அம்மா/செ.புனிதஜோதி

அம்மா நீ எங்களுக்காக
எதுவும்செய்யவில்லை
உன் நோய்மையே
உன்னைப் பாடாய்படுத்திக்
கொண்டிருந்தது

எங்களுக்கு எதுவும்
செய்யமுடியவில்லை என்ற
ஏக்கத்தின் தவிப்பு
உன் ஒவ்வொரு
பதற்றத்திலும்
அன்பால்
உணரவைத்திருந்தாய்

இந்த
உணர்தல் தானே
எங்களுக்கும்
உனக்குமான
அன்பின்
பரஸ்பரம்.

சொல்லச்
சொல்ல
செய்முறைகளைக்
கற்றுக்கொண்டிருந்தோம்
சமையல் அறையில்

உன் நேர்த்தியில்
எங்கள் ஒழுக்கத்தைப்
பேணிக்கொண்டோம்

அன்பொழுகும்
பேச்சில்
வருவோரை
உபசரிக்கப்
பழகிக்கொண்டோம்

உன் வலியைக்
கடத்தும்
வலிமையை
உன் நோய்மையிலிருந்து
பெற்றுக்கொண்டோம்

எல்லோரையும்
ஆதரிக்கும்
ஈகை உள்ளத்தில்
சிறு கொடையைக்
வழமையாக்கிக்கொண்டோம்

காலனை விரட்ட
நேரம் தவறாமல்
எடுத்துக்கொண்ட
மருந்தின் வழியாக
உடலைப் பேண
கற்றுக்கொண்டோம்

நீ சொன்ன
கதைகளின்
வழியாக
நம்பிக்கைப்
பேணிக்கொண்டோம்

எல்லாவற்றையும்
கற்றுக்கொடுத்த
நீ
விட்டுச்சென்ற பின்
உன் அகலாத
நினைவை
என்ன செய்வதென்று
கற்றுத்தர மறுந்துவிட்டாய்

என்றும் உன் நினைவில்
வாழ்வது
செத்துமடியும் மலரை
தாங்கும் காம்பைப்போன்றது.

One Comment on “அம்மா/செ.புனிதஜோதி”

Comments are closed.