
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிஞர்கள் பாடு பெரும்பாடு தான்
எழுதிக் குவித்ததை என்ன செய்வது
எடைக்குப் போடுவதைத் தவிர!
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
பாரதி காலந்தொட்டே அப்படித் தான்
கவிஞர்கள் வாழ்வில் விடியல் பிறக்காதா
வாழ்வில் வசந்தம் வீசாதா
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
மண்ணும் மொழியும் அவனைக் கைவிட்டதால்
தமிழ்நாடும் மொழியும் எப்படி வாழும்
தாய்மொழிக்கே இங்குத் தலைக்குனிவு!
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
பேனா பிடித்தவர்களெல்லாம் கவிஞன் ஆகிவிட்டால்
கவிதைக்கு எப்படி மதிப்பு இருக்கும்
சுண்டலைச் சுமந்து கொண்டிருக்கும்!
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
அப்புறம் ஏன் புத்தகம் போடுகிறார்கள்
எழுதுபவனுக்கு அச்சில் பார்க்க ஆசை
அங்கீகாரத்துக்கு அலைபவனே கவிஞன்!
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
எழுதுபவன் முட்டாள் படிப்பவன் பைத்தியம்
பதிப்பகங்கள் காசு பார்க்க ஆசைப்படுகின்றன
கவிதையில் குப்பைகள் விற்றுத்தீர்கின்றன!
