
சமீபத்தில் நான் படித்த புத்தகம் நவீனன் டயரி. நகுலனின் இந்தப் புத்தகத்தைப் பல ஆண்டுகளாகப் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு படிக்காமலேயே வைத்திருந்தேன். சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணத்தின் போதுதான் இது சாத்தியமாயிற்று.
படிக்கத் தொடங்கியவுடன் இந்தப் புத்தகம் சீக்கிரம் முடிந்து விடக் கூடாது என்றும் நினைத்தேன்.
நான்-லீனியர் வகையைச் சேர்ந்த இந்த நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் படிப்பவருக்கு ஏற்படுத்தத் தவறுவதில்லை. இது ஒரு வகையில் மெட்டாபிக்ஷன் வகையைச் சார்ந்தது. நாவலைப் பற்றிய நாவல் எழுதுவது.
நாவல் முழுவதும் நகுலன் தன்னைப் பற்றியே எழுதிக்கொண்டு போகிறார். ஒரு வசதிக்காக நவீனன் என்ற கதாபாத்திரத்தைக் கற்பனையாக உருவாக்குகிறார்.
ஆரம்பத்தில் நவீனன் மரணத்தைத்தான் இந்த நாவல் பேசுகிறது. இது நகுலனுக்கு அறிமுகமே இல்லாத ஒரு நபர் மூலம் நவீனன் மரணம் தெரிய வருகிறது.
இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த புத்தகங்கள் பற்றி என்றெல்லாம் தொடர் நிகழ்ச்சியாக நாவலில் நடைபெறுகிறது.
கற்பனை பாத்திரமான நவீனனுடன் நகுலனுக்கு ஏற்படுகிற உரையாடல் பல பக்கங்களில் விவரிக்கப் படுகிறது.
இந்த நாவலைப் படித்து முடித்த பின் இன்னும் ஒரு முறை படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படாமல் போகாது.
நாவலின் நான்காவது அத்தியாயத்திலிருந்துதான் நவீனன் டயரி தொடங்குகிறது. நவீனன்
டயரியில் இப்படி விவரிக்கப்படுகிறது.
‘வழக்கம்போல் அவன் வாய் முணுமுணுத்தது. அவனுக்கென்ன டயரிகளை இவனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அந்த டயரிகளை ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டான்.
சில பக்கங்கள் ஆங்கிலத்திலும், சில பக்கங்கள் தமிழிலும் எழுதப் பட்டிருந்தன – பல பக்கங்களில் அவன் வாசித்த புத்தகங்களிலிருந்து நகல் செய்யப்பட்ட பகுதிகள். சில பகுதிகளில் தேதிகள் குறிக்கப்பட்டிருந்தன. சில பக்கங்களில் தேதிகள் குறிக்கப்படவில்லை.
இப்படி நவீனன் டயரி எப்படி இருக்கிறது என்பதை விவரித்துக்கொண்டே போகிறார்.
சில பக்கங்களில் அவன் சுசீலாவுக்கு எழுதிய கடிதங்கள். சிலவற்றில் அவள் எழுதிய பதில் கடிதங்கள். டயரி படித்தவுடன் அவன் முதல் அனுபவம் ஒரு குழப்பம் என்று சொன்னால் அது மிகையாகாது.
3.5.1949 ல் எழுதப்பட்ட டயரி குறிப்பில், நவீனன் அவன் அண்ணாவைப் பற்றி எழுதியிருக்கிறான்.
ஆனால் அன்பைக் காசு கொடுத்து வாங்க முடியுமா?
1.1.1949ல் எழுதப்பட்ட டயரி குறிப்பு.
ஆசிரியர் டால்ஸ்டாய் எழுதிய ‘சண்டையும் சமாதானமும்’ என்ற நாவலிலிருந்து ஒரு வரி நினைவுக்கு வருகிறது.
மனிதன், விரிந்து கிடக்கும் எட்டாத ககன வெளியை நோக்கு (பக்.168) கையில் மனிதர்களில் மிகப் பெரியவரும் அவர்களது லட்சியங்களும் சாரமற்றவை என்றுதான் தோன்றுகிறது.
இந்த டயரி குறிப்புகள்1951லிருந்து திடீரென்று ஆகஸ்ட் 1972க்குத் தாவி விடுகிறது.
3.9.72 ல் ஒரு குறிப்பு.
நான் : அம்மா, உன் காக்கை வந்து விட்டது.
அம்மா : 8.30 மணி ஆயிடுத்தோல்லியோ, எனக்கு மருந்து குடிப்பதுபோல் அதுக்குச் சாதம் சாப்பிடணும்.
இதுமாதிரி அம்மாவைப் பற்றிப் பல பக்கங்களில் இந்த டயரி எழுதப்பட்டுக் குறிப்புகள் வந்துள்ளன.
12.02.1973 ல் இப்படி ஒரு குறிப்பு :
“அவர் படிப்பதில்லையா?”
“ஏன்?”
“சில சமயம் நாம் புத்தகங்களைப் பற்றிப் பேசும் பொழுது அவர் முகத்தில் ஒரு சூன்யம்.”
03.08.1973ல்
நேற்று அம்மா பேச்சு வாக்கில் என்னிடம் 35 வருஷமாக இவர் வேலையில்லாமல் இருந்திருக்கிறார். ஒருநாள் சமையல் அறைப் பக்கம் போகாவிட்டால் எனக்கு என்னவோ செய்கிறது.
14.08.1973ல்
ஒரு வரி வருகிறது.
பாடப் பாட ராகம்.
9.7.73ல்
நண்பா
நீ என்னை என்
புத்தகங்களிலிருந்து
பிரிக்க முடியாது
நானே ஒரு புத்தகம்.
22.07.1974 ல்
ஒரு புத்தகத்தில் உள்ளே நுழைவதற்கு எவ்வளவு முறை அதைத் திரும்பப் படிக்க வேண்டியிருக்கிறது. தொடர்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கடைசியில்
இத்துடன்
நவீனன்
டயரி
முடிவுறுகிறது
இந்தப் புத்தகம் முடிவில் நகுலனைப் பற்றி
நகுலனுக்கு வாழ்க்கை இலக்கியம் நினைவும் கனவும் தனித்தனியாக அவருக்குப் பிரிவதில்லை.
ஒரு சோதனை ரீதியாக எழுதப்பட்ட நகுலனின் இந்த நவீனன் டயரி என்ற நாவலை நான் திரும்பத் திரும்பப் படிக்க நினைக்கிறேன்.
இதுவரை தமிழில் சோதனை ரீதியாக நாவலை முதன் முதலாக நகுலன் ஒருவர் தான் எழுதி உள்ளார்.
