
நேற்று நட்சத்திரம் பார்த்த இடத்தில்
இன்று வானமிருக்கிறது
யாரிடம் சொல்லி எப்போது
விடை பெற்றதோ?
வெட்டப்பட்ட தென்னையோடு
சேர்ந்து விழுந்து கிடக்கும் கூட்டை
வந்து எத்தனை முறை
பார்த்துச் சென்றதோ காகம்
அதன் குஞ்சுகளை
எவ்விடம் சேர்த்திருக்கும்?
ஏந்திக்கொள்ள
ஒரு நெஞ்சமுமில்லாமல்
ஆவியுருக் கொண்டு
அலையும் நினைவுகள்
கடைசியில் எந்த மனதிடமிருந்து
பிரியாவிடை பெற்றுச் சென்றதோ?
நீயோ ஒரு புன்னகையோடு
விடை கொடுக்கச் சொன்னால்
முகமெங்கும்
கண்ணீர் துளிகளை உருட்டுகிறாய்
சருகுகளை கூட
கைகளில் ஏந்திக் கொள்வேன்
ஆனால் சூடான கண்ணீரென்றால்
எப்படி?
தவிர பிரிவு என்பது
வேறிடம் சேர்தல் தானே
உலகத்தில்
