ஜாக் லக்கான்/முபீன்

ஏப்ரல் 13ஆம் தேதி பிறந்த ஜாக் லக்கான், சர்ச்சைக்குரிய உளவியலாளர். ஃப்ரெஞ்சின் ஃப்ராய்ட் என்று அவரை அழைத்தார்கள். ஃப்ராய்டின் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து அவர் தன்னுடைய கோட்பாடுகளை வளர்த்தெடுத்தார்.

ஃப்ராய்ட் சொன்ன நனவிலி என்ற அம்சத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து லக்கான் ஆய்வு செய்தார்.
லக்கான் அவர் காலத்தின் அமைப்பியலாளர்களின் சிந்தனைகளால் கவரப்பட்டார். குறிப்பாக, சசூர், லெவி-ஸ்ட்ராஸ் போன்ற கோட்பாட்டாளர்களால் லக்கான் தாக்கமுற்றார். அவர் கருத்தரங்கில் ஆற்றிய உரைகள், அவர் எடுத்த வகுப்புகள் எல்லாம் தொகுப்பாக வந்திருக்கின்றன.

சர்ரியலிச இயக்கத்துடன் இணைந்து லக்கான் பணியாற்றினார். பிகாஸோவுக்கு மனநல ஆலோசகராக இருந்தார். சர்ரியலிச பாணி ஓவியங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அதன் பின் அவர் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தார். ’சித்தபிரம்மை: ஆளுமையுடன் தொடர்புடைய மனக்கோளாறு’ என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வு ஃப்ராய்டின் அடுத்த கட்ட சிந்தனையாக இருந்தது.

அவருடைய கண்ணாடி நிலை, ‘கற்பனை-குறியீடு-உண்மை’ ‘பெண்களின் உளவியல்’ போன்ற நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. லக்கான் பெண்ணியத்தில் ஏற்படுத்திய தாக்கமும் கணிசமானதாக இருந்தது.

லக்கானின் ‘நனவிலி மொழி போல் கட்டமைக்கப்பட்டது’ என்ற பிரபலமான வாசகம் அவருடைய அடிப்படைக் கோட்பாட்டைக் கூறுவதாக உள்ளது. லக்கான் மொழி-நனவிலி-தன்னிலை என்ற தொடர்பில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்தவர்.