மக்குப் பையன்/ழாக் ப்ரெவர்

பிரெஞ்சிலிருந்து தமிழில் : வெ.ஸ்ரீராம்

வேண்டாம் என்று தலையை ஆட்டுகிறான்
ஆனால் சரி என்கிறது அவன் இதயம்
அவனுக்குப் பிடித்ததற்கெல்லாம் ‘சரி’
ஆசிரியருக்கு ‘வேண்டாம்’
நின்றுகொண்டிருக்கும் அவனிடம்
கேள்வி கேட்கப்படுகிறது
எல்லாப் பிரச்சினைகளும் அவன்முன்
வைக்கப்படுகின்றன
திடீரென ஒரு பைத்தியக்காரச் சிரிப்பு
அவனைப் பற்றிக்கொள்கிறது
எல்லாவற்றையும் அழிக்கிறான்
எண்களைச் சொற்களை
தேதிகளை பெயர்களை
வாக்கியங்களை சிக்கல்களை
பிறகு ஆசிரியரின் மிரட்டலையும் மீறி
மேதைச் சிறுவர்களின் ஆர்வாரத்தினூடே
பல வர்ணப் பென்சில்களைக் கொண்டு
இன்னல் எனும் கரும்பலகையில்
அவன் வரைவது மகிழ்ச்சியின் முகம்