1943/நியாண்டர் செல்வன்

அலாஸ்காவில் இருந்த அட்டு மற்றும் கிஸ்கா தீவுகளை ஜப்பான் கைப்பற்றி இருந்தது. 20ம் நூற்றாண்டில் அமெரிக்க மண்ணில் ஒரே ஒரு அங்குலம் பகைவர்களால் கைப்பற்றபட்டது என்றால் அது இதுதான். அதனால் மிகப்பெரும் படையை திரட்டியது அமெரிக்கா. 35,000 வீரர்கள் அணிவகுத்தார்கள். எதிர்த்து நின்ற ஜப்பானிய படைகளில் அட்டு தீவில் இரண்டாயிரம் பேர் இருந்தார்கள். கிஸ்காவில் ஐயாயிரம் பேர்

முதலில் இரு தீவுகளை சுற்றி வளைத்தார்கள். தீவுகளுக்கு செல்லும் உணவு சப்ளை, ஆயுத சப்ளை துண்டிக்கபட்டது. அதன்பின் இரு தீவுகளின் மேலும் 330 டன் குண்டுகள் வீசபட்டன.

அதன்பின் அட்டுதீவில் அமெரிக்க படை இறங்கியது. குண்டுகள் தீரும் வரை சுட்ட ஜப்பானிய படை பின்வாங்கிக்கொன்டே சென்று தீவின் மேலே இருந்த மலை மேல் ஏறி பங்கர்களுக்குள் பதுங்கின. குண்டுகள் தீர்ந்தன. உணவும் இல்லை.

“உணவு இல்லாம நீ இறங்கி வந்துதானே ஆகணும்” என அமெரிக்கபடை கீழே காத்திருக்க ஜப்பானிய படைதளபதி அந்த முடிவை எடுத்தார்.

அனைத்து ஜப்பானிய வீரர்களும் குண்டுகள் தீர்ந்த துப்பாக்கியில் பயோனெட்டை சொருகினார்கள். ஈட்டி மாதிரி தயார் செய்துகொன்டார்கள். “சார்ஜ்..” உத்தரவு பிறக்க பேய் வேகத்தில் ஓடி அமெரிக்க படைகளை பயோநெட்டால் குத்திகிழித்தபடி தீவின் கட்ற்கரையை நோக்கி ஓடினார்கள். அவர்களை நோக்கி அமெரிக்கர்கள் சுட, ஒரே பரபரப்பு…இரண்டாயிரம் ஜப்பானிய வீரகளும் மடிகையில் ஆயிரம் அமெரிக்க வீரர்களும் உயிரை விட்டிருந்தார்கள். ஜப்பானிய படை கிட்டதட்ட தீவின் கடற்கரையை அடைந்தே விட்டது.

இரண்டாயிரம் பேர் இருக்கும் தீவுக்கே இப்படி ஒரு போர், உயிர்ப்பலின்னா ஐயாயிரம் பேர் இருக்கும் கிஸ்கா தீவை பிடிக்க எத்தனை உயிர்ப்பலி ஆகுமோ என அமெரிக்கர்கள் யோசித்தார்கள். பெரும்படையை அழைத்து வந்தார்கள். 35,000 வீரர்கள் தீவை சுற்றி சூழந்தார்கள்.

“இப்ப நாம சார்ஜ் பண்ணுவோம். சும்மா சுட்டுகிட்டே போகணும். ஒரு இலை அசைந்தால் கூட சுடணும்…ரெடி ஸ்டார்ட்…சார்ஜ்..” அமெரிக்க படை நாலாபக்கமும் சுட்டபடி தீவின் மையபகுதியை நோக்கி ஓடியது. தீவில் எங்கும் புகைமண்டலம், குண்டுசத்தம். யார் யாரை சுடுகிறார்கள் என தெரியவில்லை.

எல்லா சத்தமும் அடங்கியபின் பார்த்தால் தீவில் ஒற்றை ஜப்பானியர் கூட இல்லை. அட்டு தீவு விழுந்தவுடன் அவர்கள் நைசாக படகுகளில் ஏறி இரவோடு இரவாக தீவை விட்டு போய்விட்டார்கள். ஆள் இல்லாத டீக்கடையில் நுழைந்த அமெரிக்கர்கள் ஜப்பானியரை சுடுவதாக நினைத்து தம்மை தாமே சுட்டுக்கொன்டிருந்தார்கள். ஒரே ஒரு எதிர்ப்படை வீரன் கூட இல்லாத தீவில் நடந்த போரில் 313 வீரர்கள் பலியானார்கள்.

இப்படி ஒரு அவமானம் அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலகிலேயே எங்கேயும் நிகழ்ந்தது கிடையாது என்கிறார்கள் மிலிட்டரி நிபுணர்கள்.