எரிவு/ பிரதீபன்

தான் உண்டு எஞ்சிய சோற்றை
அவ்வப்போது
இவளுக்கு உண்ணக்
கொடுப்பாள் அவள்;
தான் உடுத்திக் கழித்த
நைந்த புடவைகளை
எப்போதாவது
இவளுக்கு உடுத்தக் கொடுப்பாள்;
தான் எழுதிய ஒரு சில நூல்களைப்
படிக்கக் கொடுத்துப்
பாராட்டை எதிர்பார்ப்பாள்;

கொடுத்ததிற்கு நான்கு மடங்காக
வேலை வாங்கி
உலுக்கு எடுத்து விடுவாள்;

அண்டை வீட்டில் இருப்பதால்
கூப்பிட்ட குரலுக்கு
ஓடிவர வேண்டுெமென்று
சினந்து பேசுவாள்,

இவள் ஊர்மாறிச் செல்ல நேர்ந்தது;
ஓடியாடிப் பிழைத்து
உருண்டு புரண்டு எழுந்து
இன்று இவள்
உருவாகிவிட்டாள்;

எதிர்பாராமல் வேறோர் ஊரில்
இருவரும் சந்தித்தனர்,
இவளைப் பார்த்து அவளுக்கு
எரியாமல் என்ன செய்யும்.