ஓவியர் கோபுலு!/திருப்பூர் கிருஷ்ணன்




*ஓவியர் கோபுலுவின் மதிப்பை அவரது ரசிகர்களை விடவும் நன்கு அறிந்தவர்கள் பழைய புத்தகக் கடைக்காரர்கள் தான்! கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு அவர்கள் அதிக விலை கூறுவார்கள்.

கோபுலுவின் சித்திரங்களுக்காகத் தேடித்தேடி வாங்கும் பழைய புத்தக அன்பர்கள், கூடுதல் விலையை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.

ஆனந்தவிகடன் வார இதழைக் கோபுலுவின் ஓவியங்கள் நிறைய அலங்கரித்தன.

ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், (

தில்லியில் வசிக்கும் எழுத்தாளர் திருமதி ரமாமணி சுந்தரின் தந்தையான) சுந்தாவின் யாருக்கு மாலை,
தேவனின் மிஸ்டர் வேதாந்தம், சாவியின் வாஷிங்டனில் திருமணம், நா. பார்த்தசாரதியின் நித்திலவல்லி போன்ற பல தொடர்களின் பாத்திரங்கள், விகடனில் கோபுலுவின் தூரிகையால் உயிர்பெற்றன.

ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற அழகியல் செறிவு நிறைந்த தொடர்கதையின் கதாநாயகன் ஹென்றிக்கு கோபுலு வரைந்த உயிரோவியம் மறக்க இயலாதது.

தினமணிகதிரில் ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நீ நான் நிலா, நந்தா என் நிலா போன்ற சமூகத் தொடர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் இன்றளவும் வாசகர்கள் மனத்தில் நிற்கின்றன.

விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர் எனத் தமிழின் முன்னணி வார இதழ்கள் அனைத்திலும் கோபுலு வரைந்தார்.

அமுதசுரபி போன்ற மாத இதழ்களிலும் அவரது ஓவியங்கள் நிறைய இடம்பெற்றன. அமுதசுரபி கடந்த பலப்பல ஆண்டுகளாகத் தன் தீபாவளி மலர் அட்டையில் கோபுலுவின் சித்திரங்களையே தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

அமுதசுரபி அதிபர் ஏ.வி.எஸ். ராஜா அவர்கள், கோபுலுவின் நெருங்கிய நண்பர் என்பதோடு அவரது தீவிர ரசிகரும் கூட. ஸ்ரீராம் நிறுவனத்தின் இலச்சினை கோபுலு வரைந்ததுதான்.

கோபுலு காலமான பிறகுதான் அமுதசுரபி தீபாவளி மலர்களின் அட்டையை, மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் அலங்கரிக்கத் தொடங்கின.

தினமணி கதிரில் ஓவியம் வரைவதைக் கோபுலு பெரிதும் விரும்பினார்.

காரணம் கதிர் வார இதழின் பரப்பளவு. மற்ற இதழ்களைப் போல் அல்லாமல் அவரது ஓவியம் பெரிதாக கதிரில் வண்ணத்தில் வெளியாவதைக் கண்டு மகிழ்ந்தார் அவர்.

சாவியும் கோபுலுவும் இணைபிரியாத நண்பர்கள். சாவி எழுதிய பயண இலக்கியம் பலவற்றிற்கு, அஜந்தா, எல்லோரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு உறுதுணையாக உடன் சென்றவர் கோபுலு.

சாவி தன் இறுதிக் காலங்களில் கோபுலுவைத் தன் நடைப்பயிற்சி நண்பராகக் கொண்டிருந்தார்.

சாவியின் வழிப்போக்கன், வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை, கோமகனின் காதல் போன்ற தொடர்களின் வசீகரமான எழுத்து நடைக்குத் தன் தூரிகையால் எழில் சேர்த்த கோபுலு, சாவியின் காலை நடைக்கும் துணையாக உடன் நடந்தார்.

சாவி காலமானதைத் தன் வாழ்வின் மிகப்பெரிய இழப்பாகக் கருதினார் கோபுலு. தினமணிகதிரில் சாவி ஆசிரியராக இருந்த காலத்தில் அவரது ஓவியங்கள் கதிரை நிறைய அலங்கரித்தன.

தினமணிகதிரில் தொடராக வெளிவந்த ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற சாகித்ய அகாதமி பரிசுபெற்ற நாவல் பெரும்புகழ்பெற கோபுலுவின் ஓவியங்களும் காரணம்.

கே.ஆர். வாசுதேவன், தீபம் நா. பார்த்தசாரதி, கி. கஸ்தூரிரங்கன் என சாவிக்குப் பின் அடுத்தடுத்து வந்த கதிர் ஆசிரியர்களும் கோபுலுவின் பெரும் விசிறிகளாக இருந்தார்கள்.

அவரது சித்திரங்களை மிகுந்த ஈடுபாட்டோடு அவர்கள் கேட்டு வாங்கி வெளியிட்டார்கள்.

கி. கஸ்தூரிரங்கன் கதிர் ஆசிரியராய் இருந்த காலகட்டத்தில், கஸ்தூரிரங்கனின் தில்லி நண்பரான விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் கதிரில் கோதை சிரித்தாள் என்ற தொடர் நாவலை எழுதினார்.

அந்தக் காலகட்டத்தில் க.நா.சு. சென்னைக்கே குடிபெயர்ந்து மயிலாப்பூரில் தங்கியிருந்தார். அப்போது துக்ளக்கிலும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார் அவர்.

க.நா.சு.வின் தொடருக்குக் கோபுலு ஓவியம் வரையவிருக்கிறார் என்ற தகவலை கதிர் துணையாசிரியனான நான் அவரிடம் சொன்னதும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்திரா பார்த்தசாரதி கதிரில் எழுதிய தொடர்களுக்கெல்லாம் கோபுலுதான் ஓவியங்கள் வரைந்தார்.

ராஜம்கிருஷ்ணன் தன் தொடர் நாவலை அத்தியாயம் அத்தியாயமாக அனுப்பமாட்டார். மொத்தமாக எழுதி அனுப்பி விடுவார். (ர.சு. நல்லபெருமாளும் அப்படித்தான்.)

தம் பதிப்பாளரான தமிழ்ப் புத்தகாலயம் அகிலன் கண்ணன் மூலம், முழுக் கையெழுத்துப் பிரதியையும் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே கொடுத்தனுப்பி விடுவார்.

அவரது மண்ணகத்துப் பூந்துளிகள், பாதையில் பதிந்த அடிகள் என்ற இரண்டு நாவல்கள் தினமணிகதிரில் கோபுலுவின் சித்திரங்களோடு தொடர்களாக வெளியிடப்பட்டன.

இரண்டுமே ராஜம்கிருஷ்ணனின் ரசிகரான கி. கஸ்தூரிரங்கன் தினமணிகதிர் ஆசிரியராக இருந்த காலத்தில் எழுதப்பட்டவை தான்.

மண்ணகத்துப் பூந்துளிகள் நாவல் தொடராக வெளியாகப் போகிறது என்று ராஜம் கிருஷ்ணனிடம் தெரிவித்தபோது அவர் இதுவரை என் படைப்பு எதற்கும் கோபுலு படம் வரைந்ததில்லை. அவரது சித்திரங்கள் என் தொடருக்கு அமையுமானால் மகிழ்வேன்! என வேண்டுகோள் வைத்தார்.

அதுபற்றிக் கோபுலுவிடம் சொன்னேன்.

நான் அவரது எழுத்துகளின் ரசிகனாயிற்றே! இதுவரை அவர் படைப்புக்கு நான் ஓவியம் வரைய நேர்ந்ததே இல்லை. அவரது எழுத்துக்கு என் சித்திரம் இடம்பெறுவது எனக்கல்லவா கெளரவம்! என்று கூறி மிகுந்த ஈடுபாட்டோடு சித்திரங்கள் வரைந்து தந்தார்.

கோபுலு ஓவியர் மட்டுமல்ல, மிகச் சிறந்த இலக்கிய ரசிகரும் கூட. எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு கோபுலுவின் ஓவியத்தோடு வெளிவருவதைத் தங்கள் எழுத்துக்குக் கிடைக்கும் பெரிய அங்கீகாரமாகக் கருதினார்கள்.

ஆனந்த விகடன் ஒருகாலத்தில் அட்டையில் நகைச்சுவைத் துணுக்குகளையே தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

கோபுலுவின் ஏராளமான அட்டைப்பட நகைச்சுவைத் துணுக்குகள் அவர் வரைந்த அழகிய வண்ணப் படங்களோடு வெளிவந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை.

தொலைபேசி வந்த புதிதில் அப்பா தொலைபேசி! என மகள் சொல்வதாகவும் நீயே பேசித்தொலை! எனத் தந்தை பதில் சொல்வதாகவும் ஒரு ஜோக் இடம்பெற்றது.

ஒரு பார்சலை அனுப்புவதற்காக தபாலாபீஸ் போன கிராமத்து ஆசாமி அந்தப் பார்சலோடு தன் மனைவியிடம் திரும்பி வந்து சொல்கிறார்:

எடை அதிகமா இருக்காம். அதனால இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி தபால்தலை ஒட்டணுமாம்!

அதற்கு அந்த மனைவி கையைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு சொல்லும் பதில் என்ன தெரியுமா? தபால்தலை ஒட்டினா எடை இன்னும் அதிகமால்ல ஆயிரும்!

உரையாடலே இல்லாமல் கோபுலு வரைந்த ஜோக்ஸ் தொகுக்கப்பட்டு சைலன்ட் ஜோக்ஸ் ஆக புத்தகமாகவும் வந்துள்ளன.

கோபுலுவைப் பொறுத்தவரை தாமதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. என்று ஓவியம் தருவதாக ஒப்புக்கொண்டாரோ அன்று சரியாக ஓவியம் வரைந்து அனுப்பிவிடுவார்.

எங்காவது வெளியூர் போவதாக இருந்தாலும் முன்கூட்டியே தகவலைச் சொல்லி ஓவியத்திற்கான கருத்தைக் கேட்டுக் கொண்டு, அந்தக் கருத்தின்படிச் சித்திரத்தை முன்கூட்டியே அனுப்பிவிடுவார்.

பணி ஒழுங்கு என்றால் என்ன என்று இன்றைய ஓவியர்கள் அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைந்து கொண்டிருந்ததோடு, பின்னாளில் ஆட்வேவ் அட்வர்டைசிங் என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்தார்.

கோபுலு பார்க்க மிக அழகாக இருப்பார். கூர்மையான மூக்கு. பளபளக்கும் விழிகள். சிவந்த நிறம். மலர்ந்த முகத்தோடு மென்மையாக இனிமையாகப் பேசுவார்.

வயதான காலத்தில் கூட, அழகான கிழவர்களுக்கான போட்டி ஒன்று நடைபெற்றிருந்தால் அவருக்கு முதல் பரிசு கிட்ட வாய்ப்பிருந்தது!

அவர் நம்மிடம் பேசும்போது அவர் வரைந்த சித்திரம் ஒன்று உயிர்பெற்று நாற்காலியில் நம்முன் அமர்ந்து பேசுவதுபோல் தோன்றும்.

அவர் காலமாவதற்குச் சில ஆண்டுகள் முன்பு அவரைப் பக்கவாதம் தாக்கி அவரது வலக்கரம் பாதிக்கப்பட்டிருந்தது.

அவரைப் பார்ப்பதற்காக எழுத்தாளரும் புகைப்படக் கலைஞருமான நண்பர் க்ளிக் ரவியோடு, அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்குச் சென்றேன்.

மருத்துவமனையில் சாய்ந்து அமர்ந்தவாறே இடது கையால் தூரிகையைப் பிடித்துப் படம் வரைந்து கொண்டிருந்தார் அவர்!

அவர் வரைந்த ஓவியங்கள் வழக்கம்போலவே பத்திரிகைகளில் இடம்பெறத் தொடங்கியிருந்தன.

அந்த அபாரமான சாதனை பற்றி அவரிடம் கேட்டபோது, சித்திரத்தைக் கையா வரைகிறது? மூளையல்லவா வரைகிறது! கை மூளையின் தூரிகை தானே? வலக்கரம் இல்லாவிட்டால் இடக்கரம். அவ்வளவுதான்! என்று இயல்பாகக் கூறினார்.

ஒருசில மாதச் சிகிச்சைக்குப் பின் பிக்கவாதத்திலிருந்து முழுமையாக மீண்டார்.

கோபுலுவை அவர் இல்லத்தில் சென்று சந்தித்திருக்கிறேன். அவரையும் அவர் மனைவியையும் பார்த்துப் பேசி மகிழ்ந்திருக்கிறேன்.

அவர் இல்லத்தில் மிகப் பெரிய மாமரம் ஒன்று உண்டு. மாடியில் அந்த மாமரக் காற்றை அனுபவித்தவாறே அவர் பேசிய பேச்சை ஆனந்தமாகக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

கோபுலுவின் மனைவி காலமானபோது இறுதி அஞ்சலிக்காகச் சென்றேன். கோபுலுவின் அருகே போய் அமர்ந்து கொண்டேன்.

தன் மனைவியின் மரணத்தை தம் வாழ்க்கையின் போக்கில் நிகழ்ந்த சம்பவமாக இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் அவருக்கிருந்தது.

என்ன செய்வது? யாரேனும் ஒருவர் முன்னால் போய்த்தானே ஆகவேண்டும்? எனச் சொல்லி என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

கடைசிக் காலங்களில் ஓர் உதவியாளரின் துணையோடு சக்கர நாற்காலியில்தான் இயங்கி வந்தார்.

நண்பர் க்ளிக் ரவி கோபுலுவின் இறுதிக் காலங்களில் அவருக்கு மிக அணுக்கமாக இருந்தார். அவரது ஓவியங்களை டிஜிட்டலைஸ் செய்யும் பணியில் உதவி வந்தார்.

ஆனால் அந்தப் பணி முழுமையாக நிறைவேறாமல் போயிற்று. க்ளிக் ரவி மேல் கோபுலுவுக்கு மிகுந்த அன்பிருந்தது.

கோபுலு காலமானபோது அவர் இல்லம் அஞ்சலி செலுத்தவந்த எண்ணற்ற ஓவியர்களாலும் பிரமுகர்களாலும் நிறைந்திருந்தது.

அமுதசுரபியின் ஏராளமான தீபாவளி மலர்களின் அட்டையைத் தன் ஓவியங்களால் அழகுபடுத்திய கோபுலுவுக்கு அஞ்சலியாக, அவர் காலமானபின் அமுதசுரபியில் அவர் படத்தை அட்டையில் வெளியிட விரும்பினேன்.

ஓவியர் மணியம்செல்வனிடம் கோபுலுவின் படத்தை உள்ளடக்கிய ஓர் அட்டையை வரைந்து வடிவமைத்துத் தருமாறு வேண்டினேன்.
கோபுலுவின் புகைப்படத்தை வண்ணச் சித்திரமாகத் தீட்டினார் ம.செ.. கோபுலு வரைந்த பல பாத்திரங்களை அந்தப் படத்தைச் சுற்றி இடம்பெறச் செய்து அழகாக வடிவமைத்தார்.

மணியம்செல்வனின் ஆத்மார்த்த அஞ்சலியாக அமைந்த அந்தக் கண்ணையள்ளும் அட்டைப் படம், வாசகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்த அட்டைப் படத்தைப் பாராட்டி வந்து குவிந்த வாசகர் கடிதங்கள் கோபுலுவுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதன் சாட்சியாக அமைந்தன.

ஓவிய வரலாற்றில் கோபுலு ஒரு சகாப்தம். அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான ஓவியர் என்று யாரையும் சொல்ல இயலாதபடி அபாரமான ஆற்றலோடு அவர் திகழ்ந்தார்.

எழுத்துலகில் உள்ளதைப் போல் போட்டி பொறாமை போன்றவை ஓவிய உலகில் இல்லை.

ஆகையால் கோபுலு வாழ்ந்த காலத்தில் மற்ற ஓவியர்கள் அனைவராலும் பீஷ்ம பிதாமகர் போலக் கொண்டாடப்பட்ட ஓவியக் கலைஞராக அவர் விளங்கினார்.

அவரது புகழ் சரித்திரத்தின் பக்கங்களில் அழகிய சித்திரங்களாக நிரந்தரமாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
………………………………..

(முகநூலில் ஆர்.கந்தசாமி பதிவு செய்தது)

One Comment on “ஓவியர் கோபுலு!/திருப்பூர் கிருஷ்ணன்”

  1. இந்தியாவிலேயே வார மாத இதழ்களில் படம் வரைந்து மகத்தான பெருமைக்கும் கௌரவத்திற்கு உரியவராக திகழ்ந்த ஓவியமேதை கோபுலு அவர்கள். தன் அற்புதமான எழுத்துக்களில் அந்த ஓவியக் கலைஞரை மீண்டும் நமக்கு உயிர்ப்பித்து தந்திருக்கிறார் திருப்பூர் கிருஷ்ணன். பாராட்டுகள்!

Comments are closed.