
உன்
விரலிடுக்கில் வழியும்
தொடுக்கும் கலைக்கேங்கி
காத்திருக்கிறது
கூடை நிறைய
வண்ணப் பூக்கள்!
மஞ்சளா! சிவப்பா!
எந்த இரு நிறப் பூக்களை
முதலில் இணைக்கப் போகிறது
உன் விரல்கள்!
ஆவலுடன் காண
மனதின் நுணியில்
வீற்றிருந்தது ஒரு தவம்!
மெல்ல நகரும்
மேகத்திரைகளில்
தூரிகையின்றி
நீ வரைந்து செல்லும்
உருவக் கலவையினூடே
என் முகமும்
உன் முகமும்
ஒளிந்து மறைந்து
நீளும் வினாடிகளில்
பயணம் கொள்கிறது
ஒரு மின்மினி!
அது தவத்தின் ஒளி!
தவத்தின் ஒளி
தன் ஆகர்ஷன வெளியில்
ஸ்வீகரித்து ஈர்க்கிறது
நேசப் புற்றரையில் ஒளிரும்
பனித்துளியின்
ரகசியங்களை!
பனித்துளிகள்
ஆதவன் கிரணங்களில்
கரைந்து போவதற்குள்
உன் தொடுக்கும் கலையைத்
தொடங்கிவிடு!
இல்லையெனில்
பூக்களின் வண்ணத்தை
கிரணங்கள் தின்றுவிடும்!
