
ஈன்று நான் வளர்த்த இரண்டு
புதல்விகளில் ஒருத்திக்கு
இன்னும் மகப்பேறு வாய்க்கவில்லை;
சண்டையிட்டுப் பிரிந்த
சொந்தச் சகோதரனைப்
பல ஆண்டுகளாகப் பார்த்துப்
பேசவில்லை;
கோயில் குளங்கள் இன்னும்
போகவில்லை;
ஊருக்கு என்றொரு
காரியமும் செய்யவில்லை;
ஏக்கங்கள் இத்தனையும்
என்னுள் சுமந்து
இதோ இக்கணம்
இறந்து கொண்டிருக்கிறேன்
ஆனால் நான் அறிவேன்,
நல்ல சாவு நல்ல சாவு
என்பார்கள் எல்லோரும்;
நோயில் விழாமல்
பாயில் கிடக்காமல்
தனக்கும் பிறர்க்கும்
துன்பம் தராமல்
போய்ச் சேர்ந்துவிட்டாள்
புண்ணியவதி என்று
சொல்லிவிட்டுப் போவார்கள்,
சொல்லிவிட்டுப் போவார்கள்.
;
