
ஒத்தையாய் நிற்குமென்னை ஒருவரும் மதிப்பாரில்லை..
கத்தி நான் அழுதபோதும் எவர் காதிலும் விழுவதில்லை!
சுற்றிலும் ஈக்கள் மொய்க்கும்.. சுண்டெலிகள் லாலி பாடும்.. சுற்றிலும் அருமை நாய்கள் சுகமாக தூக்கம் போடும்.!
அழுகியப் பழத்தின் தோல்கள்.. கசங்கிய மலர்கள் யாவும்.. பழையதோர் துணிகள் சேர்ந்து பார் எனை தேடிச் சேரும்! தெருமுனை நின்றபடியே.. தேடிய குப்பைச் செல்வம்.. அருகிலே நின்று பேச அஞ்சிடும் மாந்தர் நடுவே..
சாக்கடை காவாய் ஓட சற்றும் மன கவலையின்றி .. ஏழைக்கள் மட்டும் என்னை அடுத்துத்தான் குடியிருப்பார்!
கூட்டியும் குவித்தும் குப்பை பெருக்கியும் கொட்டித்தீர்ப்பார்.. நாட்டியம் ஆடும் சேவல் அதிகாலை என்மீதுயேறி கூவியும் படுத்தே கிடப்பார்.. பாட்டில்கள் கொட்டி என்னை குடிகாரன் ஆக்கப் பார்ப்பார்.. நாட்டிலே உள்ளக் குப்பைகளை சுமக்கப் பிறந்தேன்!
இயேசுவும் நானும் ஒன்று.. எவரெவர் பாவச் சுமையை எப்படி அவர் சுமந்தது போல அவரவர் வீட்டு குப்பை அத்தனையும் சுமந்து நான் நிற்பேனய்யா!
வெளியிலே உள்ள அழுக்கை.. வீசிடும் மனிதா உன்னால்.. உன் உள்ளத்தின் குப்பையான அவா வெகுளி கழுசடை எண்ணக் குப்பை துடைத்து நீ.. போடுவாயோ?
காகிதக் குப்பை போல காமத்தை வீசலாமோ? போலியாய் வௌளை யுடைக்குள் பொய் களவு வீசலாமோ.? தாயாக தாங்கிக் கொள்ள தயங்காமல் காத்திருப்பேன்! தெருமுனை எங்கும் நிற்பேன்! என் பெயர் குப்பைத் தொட்டி!
