கொடியது கொடியது இந்த தனிமை கொடியது/பிரேம பிரபா

தனிமையைப் பற்றி உனக்குத் தெரியுமா? என்று அவன் கேட்டான். புருவத்தை கூடிய மட்டும் சுறுக்கி தோள்களை உயர்த்தினேன். என்னை அலட்சியமாக கடந்து போனவனின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன். தனிமையை பற்றி அவனிடம் எனக்குப் பரிச்சயமான மொழியில் கோர்வையாக வார்த்தைகளைத் தேடி விவரிக்க ஆரம்பித்தேன். தனிமைக்கு சுயமாக எந்த வடிவமும் இல்லை. ஒருவரின் பார்வையைப் பொறுத்தே அதன் வடிவங்கள் தீர்மானிக்கப்படுகிறது. சிலருக்கு பஞ்சுப் பொதியலென வெண் மேகத்தில் அமர்ந்து இறக்கைகளை விரித்து உங்களை அப்படியே கருணைப்பார்வையால் ஆறுதல் அளிக்கும் ஒரு அழகிய தேவதை. சிலருக்கு இரண்டாகப் பிளந்த வால் நுனியில் நங்கூரத்தை இணைத்துக்கொண்டு இமைகளை உயர்த்தி தன் ஓரப்பார்வையால் அச்சுறுத்தும் கொடிய அரக்கன். சரிதானே என்று அவனிடம் கேட்டேன். மெலிதாகச் சிரித்துக்கொண்டே அவன் பதில் அளித்தான். தனிமை ஒரு மொழியற்ற மிருகம். அதன் வளைந்த நகங்களின் நுனியில் நிரந்தரமாகத் தீற்றியபடி இருக்கும் உதிரத்தின் கவிச்சை மணம்தான் அதன் வருகைக்கான முன்னுரை. கண்களில் அசுரப்பசியுடன் கடைவாய் வழியாக எச்சில் வழிய நம்மை விழுங்க வரும் போது மிரண்டு எதிர்கொள்ளும் நாம் ஒரு உயிரற்ற வெற்று சதைப்பிண்டமாகத்தான் அதன் கண்களுக்குத் தெரிவோம் என்றான். நடுங்கிக்கொண்டே அவன் பெயரைக் கேட்டேன். எட்டு திசைகளிலும் பட்டு எதிரொலிக்க தனிமை என்றான். அந்த ஒரு நொடியிலேயே அறையெங்கும் பரவியது முதன் முறையாக என் உதிரத்தின் மணம்.