
- நிழல்களை அழைப்பது
பார்க்கும் போதே இருளுக்குள் மறைந்து
கொண்டிருக்கும் ஒரு உருவத்தை
என்னவென்று சொல்வாய்
இருள் விழுங்கி விட்டதா?
அல்லது கலைந்து போகும்
தோற்றக் கனவா ?
இந்த தெருவெங்கும் கட்டவிழ்த்து
விடப்பட்டிருக்கும்
துள்ளும் நிழல்களோடு குலாவ
விடைபெற்று விட்டதா?
நட்சத்திரங்களை சொல்லாக்க முடியும்
கவிஞர்களுக்கு
சவால் விட்டு விட்டு செல்கிறதா?
எப்படியோ கடைசியில்
காலத்தில் குதித்துவிட்டதென்று
முடித்துக்கொள்கிறேன்
**************
2.
சிகரெட் புகை கசியும்
நான்கு சுவர்களுக்குள்
நொண்டியடித்தபடியே
சுற்றி வந்து கொண்டிருக்கிறது
அகலமுடியாத ஒரு பெருங்கனவு
விரித்த உடன்
பார்க்க முடியாமல்
விழிகளை ஏமாற்றிப்
போய்விடுகிறது
குடைக்குள் அடைபட்டருந்த
நீல வானம்
நீர்க்குமிழ்களுக்குள்
வெறித்தபடி
முழித்துக்கொண்டிருக்கும்
ஞாபகங்களை
சத்தமில்லாமல்
கொத்திக்கொண்டு
போய் விடுகிறது
அதிராத காற்று
ஈன்று புறம் தந்த
பசுங்கொடிகள் பரிதவிக்க
கண்முன்னமே
கனவுபோல
உதிர்ந்து கொண்டிருக்கிறது
சங்கு போன்றவெள்ளைப்பூ
நடக்கும் போதே
திகைத்து நிற்க
நட்டநடு வனாந்தரத்தில்
இறக்கிவிட்டு விட்டு
சொல்லாமலே
போய்கொண்டேயிருக்கிறது
இவ்வளவு நேரம்
உன்னை கைபிடித்து
அழைத்து வந்த நினைவு
*****************
3.
இரவில் வழிதப்பி தட்டழியும்
அந்த வெண்நாரைக் கூட்டங்களின்
பரிதவிப்பை விடவா
உங்களின் பரிதவிப்பு
அதிகமாக இருந்து விடப் போகிறது?
தழும்பி வழியும் குவளையை
கவிழ்த்து
வெற்றிடமாக்கிவிட்டு
நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்
பாவம் அவைகள் என்ன செய்யும்?
பிளந்த பனங்கிழங்கினைப்போன்ற
அலகினை வைத்துக் கொண்டு
கேவி கேவித்தான் அழ முடியுமா
இல்லை துக்கத்தை ஒரு கவிதையில்
இறக்கி வைத்து விட முடியுமா ?
இந்த மரம் உதிர்க்கும் இயலாமையின்
பெருமூச்சுத்தான்
காற்றில் விசும்பும் சருகு என்று
நான் கண்டு கொண்ட நொடியிலிருந்து
எனக்கு நிம்மதியாக தூக்கமில்லை
மனமற்ற உயிர்களின் மனமாக இருந்து
துயரத்தை சுமந்தாலென்ன என்று
என் மனம் கேட்டது?
ஆனால் அதை தேடிய போது
அங்கில்லை
ஆனால் கொத்து கொத்தாக
வெண்நாரைக் கூட்டங்கள்
வானில் பறந்த வண்ணமேயிருந்தன
************
4.
கருங்கல் புத்தன் புன்னகை
கொதித்துக்கொண்டிருக்கும்
எனது தேநீரை
இமைக்காமல் நீ
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அது உனது தேநீராகவும் ஆகிவிடுகிறது
கிளையிலிருந்து விடுதலை பெற்ற
முதிய இலையொன்று
பூமியை போய் சேர்வதற்குள்
சிறிய தவம் இயற்றி முடித்து விடுகிறது
முத்தமிடும் போதே ஞானம்
பெற்றுவிடும் உதடுகள்
இதயத்திற்குள் இதயத்தை
கடத்தி விடுகின்றன
இந்த நொடிக்காகவே காத்திருந்த
கருங்கல் புத்தன்
யுகம் யுகம் கடந்த பின்பு
முதன் முதலாய் புன்னகைக்கிறான்
உள்ளிருக்கும் தேரை சீராக
சுவாசம் கொள்கிறது
***********
5.
பச்சை தவளை
ஒரு வார்த்தை பச்சை தவளை
கண்களை உருட்டிக்கொண்டு
விழிக்கிறது நமக்கிடையில்
அது சாத்தானுடையது என்றால்
நீ நம்ப மறுக்கிறாய்
கண்ணாடியில் எறியப்பட்ட கல்
புத்தனைப் போல
சாந்தமாக கிடக்கிறது
விரிசல் விழுந்த கண்ணாடிக்குள் தான்
விம்மல் சப்தம்
ஒரு சின்னஞ்சிறிய நிலவு தான்
இந்த வானத்தையே
மறக்கடிக்கின்றதென்றால்
அது எத்தனை வசீகரம் கொண்டதாக
இருக்க வேண்டும்
மறந்து போன வானத்தை
உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்
என்கிறதா அது ?
எல்லாவற்றிற்கும் காரணம்
அந்தப் பச்சை தவளைதான்
வா அதைப் பிடித்துப்போய்
குளத்தில் வீசுவோம்
அது இன்று நீர் பாம்புக்கு இரையாகட்டும்
**************
6.
உருகவைக்கும் எழுத்து
ஒரு கவிதையாகிறது
அதன் செல்கள் முழுவதும்
நீ தான் நிரம்பிக் கொண்டிருக்கிறாய்
பற்களை கிட்டிக்க வைக்கும்
பொருளாதாரச்சுமையை மீறி
அது நம்மை புன்னகைக்க வைக்கிறது
சாதி நகம் கொண்டு
இரத்தம் வரக் கீறும்
இந்த சமூகத்தின் வன்முறையிலிருந்து
சற்று நேரம் அது நம்மை
பாதுகாக்கிறது
நான் ராஜ குமாரனாகிறேன்
நீ யுவராணி
மலர்கள் அட்சதையாக தூவப்படும்
மாடவீதிகளில் பவனி வருகிறது
நமது தேர்
சட்டென்று
இந்த கற்பனை வேண்டாமென்று
சொல்கிறது நம் இதயம்
நாம் அதன் பேச்சை கேட்கிறோம்
நான் உனக்காக
புதியதொரு வானத்தை திறக்கிறேன்
இப்போது
நாம் இருவரும் பறவைகள்
பறக்க பறக்க பரவசம்
எட்டாத தொலைவினில்
எண்ணித் தொலையாத சுகம்
விழிகளை மூடிக் கொண்டு
இப்படியே சிறகடிப்பை நிறுத்திவிட்டால்
நாம் தான் மிதக்கும் சொர்க்கம் ஆவோம்
புளித்த கூழுக்கு
உரித்த வெங்காயம்போல்
அத்தனை சுவையாக இருக்கிறது
இந்த நிமிடம்
குறிப்பாக இன்று மாதத்தின் முதல் தேதி
இங்கே வீட்டு வாடகை கேட்பதற்கும்
ஆள் வரப்போவதில்லை
என்று நினைக்கும் போது
பேசாமல் இங்கே இந்தக்கவிதையிலே
வாழ்ந்து விடலாமென்று
சத்தியமாக தோன்றுகிறது
நம் இருவருக்கும்

மிக்க நன்றி ஐயா