நடைபாதை வியாபாரியும் கார்ல் மார்க்ஸ் எலக்ட்ரானிக்ஸும்/ரமேஷ் கண்ணன்

என் வாழ்வின் மூலதனம்

அப்பா விரித்த சாக்கின் முன்புறத்தைச் சுருட்டி விட்டிருப்பார் அது மொந்தையாக அணைகட்டியதைப் போலிருக்கும்.நின்று அமர்ந்து பார்ப்பவர்களின் கால்தூசியை ஒரளவு தடுப்பது தான்.பார்த்துப் பார்த்து செய்வார்.இவருக்கு ஏன் வெற்றி கைகொள்ளவில்லை.ஆச்சரியம் தான்.

ஒருவரின் வெற்றியை , வாழ்வை பணம்தானே பெரும்பாலும் தீர்மானிக்கிறது.ஆனால் திறமையும் பொருளீட்டுவதும் கணித சூத்திரம் போல நேரிணையாக அமைவதில்லை.

எனக்கு சந்திரபாபுவின் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அப்பா முன்வந்து நிற்பார்.சைக்கிளின் பின்பகுதி கேரியர் பெரியதாக இருக்கும்.அதிலிருக்கும் பையை எடுப்பார்.நான் அருகே சென்று நிற்பேன்.அவராக எவ்வளவு எடையாக இருந்தாலும் தூக்கி வைப்பார்.பெட்ஷீட்டுகளில் சுற்றியிருந்த படங்களை எடுத்து வெளியே வைக்கத் துவங்குவார்.அதைப் பரப்பி வைப்பதில் அழகும் முறைமையும் உண்டு.

கார்ல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் கோசிமின் ஜோதிபாசு பி.ராமமூர்த்தி ஈ எம் எஸ் ஈ கே நாயனார் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மந்திரிசபை படங்கள்.சேகுவேராவெல்லாம் அப்போதைக்கு வரவில்லை.

இந்தியாவில் தாரளமயமாக்கலுக்கு பின்போ அ சோவியத் யூனியன் பிளவிற்குப் பின்பும் தான் காஸ்டிரோ சே படங்கள் பிரதிநிதித்துவம் அடைந்தன போலும்.

ஷா பாய் தான் அந்தக் காது நீண்ட துணிப்பைகளைத் தைத்துக் கொடுத்தார்.ஒருமுறை கூட பயணங்களில் அது பிழை செய்யவில்லை.

இன்னோரு காரணம் அப்பா அந்தப் பை சுமக்கக்கூடிய அளவைக் கடைசிவரை சரியாக கணித்திருந்தார்.

பேரணியாக நடந்து வந்துதான் பொதுக்கூட்ட மேடைக்கு தோழர்கள் வருவார்கள்.ஆள் எண்ணிக்கை அதிகமிருந்தால் பேரணி துவங்குமிடத்தில் சிறுவியாபாரம் பார்க்கலாம் தான்.

வெயிலடிக்கும் இப்படியான பொழுதுகளில் கர்சீப் நல்ல சேல்ஸ் ஆகும். புளோட்டிங் மக்கள் என்பதால் திட்டமாகச் சொல்ல முடியாது.எனவே அதனை தவிர்த்துவிடுவார்.

படங்களைப் பரப்பியவுடன் எல்லாம் வண்ணப்படங்கள் வேறு அந்த இடம் மிடுக்காகி விடும்.என்னை அழைத்து நடுமையத்தில் அமரச்சொல்வார்.

பின்பு ஒவ்வொரு கோணங்களிலிருந்தும் தனது கடையைப் பார்த்து ரசிப்பார்.இதற்கிடையே இரண்டு மூன்றுபேர் வணக்கம் தோழர்.

யாரு பையனா என விசாரிக்கையில் எனக்கும் பூரிக்கும் அப்பாவுக்கு ஜாஸ்தி தான்.சரி பெரிய படம் அஞ்சு ரூபாய் சிறுசு இரண்டு ரூபாய் யாராவது எடுத்தா பேசிகிட்டுயிரு தோ நூல்கண்டு வாங்கிட்டு வந்துடுறேன்னு ஓடுவார்.

எனக்கு அவர் வருவதற்குள் ஒரு வியாபாரம் பாத்துடனும்னு ஆசையா இருக்கும்.ஒவ்வொரு படங்களும் அதற்கென உறையில் இருக்கும்.படத்தின் முழு ஈர்ப்பு வாய்க்காது.கூட்டம் கூடத்துவங்கியவுடன் தான் அப்பா வெளியே எடுத்து வைக்கச்சொல்வார்.

அன்னைக்கு இரண்டு பேர் எல்லாப்படத்திலயும் ஒன்னுனொனன்னு இரண்டு செட்டு எவ்வளவு பானாங்க.நான் கரெக்டா சொன்னேன் அதுல குறைக்கச்சொன்னாங்க.நான் மாட்டேன்னுட்டேன்.அப்பா வந்தாரு ஒரே சத்தம் ஆசை இருக்கனும் தொழிலில் வெளிகாட்டக்கூடாது.அடிச்சு குறைச்சி கேப்பாங்க.கொஞ்சம் விட்டேத்தியா இருக்கனும்.நாம ஏற்கனவே குறைஞ்ச விலையில் தான் விக்கிறோம் மனசில வைச்சிக்கோன்னாரு.

கூட்டம் வந்தவுடன் அப்பா நடுவில உக்கார நான் எடுத்து எடுத்து குடுக்க ஆரம்பிச்சேன்.டி.எம்.கோர்ட் பக்கத்தில் கூட்டம்.ஆலுக்காஸ் வர்ற வரை அதுராசியில்லாத தெரு வியாபாரத்திற்கு இப்ப போத்தீஸ் வந்து மதுரையின் அடையாளமானது வேறுகதை.

இதே டி.எம்.கோர்ட் அருகே ஒரு போராட்டத்தில் பேசினேன்.எனக்கு அடுத்து ஹென்றி திபங்கே பேசினார்.எனக்கு நாலு நல்ல கல்லெடுத்தது ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஓரளவு நல்ல வியாபாரம்.அப்பாவுக்கு சந்தோஷம் மகன் ராசின்னு வீட்டில் சொல்லி கண்கலங்குவார்ன்னு தெரியும்.புரோட்டா சால்னா ஆம்லேட் சாப்பிட்டுட்டு வீட்டிற்குத் திரும்பினோம்.இதுவும் சேல்ஸ் நடக்கும்போது அம்பது ரூபாய் கொடுத்து டீ மிச்சர் சாப்பிட்டு வான்னு கொடுக்குறது எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.

அடுத்து பம்பாய் செல்கையில் வியாபாரத்தில் பாடல் கேசட்டையும் சேர்த்து விரிவாக்கினார்.பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்.இரண்டு தொகுப்புகள்.

கார்ல் மார்க்ஸ் எலக்ட்ரானிக்ஸ்ன்னு பெயர் வைச்சார்.ஒரு கேசட் ஐம்பது ரூபாய். வீட்டில் அதன் மாஸ்டர் கேசட்டுகள் ரொம்ப வருஷமா இருந்தன.

கார்ல் மார்க்ஸின் புகழ் ஓங்குக