
கல் ஆறும் முன் வரச் சொல்லி
அழைத்துக் கொண்டேயிருந்தாள்
அம்மா
கற்பனை விரியும் நேரம்
அழைக்கிறாளே என்று
அலுத்துக் கொண்டே
போனேன்
திரும்பியதும்
அற்புதமாக அமைந்து விட்ட
அன்னையர் தினக் கவிதையை
புலனத்தில் பகிர்ந்து
பாராட்டுக்கள் பெற்று மகிழ்ந்து
தூங்கி விட்டேன்
எனக்காக வார்த்து
ஆறிப் போன தோசைகளை
சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்
உள்ளே
அம்மா
- இன்று நானே ஆசையாக
அம்மாவை அழைத்துச் சென்றேன்
கோயிலுக்கு
திரும்புகையில் கேட்டாள்
“அந்த புடவை கட்டிய பெண்ணா,
இல்லெ சல்வார் கமீஸா?
அட்ரஸ் தெரியுமா?”
அவளுக்கெப்படி தெரிந்தது
மற்ற எவளையும்
பிடிக்க வில்லை எனக்கு
என்று? - அன்று என்னவோ தோன்றியது
அம்மாவுக்கு உதவ
தூங்குபவளை எழுப்பாமல்
தண்ணீர் நிற்குமுன்
அண்டாவை நிரப்பி விட்டு
திருப்தியுடன் அலுவலகம் போய் விட்டேன்
அம்மா போன பிறகு
யதேச்சையாக தங்கை சொல்லித் தான் தெரிந்தது
அது ஓட்டையான பழைய அண்டாவென்று
14/5/23 காலை 10 மணி
