
அவை அடக்கம்
–
வில்லி பாரதம் – அவை அடக்கம்
பெரிய இலக்கியங்களை செய்தவர்கள்,சபையோர் முன் பேசும்போது..
தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்ல
வந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல பேசுவார்கள்
இதற்கு அவை அடக்கம் என்று பெயர்.
எதற்கு இந்த அவை அடக்கம்?
வித்தை என்றால் ஒரு கர்வம் வேண்டாமா? ஒரு பெருமை வேண்டாமா? இது என்ன
தாழ்வு மனப்பான்மை என்று கேட்கலாம். இதில் என்ன உயர்வு..தாழ்வு மனப்பான்மை என்று புரியவில்லை.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் யாராய் இருந்தாலும் கற்றது கைம்மண் அளவு கூட கிடையாது. கம்பரும், வில்லி புத்தூர் ஆழ்வாரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் ?
அவை அடக்கத்துக்குக் காரணம் தாழ்வு மனப்பான்மை அல்ல. கல்வியின் ஆழ அகலம்
தெரிந்ததால் வந்த பயம், வந்த பணிவு. ஏதோ கொஞ்சம் தெரிந்து விட்டு, எல்லாம் தனக்குத் தெரியும் என்று மார் தட்டி அலைபவர்களைப் பார்க்கிறோம். அறிவின் ஆழம் தெரியாதவர்கள். அறிவின் ஆழம் தெரிந்தால் பேச்சு வருமா ?
அவை அடக்கம் சொல்பவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை.
கல்வியின், அறிவின் வீச்சு அறிந்ததால் அவர்களிடம் தானே வந்த பணிவு அது.
வில்லிப் புத்தூர் ஆழ்வார் அவை அடக்கம் பாடுகிறார்.
“வட மொழியில் வியாசர் பாடிய மகா பாரதத்தை நான் பாடுவது எப்படி இருக்கிறது
தெரியுமா? சூரிய உதயத்தின் அழகை கண்ணில்லாதவனுக்கு ஒரு ஊமையன் சொல்லியது மாதிரி இருக்கிறது” என்கிறார்.
கண்ணில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் சூரிய ஒளியின் அழகு புரிபட
போவதில்லை. அதுவும் சொல்லுவான் ஒரு ஊமையன் என்றால் எப்படி இருக்கும்.
மகா பாரதம் என்ற சூரிய ஒளி போன்ற பெரிய காவியத்தை ஊமையனான நான்
கண்ணில்லாத உங்களுக்குச் சொல்கிறேன். விளங்கின மாதிரிதான் என்கிறார்.
பாடல்
மண்ணிலாரணநிகரெனவியாதனார்வகுத்த
எண்ணிலாநெடுங்காதையையானறிந்தியம்பல்
விண்ணிலாதவன்விளங்குநீடெல்லையையூமன்
கண்ணிலாதவன்கேட்டலுங்காண்டலுங்கடுக்கும்.
-
