ஐந்து கட்டளைகள்/பிரேம பிரபா

நீங்கள் எப்போது முதுமை அடைகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதில் பதில் அளித்துவிட முடியாது. ஐம்பத்தி எட்டு வயதிலா? அலுவலகத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று கையில் ரோஜா மாலையுடன் தளர்வாக வீட்டிற்கு  வியட்நாம் வீடு சிவாஜி போல பொங்கி வரும் அழுகையை சிரிப்பாக மாற்ற முயற்சிக்கும் போதா? இல்லை ஒரு புறம் சிறிதளவு ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு தன் பெண்ணை திருமணம் செய்த வகையில் ஊதிப் பெருத்த கடனைக் கழிக்க கண் பொறை அறுவைச் சிகிச்சையை தள்ளிப்போட்டுக் கொண்டு ஏதாவது ஒரு ஏடிஎம்மில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து ஒரு நாளில் கட்டாய ஓய்வெடுக்கும் போதா? இல்லவே இல்லை. யாரும் முதுமையை அவர்களாகவே வலிய  ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவர் மனதில் மற்றவர்களால் அதி நுட்பமாக  திணிக்கப்படும்  ஒரு அடையாளம்தான் இந்த முதுமை. 

இதை எப்படிக் கண்டறிவது? மிகவும் சுலபம். ஒரு காலத்தில் உங்களையே மையப்படுத்தி காட்டப்பட்ட அக்கறை மெல்ல நழுவி உங்கள் பிள்ளைகளைச் சுற்றி வரும். நீங்கள் எப்போதாவது மறந்து போய் குளியல் அறை விளக்கை அணைக்காமல் வந்து விட்டால் “இப்படித்தாண்டா, ஒவ்வொரு தடவையும் நான்தான் அடுக்களை வேலையை விட்டு ஓடிப்போய் அணைக்க வேண்டியிருக்கு” என்று உங்கள்  மனைவி பிள்ளைகளிடம் குறை கூற ஆரம்பித்த உடன் உங்களுக்கான முதுமையை அவர்கள் தட்டில் ஏந்திக்கொண்டு கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்று பொருள். அடுத்த கட்டமாக உங்கள் பிள்ளைகள் “ஏம்மா அப்பா இப்படி மாறிட்டாரு?” என்று அம்மாவிடம் குறைபட்டுக் கொள்ளும் போது உங்களுக்கான முதுமை முதல் கட்டமாக ஊர்ஜிதப்படுத்தப் படுகிறது.

இயல்பிலேயே நீங்கள் எவ்வளவுதான் சாந்த சொரூபியாக இருந்தாலும், உங்களை ஒரு கோபக்கார முனுசாமியாகவோ அல்லது மௌன குருவாகவோ மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தேறிய பிறகு, நீங்கள் எவ்வளவுதான் அழுது புரண்டாலும் “கொடுத்த பட்டம் கொடுத்ததுதான்”. நீங்கள் இப்போது அதி கோபக்காரர் ஆகி விட்டீர்கள் என்பதை நீங்களே மெல்ல மெல்ல உணர ஆரம்பித்து விடுவீர்கள். இப்படியாக உங்களை கோபக்காராக மாற்றி விட்டு உங்களைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து விடுவார்கள். வடிவேலு சொல்வது போல இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன் என்ற பொதுத் தீர்மானம் நிறைவேற்றப்படும். பிறகென்ன நடக்கும்? வட்டத்திற்கு வெளியே நின்று கை சூப்பும் உங்கள் பேத்தியோ அல்லது பேரனோ உங்களை மிருகக் காட்சி சாலைக் கூண்டிலிருந்து எட்ட நின்று ரசிக்கும்  பார்வையாளர்களாக மாறிவிடுவார்கள். இதுதான் முதுமையின் உச்ச நிலை. இதிலிருந்து நீங்கள் எவ்வளவு முயன்றாலும் மீளவே முடியாது. உங்களுக்கான காலை செய்தித்தாள், மாத்திரை, உணவு, காப்பி, டீ வகையறாக்கள் நேரத்திற்கு கொடுக்கப்படும். வரும் விருந்தாளிகளும், உறவினர்களும்  முதலில் உங்களைத்தான் வந்து பார்ப்பார்கள். “எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா? என்ற அவர்களின் கேள்விக்கு நீங்கள் பதில் கூறும் முன்னே சீதையின் கண்களில் இருந்து மறைந்த மாய மானைப்போல காணாமல் போய்விடுவார்கள். 

முதுமை இவ்வளவு சோகமா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்காமல் இல்லை. அவ்வளவுதான் வாழ்க்கையா? நிச்சயம் இல்லை. முதுமையும் வசந்தமாக மாற்றும் வித்தை உங்களின் கைகளில்தான் இருக்கிறது. இப்போது முதுமையையும் மாற்றிக்காட்டும் மந்திரக் கோல் உங்கள் கைகளில். ஐந்து கட்டளைகளை முதலில் மனதார நடைமுறை வாழ்க்கையில்  கடைபிடியுங்கள்.

1.நீங்கள் மிகப் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்கலாம். என்றாலும் பொரியலுக்கு, தக்காளிச் சட்னிக்கு, குழம்பிற்கு, உங்களுக்கு மிகவும் பிடித்த நூடுல்ஸுக்கு, ரைத்தாவிற்கு  எப்படி வெங்காயம் அரிவது என்பதை உங்களின் மனைவியிடம் இருந்து முதலில்  கற்றுக்கொண்டு அவளுக்கு உதவுங்கள். குறைந்த பட்சம் குக்கரில் சாதம் வைக்க, மிளகு ரசம், பருப்பு சட்னி செய்ய கற்றுக்கொள்வது கூடுதல் உதவி.

2.மற்றவர்களின் மேல் நீங்கள் அதிகமாக நம்பிக்கை வைக்கவேண்டியது இந்தத் தருணத்தில்தான். ஓய்வு நேரம் அதிகம் இருப்பது என்பதற்காக எதற்கெடுத்தாலும் துப்பறியும் சாம்புவாக மாறி கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள். 

3.தினமும் நடை பயிற்சி, தோட்ட வேலை, பிடித்த பொழுது போக்குகளைத் தேடிக் கண்டுபிடித்து உங்களின் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கோள்ளுங்கள். எந்த ஒரு செயலையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து செய்யாதீர்கள். இதில் தொலைக்காட்சியில் காட்டப்படும் தொடர் நாடகங்கள் முதல் இடத்தைப் பெறுகிறது.  குறிப்பிட்ட ஏதாவது ஒரு  நேரத்தில் தினமும் தொலைக் காட்சி செய்திகளைப்  பார்க்கத் தவறாதீர்கள்.  

4.உங்களின் மனதிற்கு மிகவும்  பிடித்த பொழுதுபோக்குகளை முதலில் பட்டியலிடுங்கள். கல்லூரி வருடாந்திர நினைவு  மலரில், உங்களின் சக மாணவியிடம் கொண்ட ரகசியக் காதலைக் கூறத் தயங்கி, ராஜேந்தர் பாணியில் ஒரு கவிதை எழுதி, அவளைத் தவிற   எல்லோரிடமும் பாராட்டைப் பெற்றீர்களே;

பள்ளி நாட்களில் சினிமா கேமரா மேன் நினைப்பில் எடுத்த  புகைப்படங்களைப் பார்த்து என்னவென்று ஒன்றும் புரியாமல் திணறிய நண்பர்களிடம் விளக்கம் கொடுத்து அதுவும் புரியாமல் மிரண்டு போய் ஓடினார்களே;

பரணில் உங்கள் மாமனார் காசில் முதல் முதலாக வாங்கிய அரிஸ்டோகிராட் சூட்கேஸில் இன்றளவும் ஓட்டிற்குள் தலையை இழுத்துக்கொண்ட ஆமையைப் போல ரகசியமாக வைத்திருக்கும் ஸ்டாம்ப் ஆல்பத்தை நேரம் கிடைக்கும் போது எடுத்துப் பார்த்து மீண்டும் வைத்துவிடுவீர்களே;

இப்படி உங்களிடன் உள்ள திறமைகளை தூசி தட்டி மீண்டும் தொடருங்கள்.  

5.மனதை முடிந்த அளவு அதிக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் வயதில் எத்தனையோ பிரச்சினைகளை கையாண்டிருப்பீர்கள். ஆதலால் எதற்கும் தளர்ந்து விடாதீர்கள். எல்லோரிடமும் குறைகள் உண்டு,  உங்களையும் உட்பட. அனைவரிடமும் அன்பாக இருக்க தொடர்ந்து முயற்சியுங்கள்.

E mail address premaprabha.premkumar@gmail.com