மற்றமையான பெண்ணின் சுயபிரதிமை-லூச் இரிகரை/முபீன்

உடற்கூறு மாதிரி குறித்த அறிவியல் ஆய்வுகள் மனித மறு உற்பத்தி சார்ந்த உறுப்புகளைக் கொண்டு பாலியல் ரீதியாக மனிதனைப் பிரித்தன. ஆனால் இரு பால் உடற்கூறுகள் வளராத நிலையில் இரு பாலினங்களிலும் காணப்படுகின்றன என்றும் அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் ஒரு மனிதன் பெண்ணாகவும் ஆணாகவும் உடல் ரீதியாக இருக்கும் உயிரியாகக் கருதப்படவேண்டும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. எனவே உடற்கூறு அறிவியலைக் கொண்டு பெண்மையும் ஆண்மையும் தீர்மானிக்கப்படுவதில்லை.

அப்படியென்றால் உளவியல்தான் அந்தத் தீர்மானத்தைச் செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உடற்கூறு பிளவு அல்லது உடற்கூறின் மூலம் ஆணாகவோ பெண்ணாகவோ உணர்தல் என்பது உளவியலில் ஆதிக்கம் செலுத்துவதில்லை என்பதும் அறிவியல் ஆய்வுதான் கூறுகிறது. இதன் மூலம் ஆண் வலிமை மிக்கவனாகவும் பெண் பலவீனமாகவும் எப்படி கட்டமைக்கப்படுகிறார்கள் என்ற அடுத்த கேள்வி எழுகிறது. விலங்கியலில் பெண் விலங்கு சில சமயங்களில் அதிக பலத்துடன் இருக்கிறது. எனவே அந்த உடற்கூறும் மனித பரிணாமத்தை விளக்காது.

ஆண் மேலாதிக்கம் செய்பவனாகவும் பெண் ஒடுக்கப்படுபவளாகவும் உருவாகியிருக்கும் இந்தச் சொல்லாடலின் வரலாறு உயிரியலிலும் இல்லை, உளவியலிலும் இல்லை. கருப்பை, நிலம், தொழிற்சாலை, வங்கி என்ற அணிக்கோவை, முதலீடு என்ற விதையைப் பெற்று முளைக்க வைத்து, வளர்த்து, தொடர் உற்பத்தி செய்யும் எந்திரத்தில் ஒன்றாக, பெண்ணை முதலாளித்துவ சமூகத்தின் மதிப்புகள் உருமாற்றியிருக்கின்றன. அதுதான் பெண்மையின் குணாம்சங்களை நிர்ணயிக்கின்றன. அவைதான் பெண்ணுக்கான சட்டக வரைவுகளை உருவாக்குகின்றன. அதில் பெண், பெண்மையைக் கொண்டவளாகிறாள். ஆண், ஆண்மையைக் கொண்டவனாகிறான்.

One Comment on “மற்றமையான பெண்ணின் சுயபிரதிமை-லூச் இரிகரை/முபீன்”

Comments are closed.