திருவட்டாறு ஆதிகேசவன் திரு அனந்தனுக்கு மூத்தவர்/லக்ஷ்மி மணிவண்ணன்

ஆதிகேசவன்,அனந்தன் இருவரும் நம்மாழ்வாரால் பாடல் பெற்றவர்கள்.இவர் ஆதிகேசவன். அவரை அனந்தனை நோக்கி மேற்கு முகமாக திரும்பியிருக்கிறார். அவர் கிழக்கு முகமாக இவரை நோக்கி இருக்கிறார்.திரு அனந்த பத்பநாபனை காண வேண்டும் எனில் ஆதிகேசவனின் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும் என்று ஒரு உள்ளூர் நம்பிக்கை

ஆதிகேசவனின் ஒருபுறம் தர்மசாஸ்தா,மறுபுறம் கிருஷ்ணன் என அமைந்த ஆலயம் இது.ஏகதேசம் திருவனந்தபுரத்தில் இதே அமைப்புதான்.அங்கேயும் ஒரு புறம் கிருஷ்ணனும் மறுபுறம் சாஸ்தாவும் என அமையப் பெற்றிருக்கிறார்கள்.மலைநாட்டு வைணவப் பதிகளில் இந்த இரண்டும் பேராலயங்கள்.இதனுடன் சேர்த்து திருப்பதிசாரம் என மூன்றும் அருகருகே உள்ளவை.

இவ்வாலயம் அநேக பூத கணங்களால் சூழப்பட்டது.பெருமாளுக்கு ஒன்றுமில்லையானால் கூட பூத கணங்களுக்கு வைப்புச் சோறும் வெள்ளமும் இட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.பூவள்ளி சொரிய வேண்டும்.கேரள நாட்டின் பண்பாட்டை ஒட்டி திருப்பதிசாரம் தவிர்த்து இவ்வாலயங்களில் தாந்த்ரிக் பூஜை முறைகளே நடைபெறுகின்றன.தாந்த்ரிக் பூஜைகள் செய்கைகளால் ஆனவை.பார்ப்பதற்கு அழகானவை.களியூட்டுபவை.தமிழ் நாட்டில் பொதுவாக ஆகம பூஜை முறையை பின்பற்றுகிறோம்.

ஜெயமோகன் இந்த தலம் பற்றி நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாக எழுதியிருப்பவர்.ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவர் நம்மாழ்வார் .இப்புண்ணிய திருத்தலத்தை “வளமிக்க வட்டாறு “என மங்களாசாசனம் செய்துள்ளார்.ஜெயமோகன் கதைகளாக இந்த ஆலயம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.அவருக்கு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஆலயம் ஒரு படிமம்.விஷ்ணுபுரம் நாவல் கூட இந்த படிமத்திலிருந்து எழுந்து உருவானது ஆகும்.அவர் பிறந்ததும் திருவட்டாறு க்கு அருகாமையில் திருவரம்பு என்னும் சிற்றூரே.

இந்த கோயில் கருவறைக்குள் பெருமாள் அனந்த சயனத்தில் படுத்திருக்கிறார்.கரிய திருமேனி.அனந்தன் ஜொலிப்பவர் எனில் இவர் கரிய மாணிக்கம்.இருளுக்குள் துலங்கும் ஆனை போன்ற உருவம்.முதலில் நுழைந்ததும் திருப்பாதங்களே தரிசனமாகும்.இறுதியில் முகம் .ஆழ்ந்த புன்முறுவலுடன் தியானிக்கும் முகம்,கருவறையில் உள்ள சுவர்களில் தேவர்கள் இருக்கிறார்கள்.

ஜெயமோகன் ஒரு கதையில் படுத்திருக்கும் பெருமாளுக்குக் கீழே இரண்டு கேசிகள் படுத்திருப்பதாக எழுதியிருக்கிறார்.அரக்கர்கள் அவர்கள்.பெருமாள் அவர்களை ஒடுக்கி அவர்கள் மீது இந்த ஆலயத்தில் படுத்திருக்கிறார்.பெருமாள் எழுந்துவிடுவார் எனில் உடன் தானே இந்த கேசிகளும் எழுந்து விடுவார்கள்.கேசம் என்றால் முடி.இந்த கேசிகள் முடியால் நிறைந்தவர்கள்.இந்த படிமம் ஆச்சரியமாக இருக்கிறது.மனதுக்கு நெருக்கமான படிமமாக.சதா சுதாரித்துக் கொண்டு இருக்காவிடில் நம் எல்லோரிலும் கூட அதன் அடிப்பாகம் எழுந்து விடும்.அது ஆக்ரோஷத்தாலும் காமத்தாலும் ஆனது.அடியாழம் எல்லோரிலும் வேர்கள் நிறைந்திருக்கிறது

இந்த ஆலயம் ஒரு மேட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது.பரளியாறும் கோதையாறும் சுற்றி ஓடுகின்றன.பரளியாறு வட்டாறு என்றும் அழைக்கப்படுகிறது.இது போல மேட்டில் உள்ள தென்தமிழ் நாட்டு வைணவ ஆலயங்களில் ஒன்று என திருக்குறுங்குடி ஆலயத்தையும் சொல்லலாம்.அதுவும் மேடை மீது அமைந்துள்ளது.

திருவட்டாறு ஆதி கேசவன் ஆலய முகப்பின் வலது பக்கத்தில் , இந்த ஆலயத்தை ஒட்டி சிறிய நரசிம்மர் கோவில் இருக்கிறது .நாகலிங்க மரங்கள் நிறைந்த கோவில் அது.நாகலிங்க பூக்களுக்கும் அதன் நறுமணத்துக்கும் விஷேச தன்மை உண்டு.பூமியின் பாதாள லோகத்தில் இருந்து வெளியே வந்து பெரிய மரத்தில் நின்று பூக்கும் பூ அது.அதனாலேயே அதற்கு கொஞ்சம் அச்சமூட்டும் தன்மை உண்டு

ஆதிகேசவன் பெரிய வடிவமாக காட்சி தரும் ஆலயத்திற்கு வெளியே,அதற்கு மிகவும் அருகாமையில் மிக மிகச் சிறிய நரசிம்மர்.உடன் தானே முருகனும் அன்னபூரணியும் அமைந்துள்ளார்கள்.இது கேரள நாட்டுக்கு சொந்தமானது.ஆதிகேசவனைக் கண்டவர்கள் இவர்களையும் காண்பது நன்று.ஒன்று அளபெரியது,மற்றொன்று மிகச் சிறியது

திருவட்டாறு ஊர் தோண்டத் தோண்ட கேசம் போல வேர்கள் திரளும் ஊர்.வேர்கள் பூமி முழுதும் நிரம்பிய ஊர்.எந்த மரத்தினுடையவை,எந்த மரபினுடையவை ,எந்த ஆழத்தினுடையவை என்பதெல்லாம் அறிய முடியாதவை அந்த வேர்கள்.அதன் மேலே பெருமாள் படுத்திருக்கிறார் என்பதே அந்த குறியீடு.

நம் ஒவ்வொருவரிலும் கூட எந்த மரத்தினுடையவை,எந்த காலத்தினுடையவை,எந்த ஆழத்தைச் சேர்ந்தவை என்பதை அறிய முடியாத வேர்கள் உண்டு.அதன் மேலே ஏறிப் படுக்க தியான நிலையில் ஒரு பெருமாளை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.தொல்குடி மன ஆழ்த்தின் மேலே ஆதிகேசவன் ஏறிப் படுத்துக் கொண்டால் அகம் தேவாமிர்தம் ஆகிவிடும்

இந்த ஆலயத்தில் பெருமாள் பால் பாயாசம் எடுத்துக் கொள்கிறார்.அது அந்த தேவாமிர்தம் அன்றி வேறில்லை

நான் ஆதிகேசவனை நோக்கி சுமார் பத்தாண்டுகளாக சென்று கொண்டிருக்கிறேன்.நான் முழுதுமே வேரால் நிறைந்து இருந்தவன்.அவருடைய அழைப்பு முதலில் எனக்கு என்னுடைய பால்ய கால நண்பன் ஒருவன் மூலமாக வந்தது.அவர் ஒவ்வொரு மாதமும் அவரை காண வரக் கூடியவர்.அவர் போகலாம் என்று அழைத்தார்.அதன் பின்னர் தொடர்ந்து செல்கிறேன்.அவர் அழைப்பார்.யார் மூலமாகவேனும் அந்த அழைப்பு வரும் .செல்லுவேன்.வேராக இருந்த என் மனம் மேலே இப்போது அவர் ஏறிப் படுத்திருக்கிறார்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித் திருக்காப்பு

-( பெரியாழ்வார் )

2 Comments on “திருவட்டாறு ஆதிகேசவன் திரு அனந்தனுக்கு மூத்தவர்/லக்ஷ்மி மணிவண்ணன்”

  1. அழகு சித்திரம். தரிசனம் செய்ய உந்தும் பதிவு. முந்தைய தங்கள் முகநூல் பதிவுகளின் வழி
    திருவட்டாறு கோயில் பற்றி தெரிந்துகொண்டேன். உங்களின் மொழியில் சொன்னால் ‘அதையே அழைப்பாக ஏற்று’ ஒருமுறை தரிசனம் செய்தேன் ஆதிகேசவனை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

Comments are closed.