
கால சுப்ரமணியம்
“நாரத ராமாயணம்” (புதிய பதிப்பு) அனுப்பியதற்கு நன்றி.
புத்தகம் நேர்த்தியான தோற்றத்தில் இருக்கிறது. ஆனால் லேஅவுட்டில் நிறையக் குறைபாடுகள் உள்ளன. சுவர்கள் சிவராமன் முன்னுரையின் முதல் வரியே பிழையாகியுள்ளது. உங்கள் உழைப்பு புரிகிறது. ஆனால் அவசரமாக ஏராளமான வேலைகளை ஆர்வத்துடன் இழுத்துப் போட்டுச் செய்வதால் ஏற்படும் குறை.
சொற்களுக்கு இடையில் உள்ள ஸ்பேஸ் நிறைய இடத்தில் குறைபட்டுள்ளது. க்ரியாவுக்குப் பிறகு யாரும் எடிடிங் நேர்த்தியில் கவனம் செலுத்துவதே இல்லை. (அடையாளம் பதிப்பகம் ஓரளவு தான்). காலச்சுவடு, இப்போது அழகாக ஏராளமான புத்தகங்களைக் கொண்டுவரும் ஜீரோடிகிரி எல்லாவற்றிலும் இந்தப் பிரச்சனை உண்டு),
நான் என்னுடைய புத்தகங்களை நானே டைப்செய்து புரூப் திருத்தி லேஅவுட் செய்து அதை Pdf ஆக்கி பின்னட்டைக் குறிப்பும் எழுதிக் கொடுத்து (முடிந்தால் அட்டைப்படத்துக்கான சில சித்திரங்கள் ஒளிப்படங்களையும் தந்து) விடுவேன். மணிகண்டன் அடவிமுரளி, நீங்கள் போன்றோர் இப்போது நிறையச் செய்கிறீர்கள்.
இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுக்கலாம். சிவராமன் முன்னுரையில் ஒன்றுமே இல்லை. ஜமாலன் பின்நவீனத்துவ நோக்கில் நா.ரா. பற்றி எழுதிய கட்டுரையைப் பார்க்கவில்லையா?
அங்கதசேனனை அங்கதபாலன் என்று புபி குறிப்பிட்டது கவனக்குறைவால் அல்ல. அங்கதன் என்ற பாலகன் என்ற பொருளில். வால்மீகி கம்பனில் அங்கதன் என்பது மட்டுமே அவன் பெயர். பதிப்பகப் பிழையைத் திருத்தலாம்.
எழுத்தாளர் காரணத்தோடு கூடப் பிழை செய்திருப்பார்கள். அந்த இடத்தில் (Sic) என்று போடுவார்கள் ஆங்கிலத்தில் எடிட்டர்கள். Sic என்ற தலைப்பில் தனது எடிட்டர் வாழ்கை அநுபவங்களை ஒரு பெயர்பெற்ற பதிப்பகத்தின் பெயர்வாங்கிய எடிட்டர் பெண்மணி (பெயர் மறந்துவிட்டது) நூலாகவே எழுதியிருக்கிறார்.
ஆனால் ஏராளமான பழைய நூல்களைத் தேடித்தேடிப் பதிப்பித்து வருவதும் தினம் ஒரு இதழாக “எழுத்து“ 119 இதழ்களையும் கொண்டுவந்துகொண்டிருக்கும் பணியும் அசுரத்தனமானவை. அவசியமானது.
எழுத்து நேர்த்தி, எழுத்துகளுக்கிடையில் சொற்களுக்கிடையில் வரிகளுக்கிடையில் ஏன் பத்திகளுக்கிடையில் உள்ள ஸ்பேஸ், சரியான இடத்தில் நிறுத்தக்குறிகள், ஒரு எழுத்து கூடப் பிழையின்மை, சந்திப்பிழை, இலக்கண, தகவல் பிழைகள் சரிபார்க்கும் எடிட்டர்கள் தமிழில் அரிதானவர்கள்தான்.
எழுத்தாளர்கள் எதுபற்றியும் கவலைப்படத் தெரியாதவர்கள்.ஏதும் குறைகூறும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. இன்னும் நேர்த்தி கூடினால் நன்றாக இருக்குமே என்றுதான்.
அடையாளத்தில் பக்தவச்சல பாரதி புத்தகங்களோ காலச்சுவடில் நோம்சாம்ஸ்கியை எழுதிய சு.இராசாராம், சலபதி போன்றோர் புத்தகங்களில் உள்ள நேர்த்தி அவைகளின் பிற பதிப்புகளில் இருப்பதில்லை. ஏனெனில் அச்சிடல்/இலக்கணம் தெரிந்த அவர்களே அக்கறையுடன் மேற்பார்ப்பதால்தான் என்று நினைக்கிறேன்.
ஆங்கில நூல் பதிப்புகளில் புலமை உள்ளவர்களுக்கே இது சாத்தியம். இன்றும் அச்சிடல் ஆரம்பித்த ஜெர்மனுக்குச் சென்றுதான் பல நூல்கள் சரியாக அச்சாகி வருகிறதாம்,
ஓஷோவின் நூல்கள் ஜெர்மனியில் தான் அச்சாகின்றன என்ற தகவலின் அடிப்படையில் இவ்வாறு சொல்கிறேன். தவறாகவும் இருக்கலாம்.
அதுசரி. செல்லப்பா – ( : என்று குறியிட்டு ஃ குறிக்கு பதிலாகப் போடுவார்). ஆரம்பத்தில் ஒவ்வொரு இதழிலும் தான் பயன்படுத்தும் எழுத்துக் குறிகளை், முன்னிதழ் பிழைகளைப் பற்றி ஒரு கட்டம்கட்டி தகவல் தெரிவித்திருப்பார்.
எழுத்தாளர்கள் சந்தி போட்டாலும் போடாவிட்டாலும் செல்லப்பா கட்டாயம் பெரும்பாலும் சந்தி இல்லாமல்தான் அச்சிடுவார். நான் பிரமிளின் எழுத்து கட்டுரைகளை நூலாக்கும் போது ஒவ்வொரு வரிக்கும் பல சந்திகளை இடவேண்டியும் நிறுத்தக்குறிகளை மாற்றவேண்டியும் இருந்தது.
நீங்கள் இப்போது வெளியிட்டுவரும் எழுத்து மின்நூல் இதழ்களில் எப்பாடு படுகிறீர்களோ தெரியவில்லை. நான் இப்போது பதிப்பிக்கும் பழைய பிரதிகளில் மர்ரே ராஜம் சங்க இலக்கியங்களுக்குச் சந்தி பிரித்த மாதிரி வசன இலக்கியங்களுக்கும் சந்தி பிரித்தே வெளியிடுகிறேன்.
இலக்கணப்படி சேர்ந்து வர வேண்டிய சொற்களைக் கூட அச்சு அழகுக்காகவும் வாசிக்கும் எளிமைக்காகவும் பிரித்தே போடுவேன். சீர்திருத்த எழுத்துக்கு மாற்றுவதுபோல் சிலசமயம் தேவையற்ற ‘க்ஷ’ எழுத்தை ‘ட்ச’ என்று (உச்சரிப்பு மாறாது) திருத்துவேன். எட்டுச்சுவடியில் சாசனங்களில் எழுதும் முறை மாறி அச்சுப்புத்தகத்தில் புதிய இலக்கணம் வந்தது. இன்றைய டிஜிடல் அச்சுப் பண்பாட்டில் மேலும் புதியவகை இலக்கணங்கள் படைக்கவேண்டியது அவசியம். நான் இலக்கணவாதியல்ல மொழியியல்வாதி.
