இழப்பு – கமலா நடராஜன்/பி.ஆர்.கிரிஜா

விருட்சம் வழங்கும் கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் இன்று திருமதி கமலா நடராஜன் அவர்கள் எழுதிய “இழப்பு” என்ற சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இது அவர்கள் எழுதிய “யசோதையின் கண்ணன்” என்ற சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்று எல்லோரும் அடிக்கடி நாம் சொல்வோம். இந்தக்
கதையில் வரும் ஒரு பெண் பாத்திரம் முன் கோபம் கொண்டவள். தன்னுடைய
முன்கோபத்தினால் அவளுக்கு ஏற்படும் இழப்பை ஆசிரியர் சித்தரிக்கிறார்.
திருமணமாகாத ஒரு இளம் பெண் சாருமதி தன் அம்மாவுடன் வசித்து வருகிறாள்.

ஆபீஸிற்கு கிளம்பும்போதே ஒரே கத்தல் “அம்மா” என்று. அம்மாவும் பதறி அடித்து ஓடி வந்து அவளை வழி அனுப்புகிறார். அடுத்த நாள் அவள் அக்கா லதாவின் குழந்தை சுரேஷின் பிறந்தநாள். அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் சாருமதி செய்கிறாள். ஜூஸ், பிட்சா கேக் ஆர்டர் செய்கிறாள். அவள் அக்கா கூட சொல்லிப் பார்க்கிறார், “ஏன் வீண் செலவு சாரு ?, கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தால் போதாதா ?” என்று. அதற்கு பிடிவாதமாக “நான் செய்வேன் நீ உன் அன்பு கணவர் பாபுவோடு வந்து சேர்” என்று சொல்கிறாள்.

அவளுடைய முன்கோபம் அறிந்த லதாவின் கணவர் பாபு உன் தங்கை மூட் எப்படி
இருக்குமோ ? என்று தயக்கத்துடனே வருகிறார். அடுத்த நாள் தடபுடலாக பிறந்தநாள்
கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. லதா தன் மகன் சுரேஷுக்கு பல விளையாட்டுக்கள் காட்டி மகிழ்ச்சியாக வைத்திருந்தாள். எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்தாள் சாரு. அப்போது குழந்தை சுரேஷின் போதாத காலம். வேகமாக வந்து சாருமதி மேல் இடித்து விட ஜூஸ் சாருவின் டிரஸ்ஸில் கொட்டியது. சோபாவிலும் கொட்டியது. குழந்தை என்று கூட பாராமல் சாரு சுரேஷை பளார் என்று அடிக்கிறாள்.

எல்லோரும் பேயறைந்தது போல் ஆகிவிட்டனர். “இப்படியா என் டிரஸ், சோபால
கொட்டறது? ஒரு கொண்டாட்டமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம், எல்லோரும் கெட்
அவுட்” என்று சாரு கத்துகிறாள். பதில் ஏதும் பேசாமல் பாபு தன் குழந்தை சுரேஷை
தூக்கிக்கொண்டு வெளியேறுகிறான். லதாவும் அவனை பின் தொடர்ந்து செல்கிறாள்.
சற்றுமுன் கல்யாண வீடு போல காட்சி அளித்த வீட்டில் இப்பொழுது வெறும் மயான
அமைதி. சாருவின் அம்மா மீனா தன் பெண்ணை கடிந்து கொள்கிறாள், “குழந்தைக்கு என்ன தெரியும் ? இப்படியா அடிப்பது?” என்று. அதற்கு சாரு ஆர்க்யு செய்கிறாள்.
குழந்தையானாலும் டிசிப்ளின் முக்கியம். உனக்கும் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கும் அப்போது பார் என்கிறாள் அவளுடைய அம்மா மீனா.

“எனக்கு இந்த மாதிரி குழந்தை வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்” என்று கத்தி விட்டு
வேகமாக தன் ரூமிற்கு சென்று கதவை சாத்திக் கொள்கிறாள். அன்றிரவே துயரத்திலும்,
அதிர்ச்சியிலும் அவள் அம்மா மீனா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போகிறாள். சாருவிற்கு
பேரதிர்ச்சி. தன் அக்கா லதாவிடம் இந்த வீட்டில் இருக்க எனக்கு விருப்பமில்லை, ஒன்று இந்த வீட்டை விற்று ஆளுக்குப் பாதியாக எடுத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் வாடகைக்கு விட்டு ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறாள். வீட்டை விற்று ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொள்கிறார்கள். தன்னுடன் வேலை பார்க்கும் பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள் சாரு. பிறகு ஹைதராபாத் மாற்றிச் செல்கிறார்கள்.


சிறிது சிறிதாக சோகம் மறைந்து சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறாள் சாரு.லதாதான் மாதம் இருமுறை அவளுடன் ஃபோனில் பேசுவாள். இவள் அவளுக்கு ஃபோன் செய்து பேச மாட்டாள். ஹைதராபாத்தில் அவளுக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வேலைக்கு செல்லாமல் சாரு வீட்டை பராமரிக்க தொடங்குகிறாள். அக்கம்பக்கம் இருப்பவர்களை பார்த்து தோட்டம் பராமரித்தல், வீட்டு வேலை, பூஜை இவற்றில் நாட்டம் ஏற்படுகிறது. அப்போதுதான் குழந்தை வேண்டுமென்ற ஏக்கம் வருகிறது. 35 வயதாகி விட்டதே என இருவரும் டாக்டரின் உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கின்றனர். பிரசவத்திற்கு துணைக்கு வருகிறேன் என்று லதாவும் கூறினாள். சாருவும் கருவுறுகிறாள். வீடு முழுவதும் குழந்தைகள் சாமான்களை வாங்கி நிரப்புகிறாள். டாக்டர் அறிவுரையைக் கேட்காமல் வெயிலில் அலைந்து தொட்டில் வாங்கி வருகிறாள். இரவில் வலி
எடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். குழந்தை இறந்தே பிறக்கிறது. அப்போதுதான் தன் அம்மாவிடம் குழந்தை வேண்டாம் வேண்டவே வேண்டாம் என்று கத்தியது நினைவுக்கு வருகிறது. “அம்மா” என்று வாய்விட்டு அலறுகிறாள். “ஐயோ கண்ணே, என்னை விட்டுப் போய் விட்டாயா ?” என்று இறந்த குழந்தையை நினைத்து அழுகிறாள். கண்ணீருடன் ஓடி வந்த லதா அவளைத் தடுக்க முயல சாருவின் கணவர் பாஸ்கர் “அவளை அழ விடுங்கள்” என்கிறான். இதோடு கதை முடிகிறது.

இந்தக் கதையை மிகவும் அழகாக தெளிவான நடையில் எளிமையாக வழங்கிய திருமதி கமலா நடராஜன் அவர்களுக்கும் இந்தக் கதையைப் பற்றி பேச வாய்ப்பளித்த அழகிய சிங்கர்
அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.


One Comment on “இழப்பு – கமலா நடராஜன்/பி.ஆர்.கிரிஜா”

  1. யதார்த்தமான சிறுகதை. இந்த காலத்திலும் இப்படி? சாருவின் பெற்றோர் அவளை சரியான முறையில் வளர்க்கவில்லை என்பதே உண்மை.

Comments are closed.