பிகு டான்ஸ்/பி.ஆர்.கிரிஜா

ஏழாம் வகுப்பு “சி” பிரிவு மாணவ மாணவிகளிடம் ஒரே பரபரப்பு. அனிதா டீச்சர் உள்ளே
நுழைந்ததும் “மேடம்” என்று எல்லோரும் அவரைச் சுற்றி நின்று கொண்டனர். அவர் வகுப்பு ஆசிரியை ஆதலால் அவரிடம் கூடுதல் சலுகை. குட் மார்னிங் சொல்லிவிட்டு, என்ன ஒரே பரபரப்பு ? “எனிதிங் ராங் ?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

“இல்ல…. மேடம், போன பீரியட்ல மியூசிக் மேடம் வந்து அடுத்த மாதம் நடக்கவிருக்கும்
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அஸ்ஸாமின் பிகு டான்ஸ் போடப் போறோம். யார் ஜாயின் பண்றீங்க? ன்னு கேட்டுட்டு போனாங்க, அந்த சந்தோஷத்துல தான் நான், நீ என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், அதான்…. என்று இழுத்தாள் வாணி.
அனிதா டீச்சருக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சி.

அவளுக்கு தன் வகுப்பில் நிறைய குழந்தைகள்படிப்பைத் தவிர ஆடல், பாடல், பேச்சுப் போட்டி என்று எல்லாவற்றிலும் ஆர்வமாக பங்கு கொள்வதை நினைத்து எப்போதுமே பெருமை .இப்போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் மீனா டீச்சரிடம் பேசி ஒரு நாலு பேரை நம் வகுப்பிலிருந்து செலக்ட் பண்ணச் சொல்றேன். எல்லா வகுப்பிலுள்ள குழந்தைகளுக்கும் வாய்ப்பு தர வேண்டும்அல்லவா ? என்று இழுத்தாள்.

அப்போதுதான் புரிந்தது நம்மை மாதிரி தானே எல்லா வகுப்புகளிலும் ஆர்வமாக
இருப்பார்கள். மொத்தமே 12 பேர் ஆடக்கூடிய பிகு டான்ஸுக்கு எல்லோரும் போட்டி
போட்டால் எப்படி? யோசிக்க ஆரம்பித்தாள் வாணி. அதற்கு முன் அனிதா டீச்சர் பாடம்
எடுக்க ஆரம்பிக்கவே எல்லோரும் அமைதியானார்கள்.

வாணி தான் லீடர். அவள் சொல்வதை எல்லோரும் கேட்பார்கள். அடுத்த பீரியட் மிஸ்ஸிடம் அனுமதி வாங்கி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டாள். மனம் அலை பாயத் தொடங்கியது. ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக பிகு டான்ஸ்தான். நடுவில் தான் அந்த க்ரீம் ரெட் கலர் புடவையில் அழகாக இடுப்பில் கை வைத்து ஆடுவது போல் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அவள் ஏற்கனவே இந்த பிரத்யேகமான அஸ்ஸாமின் பிகு டான்ஸை பலமுறை யூடியூபில் பார்த்திருக்கிறாள்.

அவர்களின் அங்க அசைவுகள், பாரம்பரியம், உடை உடுத்தும் பாணி எல்லாமே அவள்
தெரிந்து வைத்திருந்தாள். அதில் எப்படியாவது பங்கு கொள்ள வேண்டும் என்று மனது
துடியாய் துடித்தது.

அதற்குள் வகுப்பில் மைக்கில் ஒரு அறிவிப்பு வரவே எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி மேடத்தின் கணீர் குரல். “மை டியர் ஸ்டூடண்ட்ஸ், இந்த வருடம் நடக்கவிருக்கும் ஆண்டு விழா நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் கொண்டாடவிருக்கிறோம். எந்த விதமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகளாகட்டும், அவற்றை எவ்வாறு தேர்வு செய்கிறோமோ அவற்றை குழந்தைகளே முழுக்க முழுக்க பாடி ஆடி கொண்டாட வேண்டும். சிடி, ஒலி நாடாக்கள் அனுமதி இல்லை. முழுக்க முழுக்க உங்கள் அனைவரின் திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சியாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இதைப் பற்றி நான் அனைத்து பெற்றோர்களிடம் பேசி விட்டேன்.

அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார்கள் நீங்கள் எல்லோரும் இப்போதே
தயாராகுங்கள் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்று கூறி முடித்தார்.

2

வாணிக்கு ஒரே குஷி. ஏனென்றால், அவள் வகுப்பில்தான் வாத்தியங்கள் வாசிப்பது,
பாடுவது, ஆடுவது என அனைத்து திறமைகளையும் உள்ளடக்கிய குழந்தைகள் அதிகம்.
அவள் உள்ளத்தில் ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. ஆம், இந்த வருடம் பிகு டான்ஸில் நிறைய குழந்தைகள் நம் வகுப்பிலிருந்துதான் தேர்வு செய்யப்படுவார்கள். இதைப்பற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியை அனிதாவிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, அடுத்த வகுப்பிற்கு தயாரானாள் வாணி.