பெர்டோல்ட் பிரெக்ட்
தமிழில் : பேயோன்

தீப்ஸ் நகரத்தின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் மன்னர்களின் பெயர்களைத்தான் பார்ப்பீர்கள்.
மன்னர்கள்தான் கற்களை அங்கே இழுத்து வந்து போட்டார்களா?
பிறகு பாபிலோன் நகரம் – எத்தனையோ முறை அழிக்கப்பட்ட
பாபிலோனை அத்தனை முறையும் திரும்பக் கட்டியெழுப்பியது யார்?
பொன்மயமாக மின்னிய லிமா நகரத்தின்
எந்த வீடுகளில் கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ்ந்தார்கள்?
சீனப் பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்ட அன்று மாலை
கொத்தனார்கள் எங்கே போனார்கள்?
மகத்தான நகரமாம் ரோம் முழுவதும்
வெற்றிகளைக் கொண்டாடும் வளைவுகள்.
யார் கட்டிவைத்தார்கள் அவற்றை?
சீசர்கள் யாரை வென்றார்கள்?
பாடல்களில் பெரிதும் போற்றப்படும் பைசான்ஷிய நகரத்தில்
அதன் மக்கள் அரண்மனைகளில் மட்டும்தான் வசித்தார்களா?
புகழ் வாய்ந்த அட்லான்டிஸ் நகரத்தில்கூட,
கடல் அதைச் சூழ்ந்த அந்த இரவில் மூழ்கிக்கொண்டிருந்தவர்கள்
தொண்டை கிழியத் தங்கள் அடிமைகளைக் கூப்பிட்டார்கள்
இளம் அலெக்சாண்டர் இந்தியாவை வென்றார்.
அவர் தனியாகவா சென்றார்?
சீசர் கால்* மக்களைத் தோற்கடித்தார்.
ஒரு சமையல்காரர்கூடவா அவருடன் போகவில்லை?
தமது கப்பற்படைத் தொகுதி தோற்றபோது
ஸ்பெயினின் பிலிப் மன்னர் அழுதார்.
வேறு யாரும் அழவில்லையா?
ஏழாண்டுப் போரில் இரண்டாம் பிரெடரிக் மன்னர் வெற்றி பெற்றார்.
வேறு யார் ஜெயித்தார்கள்?
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெற்றி.
வெற்றி விருந்தை யார் சமைத்தார்கள்?
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாமனிதர்.
யாருடைய செலவில்?
ஆயிரம் பதிவுகள்
ஆயிரம் கேள்விகள்.
Gauls – மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த செல்டிக் இன மக்கள்
‘Questions of a worker who reads’ (1935)
ஆங்கில மொழியாக்கம்: Tom Kuhn & David Constantine
தமிழில்: பேயோன்
