தொலைத்த தருணங்கள்/ஆர். வத்ஸலா

( இன்று 12-05-23 விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை.)


எட்டு வயதில் பாட்டியிடம்
என் அம்மாவை திட்டினால்
உன்னுடன் நான் பேச மாட்டேன் என

பதினைந்து வயதில் நண்பனிடம்
அவனுடைய கணக்கு நோட்டை தேர்வுக்கு முன்
திருடியது நான்தான் என

இருபது வயதில் தந்தையிடம்
அம்மாவை அடித்தால் கையை முறித்துவிடுவேன் என

இருபத்திமூன்று வயதில் அடுத்த வீட்டு மைதிலியிடம்
வீட்டுக்குத் தெரியாமல் மணந்து கொள்ளாலாம் என

நாற்பது வயதில் சாகக் கிடந்த தந்தையிடம்
நடந்தவற்றிற்கு அவரை மன்னித்துவிட்டேன் என

அறுபது வயதில் பாரிச வாயு நாக்கை இழுத்துச் செல்லுமுன்
மனைவியிடம்
அவளிடம் எனக்கு காதல் வராததற்கு காரணம் அவளில்லையென

சொல்லாமல் போனேனே