
‘கட் ..கட்’ ,என்றார் சினிமா இயக்குநர் அவசரமாக. மடியிலிருந்த குழந்தை சிணுங்கியது. குழந்தையை மடியில் வைத்துக் கொண்டிருந்த நடிகை , அவசரம் அவசரமாகப் பக்கத்தில் நின்றிருந்த குழந்தைத் தாயிடம் குழந்தையை ஒப்படைத்தாள்.
குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. சினிமா இயக்குநர் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தார். ‘ ‘பசி..சார்.. பால் கொடுத்தால் சரியாகிடும்..’
தனியாக அழைத்துக்கொண்டு போய் விட்டுத் திரும்பவும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
இப்போது குழந்தை சிரித்தபடி வந்தது.
நடிகை மடியில் உற்சாகமாகத் துள்ளிக் குதித்தது. நடிகை குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள். அடுத்த காட்சிப் படப்பிடிப்புக்கு சினிமா இயக்குநர் அவசரப்பட்டார்.
குழந்தை இப்போது சிணுங்கவில்லை.
:சினிமா இயக்குநர் முகத்தில் மகிழ்ச்சி.
“இது ராசியான குழந்தை. இது நடித்த படங்களிலெல்லாம் நல்ல வசூல்.”
நடிகைக்குக் குழந்தையை திரும்பவும் அந்தப் பெண்ணிடம் கொடுக்க மனசில்லை.
நடிகைக்குக் குழந்தை என்றால் உயிர். நடிகைக்குத் திருமணம் ஆகவில்லை. 40 வயதாகிறது. இன்னும் பலருக்கும் அவள் கனவு கன்னிதான். நடிகையைப் புரிந்துகொள்கிற மாதிரி வரன் கிட்டவில்லை.
குழந்தையின் தாய்க்கு சினிமா இயக்குநர் எப்போதும் ₹ 1000 தான் கொடுப்பார். இந்த முறை 2000 கொடுத்தார். குழந்தையின் தாய்க்கு மகிழ்ச்சி.
நடிகையும் குழந்தைக்கு இன்னொரு முத்தம் கொடுத்துவிட்டு 5000 ரூபாய் கொடுத்தாள். குழந்தையின் தாயிற்கு உற்சாகம்.
” ரொம்ப தாங்க்ஸிம்மா ” என்று நடிகையின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.
“என்னால் இதுமாதிரி குழந்தை பெத்துக்க முடியாது , ” என்றாள் அவள் கண்கள் மினுங்க.
அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஸ்டூடியோ வாசலில் அவள் கணவன் நிற்கக் கூடாதென்று எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டே போனாள். ஆனால் அவள் கணவன் கேட் கிட்டே நின்று கொண்டிருந்தான். பாதிதூரம் கடந்தவள் அவனைப் பார்த்தவுடன் விக்கித்து நின்று விட்டாள்.
