நோய்களின் ஊற்றுக்கண்/அபிலாஷ் சந்திரன்

முன்பு நாம் காலையுணவாக ஊறப்போட்ட பழைய சோற்றையே தயிருடன் உண்டோம். என்னுடைய அப்பா தன் இளமைக்காலத்தில் டிபன் எதையும் சாப்பிட்டதில்லை, இட்லி, தோசை என்பவை தீபாவளியின் போது சுடுபவை என்று சொல்லியது நினைவுள்ளது. அதன் பிறகு ஸ்டைலான காலை உணவுகள் அப்படியே பொங்கல், பூரி என நகர்ந்து பிரெட், கெலாக்ஸ் என்று மேலும் மோசமாகி விட்டன. என்னுடைய மாணவர்களுக்கு பிடித்த காலை உணவு பன் சமோஸா அல்லது பப்ஸ். விளைவு என்னவென்றால் இன்றைய பதின்வயதினருக்கு விதவிதமாக நோய்கள் வருகின்றன. ஒரு தம்பியின் மூக்கில் ரத்தம் வருகிறது என்று கழிப்பறைக்கு ஓடினார். நான் அவரை அழைத்து விசாரித்தேன். அவர் தனக்கு நுரையீரலில் பிரச்சினை, அது ஏதோ ஒரு ஒவ்வாமையால் ஏற்பட்டது என்றார். ஓட்டலில் ஏதோ ஒரு உணவை உண்ட போது ஏற்பட்ட ஒவ்வாமை மூச்சுத்திணறலிலும் மூக்கில் ரத்தம் ஒழுகுவதிலும் கொண்டுவிட்டதாகவும், மாதத்திற்கு ஒருமுறை ஆஸ்பத்திரிக்கு சென்று நுரையீரலில் 10 ஊசிகள் போட்டுக் கொள்வதாகவும் சொன்னார். அதே போல பல்வேறு நோய்த்தொற்றுகளால் அவதிப்படுகிறவர்கள், ஒவ்வாமை காரணமாக தூங்க முடியாத அளவுக்கு நமைச்சல் ஏற்பட்டு அதற்காக ஏகப்பட்ட மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், 12 வயதிலேயே நீரிழிவு வந்தவர்கள், மன அழுத்தத்திற்கு சிகிச்சையில் இருப்பவர்கள் என ஏகப்பட்ட பதின்வயதினரை நான் தினமும் இந்த நகரத்தில் பார்க்கிறேன். எனக்கு பல சமயங்களில் நான் இருப்பது ஒரு திறந்தவெளி மருத்துவமனையோ எனத் தோன்றுமளவுக்கு இளைஞர்கள் நோய்களை சுமந்தலைகிறார்கள்.

ஆச்சரியமாக, நான் ஊரில் கல்லூரியில் படித்த போது என் சகமாணவர்களில் ஒருவர் கூட ஒருமுறை கூட மருத்துவமனை பக்கம் எட்டிப் போய் பார்த்ததில்லை. அன்று என் ஊரில் மருத்துவமனையே இல்லை. ஜுரம் வந்தால் தக்கலையில் உள்ள ஒரே ஒரு தனியார் கிளினிக்குக்கு போவார்கள். அங்கும் குறைவானவர்களே இருப்பார்கள். அவர்களுக்கும் அந்த டாக்டர் ஒரே ரோஸ் மருந்தையே கொடுப்பார். என் அப்பாவுக்கு கடைசி காலம் வரை ஜுரமோ சளியோ வந்து நான் பார்த்ததில்லை. இன்று ஊரிலும் நிலைமை மாறிவிட்டது. இத்தனைக்கும் அன்று என் வயது இளைஞர்கள் தம் ஆரோக்கியத்துக்கு என தனியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு இப்படியான பன் சமோசாக்கள், பப்ஸ்கள் காலை உணவாக இல்லை. இரவானால் பிரைட் ரைஸ், பிரியாணி தின்ன கையில் பணமில்லை. முழுக்க முழுக்க வீட்டில் கிடைக்கும் சாப்பாடையே நம்பியிருந்தார்கள். என்று நாம் வெளியே சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றே நோய்களின் நடமாடும் கூடாரம் ஆகிவிட்டோம். யாராவது இந்த ஓட்டல்கள், துரித உணவுகள், கடைகளில் தொங்க விடப்படும் பாக்கெட் உணவுகளை ஒழிப்பதற்கு ஒரு இயக்கத்தை எடுத்து நடத்தினால் அது நம் மக்களின் ஆயுட காலத்தை 20 ஆண்டுகள் அதிகரிக்க உதவும். மது ஒழிப்பை விட நமக்கு உணவுக்கடைகள், துரித உணவுக் கடைகள், பாக்கெட் உணவு விற்பனையின் ஒழிப்பே தேவை. சாராய வியாபாரிகளை விட உணவு வியாபாரிகளே அதிக ஆபத்தானவர்கள், பெரிய கொலைகாரர்கள். ஏனென்றால் சிறுகுழந்தை முதல் வளர்ந்தவர்கள் வரை தவறாமல் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு தம் ஆயுளைக் குறைத்து அதிக வியாதிகளால் துன்புறுகிறார்கள். மதுவருந்தி அவ்வாறு வாழ்க்கையை தொலைக்கிறவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. வியாபாரத்தை பெருக்குவதற்காக உலகம் முழுக்க அரசாங்கங்கள் மக்களின் ஆயுளை ஏலம் விட்டுக்கொண்டிருக்கின்றன. போதை மருந்து வியாபாரிகளை விட, அணு குண்டு, வெடிகுண்டு, துப்பாக்கி உற்பத்தியாளர்களை விட மனித சமூகத்தின் முதன்மை விரோதிகள் உணவு சந்தையாளர்களே.

ஏனென்றால் அவர்களே பரவலாக மக்களை பாதிக்கிறார்கள். அவர்களே விஷத்தை சிறுக சிறுக மக்களுக்கு ஊட்டுகிறார்கள். முழுக்க முழுக்க ஆரோக்கியத்துக்கு கேடான உணவுகளை தம் லாபத்துக்காக மக்களை சாப்பிட வைக்கிறார்கள். அவர்கள் வந்த பின்னரே மக்கள் அதிக நோய்களாலும் மனப்பிரச்சினைகளாலும் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். மாரடைப்பால் இளமையில் மரிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
நாம் இந்த உணவு வியாபாரிகள் எனும் மரண வியாபாரிகளையே முதலில் எதிர்க்க வேண்டும்.

(முகநூலில் அபிலாஷ் 05.05.2023 அன்று எழுதியது)