மேற்கத்திய நாடுகளில்…./ லதா

மேற்கத்திய நாடுகளில் பாசம் இல்லை, பந்தம் இல்லை, ஒட்டுதல் இல்லை, உறவுப் பிணைப்புகளில்லை, இந்தியாவைப்போல் அன்பான குடும்பங்களில்லை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்கிறோம் நாம். என் பதின்ம வயதுகளிலிருந்தே ஆங்கில நாவல்கள் நிறைய படித்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ என்னால் அந்த பிதற்றல்களையெல்லாம் ஏற்கவே முடிந்ததில்லை. சமீபகாலமாக நிறைய ஆங்கிலப்படங்களை பார்க்கிறேன். இவையும் என் நம்பிக்கையை கூடுதல் தான் ஆக்கியிருக்கின்றன !

பல வருடங்கள் முதன்முதலில் ஏற்பட்ட காதலுடன் வாழ்ந்தவர்கள் கதைகளை படித்திருக்கிறேன். படுத்த படுக்கையில் கிடக்கும், இல்லை அல்ஜீமர் நோய் தாக்கியிருக்கும் இணையரை குழந்தைப்போல் பார்த்துக்கொள்ளும் காதலை படித்திருக்கிறேன்.

மூன்று குழந்தைகளை கணவனின் கண்கானிப்பில் விட்டு படிக்கச் செல்லும் மனைவி திடீரென திரும்பி வராமல் போக, அந்த குழந்தைகளுடன் எத்தனை போராடினாலும் அவர்கள் தான் வாழ்வில் முக்கியமென அவர்கள் ஏறகாத தன் புதிய காதலை ஒதுக்கிவிட்டு குழந்தைகள் சந்தோஷத்திற்காக வாழும் ஒரு தந்தையின் கதையை படித்திருக்கிறேன்.

எதோ ஒரு வேகத்தில் இன்னொருத்தருடன் உடலுறவு வைத்துக் கொண்டு குற்ற உணர்வுடன் வீடு திரும்பும் இணையரை, விடு நீ என்னிடம் திரும்பிவந்ததே போதும் என ஏற்றுக்கொள்ளும் காதலை சில படங்களில் பார்த்தேன்.

மகள் ட்ரக் அடிக்டாக ஆனதினால் தன் பேரனை தன்னுடன் தான் கஷ்டப்பட்டு வளர்த்து அளிக்கும் பாட்டிகள் உள்ளனர். அதே அம்மாவை கடைசிவரை போராடி அவளை சரிசெய்யும் பிள்ளைகள் உள்ளனர்.

விவாகரத்தான ஒரு மனிதனை காதலித்துவிட்டு அவன் குழந்தைகள் தன்னை ஏற்பதற்காக படாதபாடுபட்டு, அவமானங்கள் ஏற்று வெற்றி காணும் காதலியை பார்த்திருக்கிறேன்.

முதல் மனைவியை மூன்றே வருடங்களில் விவாகரத்து செய்து, பிறகு இன்னொரு திருமணம் புரிந்து அவளுடன் 30 வருடங்களாக அத்தனை காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் (தன் முதல் திருமணத்தில் பிறந்த மகளையும் அவர்களே வளர்த்து) மனிதனை நான் நேரிலேயே சந்தித்திருக்கிறேன்.

பிள்ளைகள் படிப்பை பற்றி அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்.

உலகெங்கும் மனிதர்கள் தான். எல்லோருக்கும் உணர்வுகள் உண்டுதான். நாம் அவர்களை தூற்றும் ஒரே காரணம் அவர்கள் செக்ஸ் என்பதை இயல்பாக கடக்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஒரு பெண் செக்ஸே அறிந்திருக்க கூடாது என்று நினைப்பதில்லை. 18/19 வயதில் பிள்ளைகளுக்கு மற்றவர் மேல் ஈர்ப்பு வரவில்லை என்றால் தான் கவலை கொள்கின்றார்கள். இயற்கை உந்துதல்களை இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் அவர்கள் யாருடன் போகிறார்களோ அவர்கள் சரியில்லை என்று தோன்றும் போது தன் கவலையை பகிர்கிறார்கள். வீட்டு வேலையில், குழந்தை வளர்ப்பில் இருவரும் பங்கெடுக்கிறார்கள்.

ஆனால் என்று பிடித்தம் விட்டுப் போகிறதோ அன்று உண்மையை சொல்லி விலகிவிடுகிறார்கள். நம் சமூகம் போல் அடுத்தவர் பேச்சுக்கு பயந்து பொய்யாக சேர்ந்து வாழ்வதில்லை. விவாகரத்து அங்கேயும் பிள்ளைகளை பாதிக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரியவைக்கிறார்கள். குழந்தைகள் இங்கும் அங்குமாக வளர்கிறார்கள்.

அங்கும் சில பிரச்சினைகள் இருக்கலாம். மனிதர்கள் இருக்கும் இடத்தில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக ஒட்டுமொத்தமாக மேற்கத்திய கலாச்சாரம் எதோ மோசமான கலாச்சாரம் போலவும் நம் கலாச்சாரமே சிறந்தது எனவும் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமேயில்லை.

முடிந்தவரை பெருவாரியான மக்கள் அங்கு தனக்கு உண்மையாக வாழ்கிறார்கள். நாம் சமூகத்தின் இலக்கணங்களுக்கு உண்மையாக இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டு நமக்கு பொய்யாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முக்கியமாக அங்கு குழந்தைகளுக்கு நிறைய உரிமைகளும் சுதந்திரங்களும் உள்ளது. அவரவர் பாதையை அவரவர் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் தவறும்போது தாங்கிப்பிடிக்கும் உறவுகளும் உண்டு.

திருமணத்திற்கு முன்பே அவர்களுக்கு செக்ஸ் சுலபமாக கிடைத்துவிடுவதால் அதற்காக மட்டுமே திருமணம் செய்யும் அவசியம் அவர்களுக்கு இருப்பதில்லை. காதலில் விழுவதும், பிறகு காதல் தொலைந்து போவதையும் மனித இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். காதல் தோல்வியையும் சிலர் ஏற்க மறுத்து சோகத்திலும் வீழ்கிறார்கள்.

ஆக அங்கு அவரவர்களுக்காக வாழ்கிறார்கள்….. நாம் மற்றவர்களுக்காக வீழ்கிறோம்.
வித்தியாசமானவர்கள் எங்குமுண்டு அதே போல் அங்குமுண்டு. அவ்வளவு தான்!

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0iCmn5HMTA2dz2BZpNZo47upVhn22c96JtTJucb6sh1p4fqLWKbNv1gz3y6hqJkgal&id=100014467204934&mibextid=Nif5oz

One Comment on “மேற்கத்திய நாடுகளில்…./ லதா”

Comments are closed.