கடவுளும் நானும்/பிரேம பிரபா

கடவுளைச் சார்ந்த என் நம்பிக்கைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு படி நிலைகளிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இத்தகைய மாறுதலுக்கு என் புறச் சூழ் நிலைகளும் ஒரு காரணம். சிறுவனாய் இருக்கும் போது பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு பயத்துடன் முதலில் கடவுளை வழிபட ஆரம்பித்தேன். பக்தி சார்ந்த நியாயமான அனைத்து கேள்விகளுக்கும் பாட்டியிடம் பதில் இருந்தது. வாழ்க்கை கற்றுக்கொடுத்த அனுபவங்கள், புராணக் கதைகள் என அவளிடன் கடவுளுக்கான மூலக் கச்சாப் பொருட்கள் ஏராளமாக இருந்தது.
பிறகு பள்ளி நாட்களின் அதிகம் கேள்வி கேட்க, காணாமல் போய் விட்டார் என் கடவுள். கல்லூரிக் காலங்களில் கேள்விகளில் மட்டும் அல்ல, என் பதில்களிலும் என் பக்க நியாயங்களுக்கு எனக்கு மிகவும் உதவியது, பாட்டியின் புராணக் கதைகள்தான். அப்போது என் பாட்டி உயிருடன் இல்லை.
கல்லூரி வாழ்க்கையைக் கடந்து, மேற் படிப்பு படிக்க நினைத்த போதுதான் என்னுடைய சில எதிர்பார்ப்புகள் என்னைக் கைவிட, என் கடவுள் சார்ந்த பரிணாமத்தை எனக்கு நானே மாற்றி புணரமைத்துக் கொண்டேன். இப்போது எனக்கான கடவுள் சார்ந்த விரிவாக்கத்தில் கடவுள், மதம், வழிபாட்டு முறைகள் என்று மூன்றாக அட்டவணைப் படுத்திக் கொண்டேன். கடவுள் ஒரு சக்தி. நம் நம்பிக்கை எனவும் கொள்ளலாம். அடுத்து மதம் ஒரு நிருவனம். வழிபாட்டு முறைகளை ஒரு தேவையில்லாத சடங்காக மனதில் வரித்துக்கொண்டேன். ஆக கடவுளின் இருப்பை ஒரு தற்காலிக நிலைப்பாடாக தீர்மானித்தேன்.
எனக்கு நானே “நான் ஒரு ரேஷனல்” என்ற முத்திரையைக் குத்திக் கொண்டேன். கடவுளின் இருப்பை காணாமற் செய்த நான் அவரின் இருப்பை ஏதோ ஒரு வழியில் இருப்பதாக தீர்மானித்தேன். வாழ்க்கையின் தொடர் தேடல்கள், கடவுளின் இருப்பை ஒவ்வொரு படிநிலைகளிலும் எனக்கு ஊர்ஜிதப் படுத்தியது.
ஆகக் கூடி நான் ஒரு பெரிய பக்திமானாக இல்லாவிட்டாலும், கடவுள் இல்லை என்று கூற முதல் முதலாக தயங்க ஆரம்பித்தேன். இந்த நிலையில்தான் கண்ணை மூடி சிறிது நேரம் பிரார்த்தனை செய்தால் போதும், மற்றபடி எந்த மதத்திலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம், கடவுளை கண்டடைய எந்த வழி முறைகளும் தேவையில்லை, என்ற புது முடிவுகளுக்கு வந்தேன். இந்த நிலையில்தான் கடவுள் ஒரு ஆன்மீக விளக்கமாகவும், வழி முறைகள் ஒரு போலியான மூடப்பழக்கங்கள் என்று முழுவதுமாக நம்ப ஆரம்பித்தேன். கோயிலிற்கு சென்று வழிபடுவதை ஒரு மன சமாதான முயற்சிக்காக ஆரம்பித்து, காலப் போக்கில் தன்னிலை விளக்கம் எதுவும் கொடுக்க முடியாமல் எனக்கு நானே என் நம்பிக்கையில் முழுவதுமாக கரைத்துக் கொண்டேன்.
என் வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள், தோல்விகள், என்ற பல படிநிலைகள் என்னை முழுவதுமாக மாற்றியது. கண்களைக் கட்டிக்கொண்டு பந்தய மைதானத்தின் விளிம்புகளில் ஓடி அதன் வடிவத்தை கண்டறிய, எனக்குக் கிடைக்கிறது ஒவ்வொரு முயற்சியிலும், ஒரு வடிவங்கள். அதுதான் கடவுளா என்பதில் எனக்கு இன்றும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இந்தத் தடுமாற்றத்தின் வெளிப்பாடே என்னுடைய படைப்புகள்.