற்றியும் பேசிய இதழோ இங்கு இல்லை. ஆனால், இவை எல்லாவற்றைப் பற்றியும் அக்கறையோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் எளிமையான மொழியில் அழகான வடிவமைப்பில் பேசிய ஒரே தமிழ் மாத இதழ் ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்” – கட்டுரையில் மாலன்.
சுவாரஸ்யமான தொகுப்பு!
- குருதேவர் தூய அன்னை தீர்த்த யாத்திரைகள் – பத்மவாசன். ஶ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை-4. ஶ்ரீராமகிருஷ்ணர் – அன்னை ஶ்ரீசாரதா தேவியின் தீர்த்த யாத்திரைகள் பற்றிய 19 கட்டுரைகள் கொண்ட நூல். வண்ணப்படங்கள் வரைந்தவரும் கட்டுரை ஆசிரியர் பத்மவாசன் அவர்களே! பக்திச் சுவையுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள், மீண்டும் மீண்டும் வாசிக்கத் தக்கவை. சுவாரஸ்யமான சிறுகதைகள், ஆன்மீகத் தகவல்கள், ஸ்தல புராணங்களில் நாம் அறிந்திராத தகவல்கள் என சுவாரஸ்யமான புத்தகம். சிறப்பான தொகுப்பு.
- வீர மங்கையரின் வீர வரலாறுகள் – மோகனா சூரியநாராயணன். ஶ்ரீராமகிருஷ்ண மடம், சென்ன-4. பாரத புத்திரிகளில் 23 பேர்களின் வீர சரித்திரங்களின் தொகுப்பு. வீரராணி அப்பக்கா, வீர மங்கை வேலு நாச்சியார், கேலடி சென்னம்மா, தில்லையாடி வள்ளியம்மை, ஜல்காரி பாய், ராணி துர்காவதி, புரட்சி ராணி திரெளபதி பாய், ராணி கிருபாதேவி, ராணி சாரந்தா என நாம் அறிந்திராத பல வீர மங்கையரின் வரலாற்றுக் கட்டுரைகள், வியக்க வைக்கின்றன. வாசிக்க வேண்டிய வீர வரலாறுகள்.
இந்த நான்கு புத்தகங்களும் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் வாசிக்க வேண்டும் என்ற நல்லென்ணத்துடன், சிறப்பான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, மிகக் குறைந்த விலையில் (நான்கு புத்தகங்களும் சேர்ந்து ரூ350/- தான்) பதிப்பித்திருக்கும் ஶ்ரீராமகிருஷ்ண மடம் வணங்குதற்குரியது. எல்லோருக்கும் பரிசளிக்க ஏற்ற பொக்கிஷங்கள்!
