‘என்னவோ நடக்குது’/எஸ்ஸார்சி

கவிதை வாசிப்புக்கூட்ட கவிதை
12/5/23.

ஒலிம்பிக்கில் மெடல்
வாங்கினால் என்ன
இப்போ மல்யுத்த வீராங்கனைகள்
விம்மி விம்மி அழுகிறார்கள்
முச்சந்தியில்
தேசத் தலை நகரில்.
சோதரிகளின் உள்ளக்குமுறலைச்
செவிகொடுத்துக்கேட்பதற்கு
ஆளைக்காணோம்
மூவண்ணக்கொடிகளைத்தூக்கிப்பிடித்தவர்களை
காவடி எடுக்கவைத்துவேடிக்கைப்பார்க்கிறார்கள்
எல்லாவற்றிற்கும்
உண்டாம் ஒருகணக்கு
உனக்கும் எனக்கும்
விளங்காதாம் அது
அதிமேதாவி மொழிகிறான் ஓயாமல் அவ்வப்போது.
ஆயிரம் ஆயிரம் விவசாயிகள் போராடி
ஓராண்டு தவங்கிடந்தார்கள் பெருந்தொற்றுக்காலத் தார்ச்சாலையில்
செத்துப்போனவர்கள்
எத்தனையோ.
வாபசாகின கருப்புச்சட்டங்கள்
மக்கள் சமைப்பதுவே
சரித்திரமிங்கு.