முறைதெரியாக் கதைகள்

கால சுப்ரமணியம் 

\

நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின் படைப்புகளின் அடிப்படையிலேயே பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மலர்ந்தன எனலாம். காஃப்கா, ஜாய்ஸ் போனறோர் நவீனத்துவர்கள் மட்டுமல்ல பின்நவீனத்துவத்துக்கு ஊற்றுக்கண்கள் ஆனவர்கள். நபக்கவ்வின் நாவல்களைப் படித்திருந்தால் தான் இதன் அர்த்தம் புரியும். நபக்கவ், கார்டு போன்ற தாள்களில் தான் எழுதுவார் (அவருக்கென்று ஸ்பெஷல் கார்டுகள் தயாரிக்கப்படுவதும் உண்டு). ரப்பர் தலை கொண்ட பென்சிலில் தான் எழுதுவார். லொலிடா (Lolita, 1955) என்ற நாவல் கட்டமைக்கப்பட்டது தனிக்கதை. அடர்ந்த கானம் சூழ்ந்த மலையின் ஒரு உச்சியை அடைகிறார். திடீரென்று ஒரு நகரம் கீழே தெரிந்து அதிரவைக்கிறது. ஒரு சமயம் ஒரு ஓட்டல் அறையிலிருந்து கீழே மைதானத்தில் டென்னிஸ் ஆடும் இளம்பெண்ணையும் நடுத்தரவயதுள்ளவனையும் கவனித்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கார்டுகளை இணைத்து ஒரு கதையை உருவாக்குகிறார். தனித்தனிக்கார்டுகள் தனித்தனியே அவ்வப்போது இணைக்கப் பட்டு நாவல் முழுமை கொள்கிறது. இது எதோ நவீனத்துவத்தின் இறுதியில் வடிவத்தைக் குலைத்தது போன்றது மட்டும் அல்ல. அடா (Ada or Ardor: A Family Chronicle, 1969) நாவலை டால்ஸ்டாயின் வரிகளில் தான் ஆரம்பிக்கிறார். ஒரு ரொமான்ஸ் அல்லது ரொமாண்டிசிச நாவலை எழுதுவதாகவே ஆரம்பத்தில் தொனிக்கிறார் (கவனிக்க. நவீனத்துவ நாவலை அல்ல). தனது ரஷ்யநாடும் தான் வாழும் அமெரிக்கநாடும் இணைந்ததுபோன்ற அதாவது இரண்டும் ஒன்றாக இருக்கிற ஒரு நாட்டில் கதை நிகழ்கிறது, லொலிடா போலவே அடா-வும் இதுவும் காதல்காமக் கதைதான். (ஆனால் லொலிடாவில் ஒரு நாலெழுத்துக் கெட்ட வார்த்தை கூட கிடையாது), நபக்கவ் எழுதியதில் அடா தான் மாஸ்டர்பீஸ் என்கிறார்கள். அவரது அனைத்து நாவல்களைப் படித்த போதும் இதுதான் உறுதிப்படுகிறது. நாவலே இறந்து போனது என்று விமர்சனம் புலம்பிய காலத்தில் (தீர்ந்ததன் இலக்கியம் பின்பு எழுந்தது வேறு) இரண்டு நாவல்கள் அதைப் பொய்ப்பித்தன. ஒன்று நபக்கவ்வின் Pale Fire (1962). மற்றது Alain Robbe-Grillet (1922-2008) ன் Le Voyeur (1955) என்ற பிரஞ்ச் நாவல், ( நபக்கவ் (1899-1977) தான் இளைய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் என்று இவரை இனங்காட்டியவரும். தமிழில் கசடதபற இதழில் இவரது “கடல்கரை” என்ற சிறுகதை மட்டும் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் அறிமுகக்குறிப்பு பிரமிளால் எழுதப்பட்டது). “ஒட்டுப் பார்ப்பவன்“ நாவலில் ‘முன்னோக்கு உத்தி’ பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு காமிராக் கண் வழி காட்சிகள் நகர்வதுபோலிருக்கும். கதையோட்டம் முன்பின்னாகத் தாவும். அப்படிப்பட்ட ஒரு தாவலில் யார் கொலைசெய்தது என்று தெரியாத ஒரு தருணம் தாண்டப்பட்டுவிடுகிறது என்பதுதான் கதை. “நெகிடித் தீ” யின் கதை ஒரு நெடுங்கவிதை (புதுகவிதையல்ல) முதலில் இருக்கும். அதற்கு பதவுரை பொழிப்புரை சொல்வது போன்ற வடிவில் மட்டும் கதை உருவாகும். ( பின்பு டி.எம். தாமஸ் எழுதிய “வெண்ணிற விடுதி“ – த வொய்ட் ஹோட்டல் – என்ற பிரசித்தமான கதையும் இதே உத்தியைப் பயன்படுத்தியிருக்கும். ஆனால் முதலில் கவிதை, பின்பு நிகழ்வுகள். ஜான் பௌல்ஸின் ’சேகரிப்பாளன்’ – த கலெக்டர்- நாவலில் முதல் பகுதி கட்டுரையில் கதை, பின்பகுதி டைரிக்குறிப்புகள் (ஜே.ஜே.சில குறிப்புகள் நினைவுக்கு வருகிறதோ? ) இவர்கள் எல்லோருமே பின்பு பின்நவீனத்துவ நாவலாசிரியர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான். அதிலும் ஜான் பௌல்ஸின் The Magus, 1965,, A Maggot, 1985 பின்நவீனத்துவத்தின் உதாரணங்கள் எனப்பட்டவை. (சு.ரா.வுக்குப் போலவே இவர்தான் சுஜாதாவின் ‘தனிமைகொண்டு’, நைலான் கயிறு (நாவலில் வரும் சுநந்தாவின் டைரி), காயத்ரி போன்ற நாவல்களுக்கு இன்ஸ்பிரேஷன். தூய இலக்கியவாதிக்கும் திரில்லர் இலக்கியவாதிக்கும் தாக்கத்தைத் தரும் அளவு ஜான் பௌல்ஸில் ஒருவகை எக்ஸிஸ்டென்ஸியல் திரில்லர், போஸ்ட்மாடர்ன் திரில்லர் இணைந்திருக்கும்.சரி, வாசகருக்கு ஒரு வேதாளக் கேள்வி,பௌல்ஸின் ‘சேகரிப்பாளன்”, நபக்கவ்வின் The Real Life of Sebastian Knight என்ற போஸ்ட்மாடர்ன் எழுத்தாளர்களின் நாவல்கள் எப்படி “ஜே.ஜே.சில குறிப்புகள்” என்ற மாடர்னிஸ நாவலுக்கு இன்ஸ்பிரேஷனாயிருக்க முடியும்.?? சரியான விடை சொல்லாவிட்டால் தலை சுக்குநூறாய் வெடித்துப் போகும். எச்சரிக்கை. விக்ரமாதித்த வாசகனே ‘முறைதெரியாக் கதைக்குத் முழித்த மாதிரி விழிக்கக்கூடாது.

One Comment on “முறைதெரியாக் கதைகள்”

Comments are closed.