பாரதியின் தம்பியைப் பற்றிப் பலர்/மாலன்

பாரதியின் தம்பியைப் பற்றிப் பலர் அறிந்திருப்பார்கள். பாரதிக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் லட்சுமி. பாரதியின் தங்கை லட்சுமியின் மகன் கிருஷ்ணன் இப்போது வாழ்ந்து வருகிறார். காசியில் பாரதி வசித்து வந்த வீட்டில்தான் அவரும் வசித்து வருகிறார். அவருக்கு வயது 97.

காசியில் பாரதி வசித்த வீட்டைச் சென்று பார்க்க விரும்பினேன். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பிக்கும் முனைவர் ஜெகதீசன் என்னை அழைத்துச் சென்றார். நான் வருகிற தகவல் கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவரைப் படுக்கையில் இருந்து எழுப்பி சோபாவில் உட்கார்த்தி வைத்திருந்தனர்.

வயது, உடல்நிலை இவற்றைப் பொருட்படுத்தாமல் கிருஷ்ணன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ஓர் இசைக் கலைஞரும் கூட. மிருதங்க வித்வான். அந்தப் பல்கலைக் கழகத்தில் நிகழ்கலைத் (performing arts) துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்தி பேசும் பூமியில் தமிழைத் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு உழைப்பைத் தந்தவர். காசித் தமிழ்ச் சங்கம் காசியில் உள்ள தென்னிந்தியர் சொசைட்டி ஆகிய அமைப்புக்களில் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்

பாரதி வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் என்ற பாடலை அந்த வீட்டில்தான் இயற்றினார் என்று சொன்னார்.ஆனால் அதில் எனக்கு சந்தேகம் உண்டு. வெள்ளைத் தாமரை பாடல் ‘சரஸ்வதி தேவியின் புகழ்’ என்று தலைப்பிட்டு முதன் முதலில் 1910ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் டர்பன் நகரில் இருந்த சரஸ்வதி விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்ட மாதா மணிவாசகம் என்ற பாரதியின் கவிதை நூலில் இடம் பெற்றுள்ளது. பாரதி 1898-1902 வரை காசியில் வாழ்ந்தார். பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு ஸ்வதேச கீதங்கள் 1907ல் மூன்று பாடல்களுடன் வெளிவந்தது. அதில் இது இடம் பெறவில்லை. பின் 1908ல் ஸ்வதேச கீதங்கள் முதற்பாகம் வெளிவந்தது. பின் அதைத் தொடர்ந்து ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம் -ஜன்மபூமி என்ற பெயரில் வந்தது இவற்றில் எல்லாம் இந்தப் பாடல் இடம் பெறவில்லை.
ஒருவேளை பாரதி இதன் முதல் சில கண்ணிகளை காசியில் சிவன் சந்நிதியில் பாடி இருக்கலாம். பாரதியியல் ஆய்வாளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது.

பாரதி காசியில் வசித்த வீட்டிற்கு சிவமடம் என்று பெயர். அங்கு ஒரு சிறிய சிவன் சந்நிதி இருக்கிறது. அந்தச் சிவனின் பெயர் சித்தேஸ்வர். உடனுறைபவர் சித்தேஸ்வரி.

அங்கு பாரதி குடும்பத்தார் ஆறு தலைமுறைகளாக நாள் தவறாது பூஜை செய்து வருகின்றனர்.
நான் புறப்படும் போது கிருஷ்ணன் மூன்று மொழிகளில் எழுதப்பட்ட அவரது நூல் ஒன்றைக் கொடுத்து என்னை ஆசீர்வதித்தார். பாரதியின் மருமானிடம் ஆசி பெற்ற நிறைவில் என் காசிப் பயணம் சிறப்புற்றது.

  • https://www.facebook.com/100014467204934/posts/pfbid0tgrbqSdsqUHVUuNAWTUo97HBEG6WP6ozNcGBdwwx12VFymSaH1Bp3ijgh3EwoEELl/?mibextid=Nif5oz