உலாவரும் வெற்றுச் சொற்கள்!/கோ.முத்துசுவாமி

‘ஹலோ’ என்றான் ஹாய்என்றான் ஹாய்ஹாய் என்றான்;
கைகுலுக்கி ‘அப்புறம்நீ எப்படி? ‘ என்றான்!
‘நலம்தான்,நீ? ‘ எனப்பதில்நான் இறுக்கும் முன்னர்
நகர்ந்தான்பின் ஒருவனிடம், ‘குரு! ஹாய்! ‘என்றே!
நிலாவென்ற நங்கையர்முன் பொருத்த மில்லா
நகைச்சுவையை சிதறவிட்டான், நகைத்தான் ‘ஹாஹா ‘!
வலம்வந்தான் நிகழ்வரங்கில் வகையாய்ச் சொற்கள்
உதிர்த்தபடி; இருக்கையொன்றில் அமர்ந்து பார்த்தேன்!

‘உங்களைப்போல் யார்? ‘; விழித்தேன்; ஒருவன் பக்கம்
வந்தமர்ந்தான்! ‘தெரியலையா? ‘ என்றான்! யானும்
‘தங்களைப்போய்த் தெரியாமல்?! ‘ வியந்தேன்; ‘உங்கள்
தமிழ்போல இல்லை ‘யென்றான்! உற்சா கத்தில்
‘எங்கெழுத்தைப் படித்தீர்கள்? ‘ எனக்கேட் டேனா!
‘ஏய்! விமலா! ‘ என்றெழுந்தான், எட்டிச் சென்றான்!
அங்குமிங்கும் விழிசுழன்றேன்; அவ்வ ரங்கில்
ஆரவாரம் எழுப்பிற்றே வெற்றுச் சொற்கள்!

கலாரசனை முகம்தேக்கி ரசித்தேன் அந்தக்
கூடத்தில் உதிர்வெற்றுச் சொற்கள் தம்மை!
உலாவருமச் சொற்களிலே உணர்வோ இல்லை;
உறவுமில்லை; மனமில்லை; உயிர்ப்பும் இல்லை!
நிலாமறைத்து நகர்கின்ற வெளிர்மேகம் போல்
நொடித்துளியில் உளம்மறைத்து நகரும் சொற்கள்!
பலாச்சுளைபோல் நுனிருசித்து பாகற் காயின்
பைங்கசப்பை பதிக்குமுள்ளே வெற்றுச் சொற்கள்!