கலை : மனதில் தோன்றும் சில குறிப்புகள்/தமிழவன்

கிராமங்களில் பிறந்த என் போன்றோருக்குக் கல்லூரிக்குப் போவதும் தமிழில் பலவற்றையும் எந்த நோக்கமும் இல்லாமல் படிப்பதும் ஒரு சேர நடந்தன. தாய்தந்தையரோ கிராமத்தில் வேறு யாருமோ அதிகமும் வாசிக்கத் தெரியாதவர்கள். பள்ளியில் தமிழ் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். தேர்வில் மார்க் வாங்குவதற்கான வாசிப்பு அது. நாங்களே,


தேர்வுக்குப் பயன்படாதவற்றைச் சொந்தமாய் வாசித்தோம். இந்தச் சொந்த வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது.

தமிழில் வாசிப்பவற்றின் தராதரத்தை மதிப்பீடு செய்ய ஆங்கிலத்தில் வாசித்தோம்.
மார்க்சியம் இளமையிலேயே கவர்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு மார்க்சியத்தைப் புதுப்புது வகைகளில் வாசிக்கும் விதம் என் போன்றோரைக் கவர்ந்தது. தமிழில் மார்க்சியத்தை மதிக்கும் கட்சி மார்க்சியர்கள் இருந்தனர் ; அவர்கள் எங்களைக் கவரவில்லை. அவர்களிடம் பொதுவாசிப்பு உள்ளது, அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் புதுப்புது முறைகளில் மார்க்சியத்தைக் கற்க வரவில்லை. அதரற்கான பல காரணங்களில் ஒரு காரணம், அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர், விலைவாசி உயர்வை எதிர்த்தனர், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு உழைப்பது போன்ற காரியங்களில் இருப்பவர்கள். கட்சியில்
உள்ள சிந்தனைத்துறையில் வேலைசெய்யும் கருத்துக்களத்தின் இருந்த உழைப்பாளிகளும் ஏனோ புது மார்க்சியம் கூறும் விசயங்களில் அக்கறை காட்டவில்லை. நமச்சல் தீர்ப்பதல்ல, மார்க்சியம் வாசிப்பது என்பது. மார்க்சியம் கணித சூத்திரம் அல்ல. மாறும் மனநிலைக்கு ஏற்ப மார்க்சியமும் மாறும்.

நான் இப்படியே ஆங்கிலத்திலும் தமிழிலும் இன்னும் சில மொழிகளிலும் தொடர்ந்து
வாசித்தபோது பெரிய அளவில் மற்ற தமிழ் எழுத்தாளர்களிடமிருந்தும் தமிழ் மொழி
வாசகர்களிடமிருந்தும் மாறுபட்டுவிட்டேன் என்றே நினைத்து வந்தேன். எனினும் நான்
பேசுவதற்கும் கருத்துப்பரிமாறுவதற்கும் ஒரு சிறுகூட்டம் இருந்தது.

தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதோடு, தத்துவ நூல்களும் மிகுந்த
ஆர்வத்தோடு ஆங்கிலத்தில் படித்து வருகிறேன். பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வு
பெற்ற பின்பு முழுநேரமும் இந்த இரண்டு காரியங்களுக்கும் ஒதுக்குகிறேன். சிலர் கதைகள்
மட்டும் எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் படிக்க முடிந்தவர்கள் கதைகளை மட்டும் ஆங்கிலத்தில்
படிப்பதாய் சொல்வார்கள். கதைகளை ஆங்கிலத்தில் படித்தாலும் நான் இலக்கியக்
கோட்பாட்டு நூல்களையும் ஆங்கிலத்தில் படித்து வருகிறேன். அதில் பெரிய கவர்ச்சி
இருப்பது கண்டு பல வேளை யோசித்திருக்கிறேன். புனைகதைகளை வாசிப்பதும், தமிழில் புனிவுகள் புதிதாய் எழுதுவதும் எனக்குப் பிடிக்கிறது. அதுபோல் ஆங்கிலத்தில் திறனாய்வு,


கோட்பாடு போன்றவைகள் என்னைக் கவர்கின்றன. கோட்பாடுகளைப் படிக்கும்போது
தத்துவவாதிகள் பெயர்கள் அடிக்கடி வாசிக்கிறேன். ஹெகல், நீட்சே, இப்படி. இவர்களை மார்க்சியக் கோணத்தில் குறிப்பிடுகிறார்கள் நான் வாசிக்கும் கோட்பாட்டாளர்கள்.
இந்தமாதிரி மனநிலை 1982-இல் நான் எழுதிய அமைப்பியல் சார்ந்த சுமார் 350 பக்க
நூலில் வெளிப்பட்டது. ஆக கடந்த 50 ஆண்டுகளாக படைப்பும் எழுதுகிறேன். ( ஏழு நாவல், அறுபது சிறுகதை). திறனாய்வும் எழுதுகிறேன். என் சில நண்பர்கள் இவை இரண்டையும் தொடர்ந்து படிக்கிறார்கள். எனக்குத் தெரியாத பொது வாசகர்கள் எங்காவது படிக்கலாம். பெரும்பத்திரிகைகளில் வாசகர்கள் சுயநினைவின்றி வாசிப்பார்கள். வாசிக்கிற எழுத்து மேசைமுன்பு இருக்கும் தின்பண்டம் போல அவர்களுக்குத் தெரியாமல் உள்ளே புகுந்துவிடும்.


எலிக்குஞ்சுபோல ‘லபக்’ என்று உள்ளே போய்விடுவதை நல்ல எழுத்து என்பார்கள். ஒரு
விஷயம் சொல்லவேண்டும். என் எழுத்து தின்பண்டம் போன்றதல்ல. தமிழ்ப்பெரும்பத்திரிகைகள் ஒன்றில்கூட நான் எழுதியதில்லை.அவை பாக்கியம் செய்தவை. இப்படி பெரும் பத்திரிகைகளில் எழுதாத ஒரு மரபு தமிழில் உண்டு. நான் அந்த மரபைச்சார்ந்தவன்.

நான் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கற்பனைப் படைப்பை எழுதும் அதே நேரத்தில்
படைப்பு பற்றிய தத்துவக் கருத்தும் சேர்த்து ஏன் படிக்கிறேன் என்று கேட்டுக்கொண்டே
வருகிறேன். சமீபத்தில் நீட்சே ஒரு விஷயம் சொல்வது கவனத்தில் பட்டது. அவர் “கலை எந்த உண்மையையும் விட வாழ்வுக்கு மிகவும் அவசியமானது” (art is worth more than the truth for life) என்று சொல்கிறார். நீட்சே அப்படிச் சொன்னாலும் அவர் நாவல் சிறுகதை எதுவும் எழுத முயற்சி செய்யவில்லை. ஒரு நண்பர் “சொராஸ்திரன் அப்படிச் சொன்னான்” என்ற அவரது நூலை தமிழில் மொழிபெயர்த்தார். “புகழ்பெற்ற” பதிப்பகம் வெளியிட்டது. நான் ஆர்வமாய் படித்துப் பார்த்தேன். (அந்த நண்பருக்கு அது வேண்டாத வேலை என்று பட்டது.) சரி, அதை விடுங்கள். நீட்சே கலை ஏன் மனிதகுலத்துக்கு மிக முக்கியம் என்றார்? உலகம் முழுவதும் நீட்சேயை மதிக்கக்கூடிய படிப்பாளிகள், தத்துவவாதிகள் இருக்கிறார்கள். நீட்சே ஏன் அப்படிச்சொன்னார்?

கணினி படித்தால் பெரிய ஆள் ஆகலாம். பொறியியல் படித்தால் பெரிய ஆள்
ஆகலாம். சம்பாதிக்கலாம். அரசியல்வாதியானால் கோடிக்கணக்கில் வரும். நடிகன்
ஆனாலும் கோடிக்கணக்கில் வரும். பிக்பாஸில் கலந்துக்கொள்ளும் கமலஹாசன் 90
கோடிக்குமேல் வாங்குகிறார் என ஒரு குறிப்புப் பார்த்தேன். பணம் சம்பாதிப்பது பெரியது.
பின் ஏன் நீட்சே அப்படி கலை பெரிது என்றார் ? உலகில் கலை வாழ்க்கையைவிட பெரிது;
அழகியல் வாழ்க்கையை விட உயரியது, மிக உன்னதமானது என யாரும்
சொல்வதில்லையே. பின் ஏன் அரிதாக வாழ்க்கையைப்பார்க்கும் – பிறர் பார்க்காத
முறையில் பர்க்கும் – நீட்சே கற்பனைக்கு உலக வாழ்க்கையைவிட அதிக மதிப்பு
உண்டுஎன்றார்? மனிதன் சிறுவயதில் இருந்து பெரியவனாய் வளர்வது வரை
கலையைமுதன்மைப்படுத்தியே வளர்கிறான் என்று இன்று நாம் ஏற்காத ஒரு சிந்தனையை
அடிப்படையாய் வைத்துச்சிந்திப்பவர். இப்படிச் சொல்வதைத் உலகத்தவர்களாகிய நாம்
ஒத்துக்கொள்ளவேமாட்டோம் அல்லவா? நீட்சே மனத்தை அடிப்படையாய் வைத்த வாழ்வை
நம்புபவர். மனம் கலைபோன்றது தானே.

நாவல் எழுதுகிறவனுக்கு மனம் பிரதானம் என்ற கருத்து முக்கியம்
போலத்தோன்றும்.எனவே தான் மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு உட்கார்ந்து தன் மனத்தில்
பயணம் செய்யும் எழுத்துவேலையில் இன்பம் காண்கிறான்.இப்போது நீட்சே சொன்ன கலை
முக்கியம் என்ற கருத்து எழுத்தாளனுக்கு முக்கியம் என அறிகிறோம். ஆனால்
மற்றவர்களுக்கும் முக்கியமா? எல்லோரும் கலைஞர்களே என்பது நீட்சே போன்றவர்கள்
கருத்து.லேத்தில் இரும்பு அடித்து முரட்டுத்தனமாய் வேலை செய்பவன் காலையில் போகும்
வழியில் மழைபெய்தபின் முளைவிடும் புல்லின் நுனியில் அழகை க்காண்பான். அது

கலைஞனின் மன உணர்வு. இப்படி எல்லா மனிதர்களும் கலைஞனாயும் மனிதனாயும்
இருக்கிறார்கள்.

தமிழில் இலக்கியம் படைப்பவர்கள், தத்துவமோ மார்க்சியமோ படிக்க
மாட்டார்கள். காலையில் எழுந்ததும் சம்மணக்கால் போட்டு பத்திரிகைக்கோ
டி.வி.தொடருக்கோ நெற்றிவியர்வை சிந்த எழுதுவார்கள். வேறு சில நல்ல எழுத்தாளர்களும் கலைக்கு மட்டும் கவனம் வைத்து எழுதினால் போதும் என்பார்கள். அப்படி எழுத காரணம் அவர்கள் கலையின் பக்கம் தாங்கள் இருந்தால்போதும் என எண்ணுகிற அளவு கலையின் உள்ளே ஒரு பகுதி தத்துவம் என நினைப்பதில்லை.மனிதன் மனமும் உள்ளவன், கை, கால்களால் வேலையும் செய்பவன். மனம் கலையோடும் கை,கால்கள் அதுபோல், தத்துவம்,பொருளாதாரத்தோடும் தொட்ர்புடையது.கலை வாழ்வுக்கு மிக அவசியம் என்பது உலகை கலை நிராகரிக்கவேண்டும் என்பது அல்ல.எனவே எனக்குத்தோன்றுவது: கதை எழுதுகிறவர்கள் உலகைப்பற்றியும் அதன் பகுதியாகிய தத்துவம்,பொருளாதாரம்,விஞ்ஞானம் போன்றவற்றையும் மேலும் மேலும் அறிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே. கலையின் மீது இருக்கிற தாகம் உலகத்தின் மீது இருக்கிற தாகம் தான். உலகத்தை நிராகரிப்பது அல்ல்.
உலகம் மீதான ஆழமான தாகம் தான் கலை தோன்றும் ஊற்றுக்கண்.