
எனக்கு மிகப்பிடித்த
இனிப்பு வகை
இந்த எறும்புகளுக்கும்
எப்படியோ பிடித்துத்தான்
போய்விடுகிறது–
எப்போதும்.
இனிப்புக் கடலை
மொத்தமாய் அடக்கிய
மிட்டாய் கடைகளுள்
வெற்றுக் கண்களுக்குத்
தென்படா எறும்புகள்
கூட்டமாய் நின்று
ருசிக்கின்றன
என் ஒற்றை ஜாங்கிரியை
எப்படியோ உளவறிந்து கண்டுபிடித்து.
கைபேசி தொடுதிரையில்
சற்றே கவனம் திருப்பியதில்
தட்டிலிரு ஜாங்கிரியை
சுற்றி வளைத்தன எறும்புகள்.
குளத்துத் தாமரை
மகத்துவத்தை
அக்குள தவளைகள் அறிவதில்லை.
எங்கிருந்தோ பறந்துவரும்
வண்டறியும் மலரையும் தேனையும்.
என்
ஒற்றை இனிப்புப் பண்டமும்
அப்படித்தானோ என்னவோ?
உதறியெடுத்து உண்ணும்
இனிப்பார்வத்தை
மொத்தமாய் புறந்தள்ளி
ஒற்றை ஜாங்கிரியை
திளைத்துத் துய்க்கும்
அந்த
எறும்புகளின் ரசனையையும்
கூட்ட ஒற்றுமையின் வலிமையையும்
வியப்பு மேலிட
விழிகள் விரிய
வேடிக்கை பார்த்தபடியே
இருக்கிறேன்
இனிப்பையும் எறும்பையும்.
