பொன்னியின் செல்வன் 2/கணேஷ்ராம்

()

பதினெட்டாவது அட்சக்கோட்டுக்குக் குடிவந்து பத்து நாள் முடிஞ்சாச்சு..

ஊர் புகழும் ஹூசைன் சாகருக்கு எதிர்த்தாப்பல இருக்கற பிரசாத் தியேட்டர்ல காலை 8.45க்கு டாண்ணு மணியடிக்காமயே பொசெ2.

நூறு பேர் இருந்திருக்கலாம். அதுல என் பக்கத்து சீட்டுல இருந்தவரையும் சேர்த்து ஐம்பது பேர் சுத்தமான நெய்ல செஞ்ச தெலுங்குக் காரங்க..

பெண்டாட்டி கிட்டே உதார் விட்டு ஆன்லைன்ல வாழ்நாள்லயேமுதல் தடவையா புக் பண்ணிட்டேனே தவிர அங்க வந்தவங்க தெலுங்குலேயே மாட்லாடினதுல கொஞ்சம் அரண்டு தான் போனேன்.

ஒரு வேளை தெலுங்கு டப்பிங்கா இருந்து தொலஞ்சதுன்னா என்ன பண்றது?

ஏற்கனவே நான் மகிஷன்னு அடிக்கடி எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டே இருக்கறவ, மர்த்தனியா நர்த்தனம் ஆட பத்து நிமிஷம் போறாது?

நல்ல வேளையா தெலுங்கு படம் இல்லை. ஆனா தமிழ்ப்படமும் இல்லை.

நம்ம அதிர்ஷ்டம் இங்கிலீஷ்ல சப்டைட்டில் போடறான்.

பார்த்திபேந்திரனா நடிக்கறவர் நம்ம நடிகர் திலகத்தோட பேரர். பத்து நிமிஷத்துக்கு ஒருக்கா கட்சி மார்றது இருக்கட்டும்… அவ்வளவு பெரிய பாரம்பரியம்.. தமிழா அது? நாக்குல தர்ப்பையப் போட்டுக் கொளுத்த..

பிரபுவே குதிரையும் கடிவாளமுமா இருந்தவர், குதிரைக்கிட்ட நன்றிக் கடனுக்காக “அவனைக் கொள்ளு”ங்கற மாதிரி தான் பேசறார்.

விக்ரமுக்கு பல்செட்டா இருக்குமோ… ஒரிஜினலா இருந்தா இந்தக் கடி கடி கடிக்கறதுக்குக் கொஞ்சமாவது கூசும்.

ஜெயம் ரவி, செத்தவங்க ஃபோட்டோ மாதிரி சிரிச்ச மாதிரியே இருக்கார்.. இது எவ்வளவு கஷ்டம் தெரியுமோ..

பாலாரிஷ்டம் போலருக்கு… ரொம்ப பூஞ்சை உடம்பு.. தண்ணீல வந்தியத்தேவன் கூட சேந்து தான விழுந்தது?

அதுவும், வ’தேவனுக்கு என்னா அடி? கால்ல மூங்கில் முள்ளு ஏறினா மாதிரி எப்பப் பாத்தாலும் விந்தி விந்தியே நடை. விந்தியத்தேவன்னு பேர் வச்சிருக்கலாம்.

அது போகட்டும், அவனும் தானே அருண்மொழி கூட தண்ணீல விழுந்தவன். அவனுக்கு ஒண்ணும் ஆகலை. அருண்மொழிக்கு சீதளம். நாகப்பட்டினம் போயி மல்லாக்கப் படுக்க வச்சுருக்காங்க பாவம். அடுத்த படத்துக்குள்ள நிறைய ஊட்டச்சத்து கொடுக்கணும்.

அம்மாக்காரி சரியில்லை. சுந்தரச் சோழன் பெண்டாட்டி தான அவங்க?

பெத்த மவன், அதுவும் மூத்த பிள்ளை, செத்துப் போயி வீட்டுக்கு இட்டாராங்க… என்னமா பெர்ஃபாமன்ஸ் காட்டணும்.. இந்தம்மாவும் அந்தம்மா பொண்ணும், அதாங்க குந்தவை, ரெண்டு பேரும் காத்தாலேருந்து ஒரு வேலையும் செய்யாம, பிணம் வருதுன்னு தெரிஞ்சவுடனே, மெனக்கெட்டு மேக்கப் போட்டுக்கினு பளபளன்னு வாசல்லயே குந்திக்கினு கீதுங்க.. அதாவது பரவாயில்லை.. ஒரு சிணுங்கல்.. ஒரு விசும்பல்… மூச்..

ஏதோ பக்கத்து வீட்டு நாய் செத்துப்போன மாதிரி வாசல்ல வேடிக்கை பார்க்க உக்காந்து இருக்காங்க.. இன்னாடா இது?

மதுராந்தகன் ஒரே ஈவினிங்குல ஜகா வாங்குறாரு.. கத்தியெல்லாம் புட்சிக்கினு சண்டைக்கெல்லாம் போறாரு.. அவரு மனசு மாறினதை மூணு மாசக் குழந்தை கூட ஒத்துக்கலை.. என் பக்கத்து சீட்டு மனுசர் கொணாந்திருந்த கொயந்தை கையக் காலை ஒச்சு ஒச்சு அவரு சம்சாரம் அத்தைத் தூக்கிக்கினு வாசலுக்கு ஓட்னாங்க பாவம்.

உலக அயகிய இட்டாந்தது பெரீய விசயம்பா… அந்தம்மா ஞாபக மறதியா ஸ்டவ்வுல வெச்சு ஒடனே நிறுத்தின ஈயச் சொம்பு மாதிரி லேசா ஒரு நசுங்கல். டெக்னாலஜி வளந்ததுல சைக்கிள் ரிப்பேர் கடையெல்லாம் இப்போ பந்து.. இல்லாட்டி நசுங்கல் எடுத்து ஓட்டி இருக்கலாம்.

ரதசப்தமி அன்னிக்கி எருக்க எலையோட தண்ணிக்குள்ள முங்கிக் குளிக்கறா மாதிரி அந்தம்மா ஸ்லோமோஷன்ல அமுங்கிச் சாவுது. நிறம் மாறாத பூக்கள் படத்துல விஜயன் இப்படித்தான் சாவார். அப்போ கேக்கத் தோணலை. இப்போ என்னங்கடா என்று கேட்கத் தோன்றுகிறது.

கடைசீல சண்டையெல்லாம் முடிஞ்சு, மனந்திரும்பின மதுராந்தகனுக்கு பட்டம் தானம் பண்றாங்க..

யார் போடற எச்சிலும் எனக்கு வேணாம்னு ரெண்டு மூணு சீன் முன்னால உதார் விட்டுத் தான் இவரு மனம் திரும்பினது.

அதுவே அவர் கால்ஷீட் கிடைக்காம, படம் நின்னுடப் போவுதேன்னு அவசர அவசரமா எடுத்ததா இருக்கும்.

மதுராந்தகனும் நந்தினிக் கிழவியும் ரெட்டைப் பிறவி, அதுலயும் பாண்டியனோட பசங்கன்னு கல்கி நல்லா எஸ்டாப்ளிஷ் பண்ணி இருப்பாரு..

கதையே சோழநாட்டுக்குப் பாண்டியன் ஆபத்துதவிகளால் வருகிற ஆபத்தை எப்படி சமாளிக்கறாங்க, ஒரு விக்கெட் விழுந்தாலும் மத்ததெல்லாம் விழாம எப்படி மேச்சை கெலிக்கறாங்க அப்டீங்கறதுதான்.

மணிரத்னம் மதுரைக்காரர் போலருக்கு.. இல்லை, ரவிதாசன் பரம்பரையோ..

சத்தம் போடாம சேரநாட்டு ஒற்றன் செயமோகனோட கூட்டு சேர்ந்து சதியைக் கன்டின்யூ பண்ணி, எந்த பாண்டியனைக் கொன்னு மகுடத்தைக் காபந்து பண்ணினாங்களோ, அவனோட பிள்ளைக்கே சத்தம் போடாம அதே மகுடத்தைத் தானம் பண்ணிட்டாங்க..

அது சரி, சுந்தரச்சோழருக்குத் தலைல என்ன சிரங்கா? அவர் மகுடத்தை எதற்காகப் பிடுங்கி இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்?

மணி சார் குடும்பத்துல யாராச்சும் அவிழ்ந்த குடுமியை ஆயிரம் வருஷத்துக்கப்புறம் திரும்ப முடிஞ்சுருப்பாங்களா இருக்கும்.

கட்டக்கடைசீல டைட்டில் கார்டுல அப்பறமா என்ன நடந்ததுன்னு போடறாங்க..

அதுல ஒண்ணு, ஈராசராசன் பிற்காலத்துல ஆந்திரா, அடிலாபாத்துனு தெலுங்கு தேசத்தை எல்லாம் ஜெயிச்சு வளைச்சுப் போட்டான்னு வருது..

ஏற்கனவே ஆரம்பத்தில சொன்ன மாதிரி பாதிப்பேர் லோக்கல் மணவாடுங்க..

அவனவன் சப்டைட்டிலை எழுத்துக் கூட்டிப் படிச்சுட்டு,

“நம்மூர்ல வந்து நம்மளை காலி பண்ணினவன் கதையை நமக்கே போட்டுக் காட்றான்.. நாமளும் வேலை மெனக்கெட்டு வந்து பாத்தோம் பாருன்னு” கண்ணால தண்ணி விட்டுட்டுப் போறான்.

படம் எப்படித்தான்டா இருந்ததுன்னு என் ஃப்ரெண்டு கேக்கறான்.

பொசெ1 மாதிரி பாத்தவுடனே என்னவோ நமக்கே அநியாயம் நடந்த மாதிரி தொண்டை அடைச்சு அழுகை அழுகையா வந்த மாதிரி வரலை.

இப்படித்தான் இருக்கும்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்ததுனாலயா அல்லது முதல் பாகம் மாதிரி ரொம்ப “ரா”வா இல்லாம, சம்பவங்களை எடுத்துத் தன் வழியில் கையாண்டதனாலயும் இருக்கலாம்.

நல்ல படம் என்பது என் வரையில், மொழியின் தாக்கம் இல்லாது, எத்தனை தடவை பார்த்தாலும் ரசிக்கிற மாதிரி இருப்பது.

இது அந்த வகையில் சேராது.

ஆனாலும் மோசமான படம் இல்லை. வ’தேவன் குந்தவை காதல் ஓரளவுக்கு நன்றாகக் கையாளப் பட்டது ஒரு உதாரணம். முதல் பாகத்தில் படு கேவலம்.

மதுராந்தகனுக்குக் கடைசியில் பட்டம் கிடைப்பது கேலிக் கூத்தாகிவிடக் கூடும் என்று யூகித்து அந்த கதாபாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கலாம்.

பட்டமேற்பு விழாவில் அருண்மொழி, நிறையப் பேரை, குறிப்பாகக் குலத்துக்கு சந்தர்ப்பவசத்தால் எதிரியாகிவிட்ட ஆனால் திருந்திவிட்ட பழுவேட்டரையரைக் குறிப்பிடுகிறான்.

அவருக்கு சமமான உரிமையும் மகத்துவமும் கொண்ட கொடுங்காளூர் கிழார் பூதிவிக்கிரம கேசரியைக் குறிப்பிட மறந்து விடுகிறான்.

அவன் தமக்கையால் அவன் தலையில் கட்டப்பட்ட, அவரது பேத்தி வானதி அவ்வளவு அழகில்லையோ? கொஞ்சம் சுமார் தான் போலிருக்கிறது.

ஆக, நம்மைப் போல் ஏமாந்தவர்கள் லிஸ்டில் கல்கியும், கொடுங்காளூர் கிழாரும், அருண்மொழியும் கூட இடம் பெறுவது ஆறுதலளிக்கிறது.