1986-ம் வருடம். ஒரு மே மாதத்தின் மத்தியான நேரம்/ராஜேஷ்குமார்

1986-ம் வருடம். ஒரு மே மாதத்தின் மத்தியான நேரம். நான் ஒரு மணி நேர பகல் தூக்கத்தை முடித்துக் கொண்டு மாலைமதிக்காக நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த நாவலின் தலைப்பு ‘அன்பு கிடைக்குமா அன்பு?’

வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை வாசலிலிருந்து எழுந்த அழைப்பு மணிச் சத்தம் கலைத்தது. எழுந்து போய்த் திறந்தேன்.

வெளியே நின்றிருந்த நபரைப் பார்த்ததும் எனக்குள் பிரமிப்பு கலந்த மகிழ்ச்சி. என் வீட்டுக்கு வந்தது வேறு யாருமில்லை. இதயம் பேசுகிறது மணியன் அவர்கள். இரட்டை நாடி சரீரத்தோடு இருந்த மணியன் அவர்களுக்கு, என் வீட்டின் குறுகலான மாடிப்படிகள் ஏறி வந்ததில் மூச்சு வாங்கியது. வியர்த்துக் கொட்டியது. நான் கைகளைக் குவித்து ‘வணக்கம்’ சொன்னேன்.
“எப்படி இருக்கீங்க ராஜேஷ் குமார்?” என்னுடைய தோளில் கைப் போட்டபடியே உள்ளே வந்தார் மணியன்.

“நல்லா இருக்கேன் ஸார்” என்று சொல்லிக் கொண்டே ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டேன். அவர் உட்கார்ந்தார்.

முகத்தை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே சொன்னார், “மொதல்ல ஒரு டம்ளர் சிறுவாணித் தண்ணி கொடுங்க…அது உள்ளே போனாதான் ஆசுவாசமா இருக்கும்.”

கொண்டு வந்து கொடுத்தேன். பருகி முடித்தவர் வீட்டை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கேட்டார்.

“வீட்ல யாரும் இல்லையா?”

“எல்லாரும் ஒரு உறவினர் வீட்டு ஃபங்ஷனுக்குப் போயிருக்காங்க ஸார். சாயந்தரம் அஞ்சு மணிக்கு மேல்தான் வருவாங்க. எனக்கு கொஞ்சம் எழுத்து வேலை இருக்கிறதால வீட்லயே இருந்துட்டேன்”

“நிறைய எழுதறீங்க போலிருக்கு?”

“வர்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறேன் ஸார்”

“நானும் உங்க நாவல்களில் ஒரு சிலதைப் படிச்சேன். வித்தியாசமான கதைக் களத்தோடு ஒரு புதிய நடையில் எழுதறீங்க. வாசகர்களும் ரசிச்சுப் படிக்கிறாங்க.”

“உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஸார்”

“நானும் என்னோட மனைவியும் இப்போ ஊட்டிக்குப் போய்க்கிட்டிருக்கோம். கோயமுத்தூரை க்ராஸ் பண்ணும்போது திடீர்னு உங்க ஞாபகம். ஒரு பத்து நிமிஷம் பார்த்துப் பேசிட்டுப் போலாமேன்னு வந்தேன்”

“ஸார் ! உங்க மாதிரியான எழுத்து மேதைகள் என்னோட வீட்டுக்கு வர்றதை ஒரு பெரிய பாக்கியமாய் நினைக்கிறேன் ஸார். உங்களுடைய பயணக் கட்டுரைகளுக்கு நான் பரம ரசிகன்.”

“ரொம்ப சந்தோஷம்” என்றவர், என் வீட்டை மறுபடியும் பார்வையால் அலசிவிட்டு குரலைத் தாழ்த்தினார்.

“நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க தப்பா நினைக்கக் கூடாது”

“நீங்க எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்.. சொல்லுங்க ஸார்”

“இது உங்க சொந்த வீடா… வாடகை வீடா..?”

“வாடகை வீடு ஸார்”

“ரொம்ப சின்னதாய் இருக்கே… இந்த சின்ன வீட்ல எப்படி நீங்க உங்க மனைவி, ரெண்டு குழந்தைங்க… அப்புறம் உங்க அப்பா அம்மா எல்லார்க்கும் போதுமானதாய் இருக்கும்?”

“மேலயும் ஒரு ரூம் இருக்கு ஸார்..”

“இருந்தாலும் அசௌகரியம்தான். நீங்க இதைவிடக் கொஞ்சம் பெரிய வீடாய் பார்த்தா என்ன?”

“இந்த ஏரியாவில் கொஞ்சம் பெரிய வீடு கிடைப்பது கஷ்டம் ஸார்”

“முயற்சி பண்ணுங்க கிடைக்கும். நான் ஏன் இதைச் சொல்றேன்னா, இப்போ எழுத்துலகில் உங்க பேர் ரொம்பவும் பிரபலமாய் இருக்கு. உங்களைப் பார்க்க நிறையப் பேர் வருவாங்க. அப்படி அவங்க வரும்போது, வர்றவங்களை ரிஸீவ் பண்ணி உட்கார வைக்க ஒரு வரவேற்பறை வேண்டாமா? அதுவுமில்லாம, இந்த வீட்டு மாடிப்படிகள் வேற ரொம்ப குறுகலாய் இருக்கு. என்னை மாதிரி உடம்பிருக்கிற ஆட்கள் ஏறிவர ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருக்கும். நான் சொன்னதை தப்பா எடுத்துக்க வேண்டாம். உங்க நன்மைக்குதான் சொன்னேன். அடுத்த தடவை நான் உங்களைப் பார்க்கும்போது உங்க ஃபேமிலி ஒரு பெரிய வீட்ல இருக்கணும்.”

“கண்டிப்பாய் ஸார்”

“சரி நான் எதுக்காக உங்களைப் பார்க்க வந்தேன்னு நீங்க கேட்கவே இல்லையே?”

“இப்ப சொல்லுங்க ஸார்”

“இதயம் பேசுகிறது’ பத்திரிகை சார்பாய் மணியன் என்ற ஒரு மாத நாவல் வந்துக்கிட்டிருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்”

“நல்லாவே தெரியும் ஸார்”

“அடுத்த மாத மணியன் மாத இதழுக்கு உங்க நாவல் வேணும்”

“ஸார்… அது வந்து…”

“என்ன… சொல்லுங்க”

“நான் இப்போ வேலைக்குப் போயிட்டு, ஓய்வு நேரத்துல ஏற்கெனவே ஒப்புக் கொண்ட பத்திரிகைகளுக்கும் எழுதவே நேரம் சரியா இருக்கு ஸார். அதனால் எனக்கு ஒரு ரெண்டு மாசம் டைம் வேணும். நீங்க நாவல் எழுத வாய்ப்புத் தர்றீங்கங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக நான் அவசர அவசரமாய் எழுத விரும்பல. மணியன் மாத இதழில் வரக்கூடிய என்னுடைய முதல் நாவல் மணியான நாவலாய் இருக்கணும்னு நான் விரும்புகிறேன்”.

நான் இப்படிச் சொன்னதும் மணியன் அவர்கள் ஒரு பெரிய புன்னகையோடு என் தோள் மீது கையை வைத்தார்.

“குட்…! ஒரு எழுத்தாளர் இப்படித்தான் இருக்கணும். இப்படித்தான் நிதானமாய் ப்ளான் பண்ணனும். வர்ற வாய்ப்புகளையெல்லாம் ஒரு எழுத்தாளர் அவசர அவசரமாய் பணம் சம்பாதிக்கிறதுக்காக பயன்படுத்திக்கிட்டா, அந்த எழுத்தாளர் ஃபீல்டிலிருந்து வெகு சீக்கிரத்திலேயே காணாமல் போயிடுவார். நீங்க அந்தத் தப்பைப் பண்ண விரும்பாதது பெருமைக்குரிய விஷயம். உங்க விருப்பப்படியே ரெண்டு மாசம் கழிச்சு எனக்கு நாவல் கொடுங்க. தலைப்பை மட்டும் இப்ப சொல்லுங்க. முன்கூட்டியே விளம்பரம் பண்ண வசதியா இருக்கும்.”

அவர் அப்படிச் சொன்னது எனக்கு ஒரு பெரிய வியப்பாய் இருந்தது. மிகப் பெரிய எழுத்தாளரும் உலகத்தின் தலை சிறந்த பயணக்கட்டுரை ஆசிரியருமான மணியன் அவர்கள், ஒரு ஆரம்பகால எழுத்தாளனான என்னிடம் இவ்வளவு எளிமையாய் பேசிப் பழகியதை இன்றளவும் என்னால் மறக்க முடியாத அதிசயங்களில் ஒன்றாகவே நினைத்து வருகிறேன். அவருடைய எளிமையைப் பார்த்த உடனேயே என்னுடைய மனதுக்குள் ஒரு தலைப்புத் தோன்றியது. ஆனால் அந்தத் தலைப்பை உடனடியாய்ச் சொல்லாமல், அவரிடம் கேட்டேன்.

“ஸார்! நீங்க அமெரிக்காவும் கனடாவுக்கும் நடுவில் இருக்கிற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு எத்தனை தடவை போயிருப்பீங்க?”

“நான்கு தடவை போயிருக்கேன். இப்ப எதுக்காக நயாகரா நீர்வீழ்ச்சிப் பத்திக் கேக்கறீங்க?”

“ஒண்ணுமில்ல ஸார்! கொட்டுகிற அந்த நீர்வீழ்ச்சிக்குப் பக்கத்தில் போய் நின்னா காதையே செவிடாக்குற மாதிரி பேரிறைச்சல் கேட்குமாமே, உண்மையா?”

“உண்மைதான்! அந்த அருவி கொட்ற சத்தத்துல நாம எது பேசினாலும் பக்கத்திலிருக்கிற நபருக்குக் கேட்காது.”

“நயாகரா அருவி கொட்டும்போது சத்தமே இல்லாம இருந்தா எப்படி ஸார் இருக்கும்?”

“அப்படி இருக்க வாய்ப்பில்லையே?”

“ஒருவேளை இருந்தா?”

“அது சத்தமில்லாத நயாகரா”.

“நான் எழுதப் போகிற மணியன் மாத நாவலோட தலைப்பு அதுதான் ஸார்”

மணியன் அவர்கள் திகைக்க, நான் ஒரு சின்னப் புன்னகையோடு சொன்னேன், ‘சத்தமில்லாத நயாகரா’.

“ஃபெண்டாஸ்டிக்” என்று சொன்னவர், என்னை எழுந்து நிற்கச் சொல்லி கட்டிப் பிடித்துக் கொண்டார்.

“இது உங்களுக்கு திடீர்னு தோணின தலைப்பா.. இல்லை ஏற்கெனவே யோசிச்சு வச்சிருந்த தலைப்பா?”

“இன்னிக்கு இப்போ இங்கே உங்களைப் பார்த்ததும் எனக்குத் தோணின தலைப்பு ஸார்”

“அது எப்படித் தோணும்?”

“ஸார் ! உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் அறியப்பட்ட மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் நீங்க. ஆனா வளர்ந்துட்டு வர்ற ஒரு அறிமுக எழுத்தாளனை தேடி வந்து பேசியது எவ்வளவு பெரிய விஷயம். ஆர்ப்பாட்டமில்லாத இந்தப் பண்புதான் எனக்குள்ளே அந்த சத்தமில்லாத தலைப்பு தோன்றக் காரணம் ஸார்!”

அடுத்து அவர் வாய்விட்டுச் சிரித்தார்.

“திறமையைத் தேடிப் போய் பாராட்டறதுதான் ஓர் உண்மையான படைப்பாளியின் கடமை. அந்தக் கடமையைத்தான் நான் இப்போ பண்ணிட்டிருக்கேன். அப்போ நான் வரட்டுமா ராஜேஷ்குமார்?”

மணியன் புறப்படத் தயாரானார். நான் தவிப்போடு சொன்னேன். “ஸார்! வீட்ல யாரும் இல்லை. உங்களுக்கு ஒரு காப்பியோ டீயோகூட கொடுத்து உபசரிக்க முடியலை!”

“அதுதான் சிறுவாணித் தண்ணீர் கொடுத்தீங்களே.. அதைவிட டீயோ காப்பியோ பெரிசு கிடையாது.”

மணியன் சர்வசாதாரணமாய் சொல்லிவிட்டு மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்தார். நான் பின் தொடர்ந்து வாசல் வரைக்கும் போய் அவரை வழியனுப்பிவிட்டு வந்தேன்.

தொடர்ந்து நான் என்னுடைய எழுத்துப் பணியைக் கவனிக்க முயன்றபோது என்னால் முடியவில்லை. பிரமிப்பு என்னை அடித்துத் துவைத்துக் காயப் போட்டிருந்தது.

‘வந்து போனது மணியன் ஸார்தானா?’

‘இல்லை வேறு யாராவதா?’

எந்த விதமான ஒரு ஈகோவும் பார்க்காமல் எழுத்துலகின் ஆரம்பப் படிகளில் நின்று கொண்டிருந்த என்னை வீடு தேடி வந்து நாவல் எழுதும் வாய்ப்பைக் கொடுத்த அவருக்கு மிகச் சிறந்த நாவல் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு நானே சத்தியம் செய்துக் கொண்டேன்.

சரியாக இரண்டு மாதங்கள் கழித்து மணியன் மாத இதழுக்கு ‘சத்தமில்லாத நயாகரா’ நாவலை எழுதிக் கொடுத்தேன்.

அந்த நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவே, தொடர்ந்து மணியன் மாத இதழ்களிலும், இதயம் பேசுகிறது இதழ்களிலும் சமூக, க்ரைம் நாவலல்களையும் எழுதினேன். அதில் குறிப்பிடத்தக்கவை:

  1. தப்புத்தப்பாய் ஒரு கொலை
  2. ஒற்றை மேகம்
  3. ஒரு சின்ன மிஸ் டெத்
  4. சின்ன தப்பு, பெரிய தப்பு
  5. ரெட் சல்யூட்
  • ராஜேஷ்குமார்

நன்றி: ஒன்இந்தியா தமிழ்