பரணியின் செய்தியில் க.நா.சுப்ரமண்யம்

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமணியம் தஞ்சைப்பகுதியில் 31/01/1912 ல் பிறந்தவர்.
மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.
உலகத்தின் தலைசிறந்த இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்.

இளமையிலேயே தாயை இழந்த க.நா.சு தந்தையின் அன்னையின் பாதுகாப்பில் வளர்ந்தார். சுவாமிமலை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் பள்ளிப்படிப்பையும் கல்லூரிப் படிப்பை திருச்சியிலும் நிறைவு செய்து பட்டம் பெற்றார்.

இவரது மனைவியின் பெயர் ராஜி. இவர்களுக்குப் பிறந்தவர் ஒரே மகள்.

க.நா.சு ஒரு வகையில் நாடோடி வாழ்க்கையைத் தான் வாழ்ந்துள்ளார். உணவு விடுதிகளிலேயே பெரும்பாலும் உணவை எடுத்துக் கொள்வார். எங்கு சென்றாலும் தட்டச்சு இயந்திரத்துடன் தான் செல்வார்.

இதழியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததால் மணிக்கொடி, எழுத்து,
இதழ்களில் எழுதத் துவங்கினார்.

க.நா.சு நடத்திய இதழ்கள் மூன்று. அவை
சூறாவளி இது பொது வாசிப்புக்குரிய வார இதழ். இரண்டாவது சந்திரோதயம் இதில் பொதுவாசிப்புக்குரியவைகளும் இலக்கியப் படைப்புகளும் உள்ளடக்கியது. அடுத்தது இலக்கிய வட்டம் எல்லாவகையும்கொண்ட சிற்றிதழ்.

நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான சிந்தனைப்போக்கு க.நா.சுப்ரமணியம் மரபு எனப்படுகிறது.

இலக்கியப் பரிந்துரைகள் , பட்டியல்கள் வழியாக ரசனை சார்ந்து இலக்கியப் படைப்புகளை அடையாளம் காட்டியவர் க.நா.சு.

க.நா.சு ஒரு தனி மனித இயக்கமாகவே வாழ்ந்திருக்கிறார். புதுக்கவிதையின் அழகியல் வடிவத்தை அறிமுகம் செய்தார். தமிழ் இலக்கிய உலகம் கவனிக்கப்பட வேண்டிய படைப்புகளை மொழியாக்கம் செய்தார்.

க.நா.சு வின் அழகியல் பார்வை குறிப்பிடத்தக்கதாகும்.

க.நா.சு. மத நம்பிக்கை அற்றவர். ஆலய வழிபாடுகள் சடங்குகள் எதையும் அவர் செய்ததில்லை என்று அவரது மருமகன் பாரதிமணி சொல்லியுள்ளார். இவர் அறியப்பட்ட நடிகரும் எழுத்தாளருமாவார்.

க.நா.சு தன் வாழ்நாளில் எங்கும் வேலை செய்தது இல்லை. தந்தையின் செல்வமும் தான் நடத்திய இதழ்களின் மூலம் கிடைக்கும் வரவுமே அவருக்கு வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது.

தொடக்கத்தில் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளில் எழுதியுள்ளார். அதே காலத்தில் வெளிவந்த காந்தி இதழை வாங்கிப்படித்த அவருக்கு அதிலிருந்த வத்தலக்குண்டு பி.எஸ் ராமையா எழுதிய வார்ப்படம் என்ற கதை கண்டு தாமும் தமிழில் எழுத ஆர்வம் கொண்டே ஆத்ம சமர்ப்பணம் என்று கதை எழுதி மணிக்கொடி இதழை அறிந்து அதன் ஆசிரியரைப்பார்த்து கொடுத்ததால் 1955ல் பிரசுரமானது. இதுவே இவரது முதல் கதை.

இவர் நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள்,
நாடகங்கள், கட்டுரைகள் மொழி பெயர்ப்புகள் என எழுதிக் குவித்துள்ளார்.

தினமும் எழுத வேண்டும் என்பதை நெறியாகக்கொண்டு வாழ்ந்தவர் க.நா.சு. தனது வாழ்நாளான 76 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் எழுத்திற்காகவே செலவிட்டுள்ளார். கணக்கு சரிவரத் தெரியாவிட்டாலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளது உண்மையாகிறது.

இவரது படைப்புகளில் பொய்த்தேவு, ஒரு நாள் இரண்டும் முதன்மையானதாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகின்றன.

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகள் அவரின் நவீன இலக்கியத்தைப் பற்றிக் காட்டுவதாக அமைந்துள்ளது.. இலக்கியக் கடிதச்சுற்று நடத்தினார்.ஊர்ஊராகச் சென்று இளம் படைப்பாளிகளைச் சந்தித்தார்.விமர்சனங்களை எழுதினார்.

லா.ச. ராமாமிர்தம் தி.ஜானகி ராமன் கு. அழகர்சாமி *ஈழப் படைப்பாளி இலங்கையர்கோன் போன்றவர்களை கவனப்படுத்தியதில் க.நா.ச வின் பங்கே அதிகம்.

இலக்கியத்திற்கு பெருந்திரளோ அதிகாரமோ புகழோ தேவையில்லை. அர்ப்பணிப்பும் நுண்ணுணர்வும் உள்ள சிறு வட்டம் போதும் என்றுரைத்தவர், எழுந்து விட்ட வணிகக் கேளிக்கை எழுத்துக்கும், அரசியல் சார்ந்த எழுத்துக்கும் எதிராக நவீன இலக்கியத்தின் அழகியலையும் நுண்ணுணர்வையும் முன் வைத்துப் போராடியவர் என்பதே உண்மை.

தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையை, போக்கை தீர்மானித்த ஆளுமையாக பாரதிக்கு அடுத்தது க.நா.சு தான் என்பது வரலாற்று உண்மையாகும்.

இவருடைய எழுத்துக்களுக்கு எதிராக எத்தனையோ விமர்சனங்கள் வந்த போதும் தன் நிலையை தலை நிமிர்ந்து எடுத்துச் சென்றவர் க.நா.சு.

இவரது படைப்புகள் 2004இல் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இவரது * இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் சாகித்திய அகாதெமி விருது 1986ல் கிடைத்தது.*

*கோதை சிரித்தாள் என்ற சிறுகதைக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது.

குமரன் ஆசான் விருதும் பெற்றுள்ள க.நா.சு, 18/01/1988ல் காலமானார்.

எழுத்திற்காகவே தன்னைக் கரைத்துக் கொண்ட க.நா.சு வை மனம் நினைத்து அவர் பதிப்பையும் கொஞ்சம் அறிவோமே.