அம்பையின் பழைய முகநூல் பதிவு

ரகசியமாக சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பி முதுகலை வகுப்பில் இடமும் கிடைத்தாயிற்று. அப்பா அப்போது கோட்டயத்தில் இருந்தார். வந்தவுடன் பெங்களூரை விட்டு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். முகத்தைத் தொங்கப்போட்டபடி என் அறையில் அமர்ந்திருந்தேன். அம்மா உள்ளே வந்து, “சென்னை போவது உன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு நினைக்கிறியா?” என்றாள். ஆமாம் என்று தலையை ஆட்டினேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. நேராக வங்கிக்குப் போனாள். தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றி அடகு வைத்துப் பணம் வாங்கினாள். கடைக்குப் போய் சின்ன சின்ன பூக்கள் போட்ட நாலு கடாவ் பருத்திப் புடவைகள் வாங்கினாள். எம். ஏ படிக்கப் போகும் பெண் தாவணி போட முடியாது இல்லையா? ரவிக்கைத் துண்டுகள், உள் பாவாடைக்கான துணி (அப்போது தயார் உள்பாவாடைகள் கிடையாது) வாங்கினாள். ஒரு பெட்டி, தட்டு, இன்னும் சில அத்தியாவசியமான சாமான்களை வாங்கினாள். வீட்டுக்கு வந்து தையல் மிஷினில் ரவிக்கைகளையும், உள்பாவாடைகளையும் தைக்க ஆரம்பித்தாள். மறு நாள் இரவு சென்னை கிளம்பினோம். சென்ட்ரலில் இறங்கி பார்க் ஸ்டேஷன் போய் மின் வண்டியில் ஏறினோம். தாம்பரத்தை வண்டி நெருங்கும்போது என் செவியருகில் குனிந்து “லக்ஷ்மியின் கனவெல்லாம் நனவாகப் போகிறது” என்றாள். என் மனத்தில் என்றும் உறைந்து இருக்கும் கணம் அது.

இன்று என் அம்மா அலமேலு இருந்திருந்தால் அவளுக்கு நூறு வயது ஆகியிருக்கும். காலையில் எழுந்ததும் அவள் நினைவாகவே இருக்கிறது.

One Comment on “அம்பையின் பழைய முகநூல் பதிவு”

Comments are closed.