
பெண் என்பவள் இல்லை என்கிறார் லக்கான். இந்த வாசகம் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது ஆணாதிக்கத்தின் வாசகம் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் லக்கான் இந்த வாசகத்தின் மூலம் என்ன சொல்ல வந்தார் என்பதை எட்கர் ஆலன் போவின் ஒரு கதையின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
லிஜியா என்ற ஒரு கதையில் போ, கதைசொல்லியின் காதலியாக வரும் லிஜியா மிகவும் அறிவுள்ள ஒரு பெண் எனவும் அவள் அறிவைத்தான் அந்தக் கதைசொல்லி விரும்புவதாகவும் வர்ணிக்கிறார். அவள் ஏதோ காரணத்தால் இறந்து போக, அந்தக் கதைசொல்லி ரொவீனா பெருமாட்டியைத் திருமணம் செய்துகொள்கிறான்.
அவள் ஓர் அழகுப் பதுமை. அவளுக்கும் அறிவுக்கும் காததூரம். ஆனால் அவளால் ஜெர்மானிய கட்டிடக்கலைக் கொண்ட வீட்டில் வாழ இயலாமல் போகிறது. அபின் போதையில் இருக்கும் கதைசொல்லிக்கு ரொவீனா பெருமாட்டி தன்னை நேசிக்கவில்லை என்று புரிகிறது. லிஜியா மீண்டும் தன்னிடம் வரவேண்டும் என்று நினைக்கிறான்.
ரொவீனா பெருமாட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அவள் இறந்து போகிறாள். அவளுடைய உடலைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் கதைசொல்லிக்கு அது லிஜியாவின் உடலைப் போல் மாறிவிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் லிஜியா திரும்ப வந்துவிட்டதாக அந்தக் கதைசொல்லி நம்புகிறான்.

இந்தக் கதையில் இரண்டு பெண்கள் குறித்து சொல்லப்படுகிறது. இதில் பெண் பாத்திரங்களைக் கதைசொல்லியின் கண்ணோட்டத்திலிருந்துதான் வாசிக்க முடிகிறது. லிஜியாவும் ரொவீனா பெருமாட்டியும் இரு வேறு பெண்கள் போல் வர்ணிக்கப்படுகிறார்கள். இருவரது எல்லா குணாம்சங்களும் ஆண் கதைசொல்லியின் அபின் போதையிலிருந்து வந்த சிந்தனை மூலமாகத்தான் தெரிய வருகின்றன.
இதன் மூலம் அபின் போதை போன்ற அதிகார, உரிமை கொண்டாடும் சமூகத்தில்-இருபால் உறவை முன் வைத்தச் சமூகத்தில், ஆணைச் சார்ந்த சமூகத்தில் பெண் என்பவள் இருப்பதில்லை என்பதைத்தான் லக்கான் கூறியிருக்கிறார். அதைத்தான் இந்தக் கதை விளக்குகிறது.
