பழிக் கொன்றனன்/முபீன்

கொடுங்கோல் நிறுத்தி தன் இனம் உய்க்க தன் சுயம் காத்து
பேரவா பெருக்கி போகம் காண கவர்ந்தனன் ஆநிரை

கண்டவள் மயங்கி விழிநீர் வழிய பகர்ந்தனள் மலரிடம்
கொலைத் தொழில் கொண்டவன் முறித்தனன் கிளை

பார்த்தனள் துன்பம் ஆற்றாது மொழிந்தனள் கிளியிடம்
அழிவின் மகனவன் கூர் அம்பை எய்து கொன்றனன் பறவை

நோக்கினள் சுமை தீர்க்க செப்பினள் மழையிடம்
எரிக்கும் இனத்தினன் அனல் வீச்சு பரப்பி பாழ் செய்த நிலம்

அறிந்தனள் துயர் ஒழிக்க இயம்பினள் குன்றிடம்
உடைபடும் திறத்தினன் நொறுக்கினன் உயர் மலை

தெரிவினள் பழி போக்க கூறினள் அரவிடம்
நச்சின் இயல்பினன் விடம் உமிழ்ந்து கொன்றனன் பாம்பை

தெரிந்தனள் முறையிடச் சென்றனள் தன் ஐயிடம்
வலியதில் வலியவன் உடைவாள் வீசி பறித்தனன் அவர் உயிரை

வெகுண்டனள் தன் வலி போக்க உரைத்தனள் அணங்கிடம்
உரத்தினன் நகைத்து மந்திரத்தில் மயக்கினன் அருவை

திறத்தினள் உபாயம் தகைத்து நவின்றனள் ஆடியிடம்
மதியினன் பிம்பம் கண்டு வாளால் துணிந்தனன் தன்தலை