நான் /ஆர் வத்ஸலா

புத்தாண்டு வாழ்த்துக்களடி
தோழி

ஏனடி நீ புத்தாடை அணியவில்லை?
நான் அணிந்துக் கொண்டிருக்கிறேன் பார்
அவனுக்கு பிடித்த சிகப்பு நிறத்தில்
அழகாயிருக்கிறேனா?

ஏனடி என்னை வியப்புடன் பார்க்கிறாய்?
ஓ! அவன் வெளியூர் போனபிறகு
தன் முகவரி தராமல்
எழுதிய ஒரே கடிதம் வந்து
மூன்றாண்டுகள் ஆகிவிட்டதால்
நான் சோகத்தில் மூழ்கி இருப்பேன்
என்று எதிர்பார்த்தாயா?

ஓ! அதனால் தான் அதற்கேற்ப
புத்தாண்டு ஆடையை களைந்து
கசங்கிய ஆடை உடுத்தி வந்தாயா?

அடி பிச்சி!
அவன் புது வாழ்வை
தொடங்கியிருக்கலாம் தான்
ஆனால்
நான்
நான் தானே தோழி?
என் மனதில் அவன் தானேயடி
அன்றும்
என்றும்?

எதற்கும்
போகும் வழியில்
பார்த்து விட்டு போ
அவன் வீட்டில் இன்னும்
பூட்டு தொங்குகிறதா என்று
எனக்காக