ஸ்ரீநிவாசன்
1
அழைப்பு மணி ஒலிக்க வினோத் கதவைத் திறந்தபோது முகத்தில் சோகத்தைச் சுமந்து கொண்டு சிவா நின்று கொண்டிருந்தான்.
“வா சிவா..என்ன விஷயம் ? ஏன் டல்லா இருக்க ? ”
“ஆபீசுக்கு கிளம்பிட்ட போல் இருக்கு ?
“ஆமாம் …ஏதாவது பிரச்சினையா?”
“உடனடியா உன் ஹெல்ப் வேணும் “
“விஷயத்த சொல்லு …என்னால் முடிஞ்சத நிச்சயமா பண்றேன் “
“அப்பாவுக்கு ரொம்ப ஒடம்பு சரியில்ல …நர்சிங் ஹோம்ல
சேத்திருக்கேன் …”
” போன வாரம் என் டாட்டர் பர்த்டேக்கு வரும்போது கூட நல்லா இருந்தாரே …! என்ன ஆச்சு ? ”
“வயசாச்சு! வேற என்னன்னு சொல்ல ? நேத்து திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார் .ஆம்புலன்ச வரவழைச்சு நர் சிங்ஹோம்ல சேத்தேன்.. காலைலதான் டாக்டர் அப்பாவைப் பத்தி ஒரு விஷயம் சொன்னார் ..அப்படியே ஆடிப் போய் பக்கத்து வீட்டு பையன் கவனிச்சுக்க சொல்லிட்டு இப்போ உன்னைப் பாக்க வந்தேன்.
“..அப்படி டாக்டர் என்ன சொன்னார்? டிரீட்மெண்ட்டுக்கு பணம் அதிகமா கேட்டாரா ? நான் ஏதாவது பண உதவி …. ? “
“இல்ல …என் பிரச்சினை பணம் இல்லை! “
“வேற என்ன வேணும்?”
“உன்னால குடிக்க முடிஞ்ச ஒண்ணுதான்”
“அட …புதிர் போடற நேரமா இது ? பளிச்சுனு என்னன்னு சொல்லு ! “
“உன்னோட ரெண்டு கிட்னியில ஒண்ணு ! “
“வாட் ? “
“ஓகே …கட் ..இட் ….
“ரமேஷ் …! அப்படியே ‘பேன்’ பண்ணி ஹாஸ்பிடல் செட்டுக்கு ஷிப்ட் பண்ணிக்கோ” என்றார்
ட்ராலி’ மீது அமர்ந்து கேமராவைப் பிடித்து ” கலைந்த வேஷம்” மெகா-தொடரை இயக்கிக் கொண்டிருந்த டைரக்டர்.
ரமேஷ் அவர் காதருகே குனிந்து…
“அப்போ.. இன்னிக்கு எடுக்கவேண்டிய மத்த ‘க்ளோஸ்- அப் ஷாட்டு’கள நான் எடுத்துடட்டுமா ஸார் ? …”
டைரக்டர் இல்லாமால் ஒரு காட்சியையாவது எடுத்து அவரை அசத்திடணுங்கிறது ரமேஷின் நீண்ட நாள் ஆசை .
“ஓ கே ..அதெல்லாம் நீ பாத்துக்கோ …நான் புறப்படறேன் …எனக்கு பிளைட்டுக்கு நேரம் ஆச்சு “
புறப்பட்டார் டைரக்டர்.
அவரைப் பொறுத்தவரை அவர் எதிர் பார்க்கும் விஷயம் ஷாட்டுக் குள்ள வரும் வரை விடமாட்டார்..காட்சிகள் எடுக்கும் போது மிகவும் கவனமா இருப்பார். ஒரு காட்சியின் கோணம், வசனம், நடிக-நடிகைகளின் உடை, வசன உச்சரிப்பு இவற்றில் எளிதில் திருப்தி அடையமாட்டார். எடுக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்ரூபமாக மக்கள் மனதில் நிற்கும்படி அமையவேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார். கோபம் எப்போதும் மூக்கின் நுனியில்தான் …மூடு போய்விட்டால் உடனே ‘பேக் அப்’ சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார்.
2
அதிகாலையில் வெகு கனமாய் தொடங்கிய மழை, மதியம், விட்டு விட்டுப் பெய்து… மாலைப் பொழுதில் சிறு தூறலாய் தொடர்ந்து தூறிக் கொண்டிருந்தது.
ராஜேஷுடைய ஹெல்மெட் அவன் தலையை நனையாமல் பாதுகாத்தாலும் …தூறல் அவன் உடம்பை மெல்ல நனைத்துக் கொண்டிருந்தது ..
“நவம்பர் மாத மழையில்…. நான் நனைவேன் என்றேன் ….
எனக்கும் கூட நனைதல் மிகப் பிடிக்கும் என்றாய் “
பெய்யும் மழைக்கான ‘சிடுவேஷன் சாங்கை’ முணுமுணுத்தபடி வீட்டை நோக்கி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ராஜேஷ். அவனுக்கு இந்த வாரம் பகல் டியூட்டி.
கை பேசி அழைத்தது … வண்டியை ஓரங்கட்டி..ஹெல்மெட்டைக் கழட்டி …கண்ணாடியில் மாட்டி..
யாரென்று பார்த்தால்… அட …! ஹோம் மினிஸ்டர்….!
“சொல்லு நித்யா ..”
“எங்க இருக்கீங்க ? “
“டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டிருக்கேன்…என்ன வேணும் ?
” நம்ம கடையில் அரை கிலோ கடலை மாவும் ஒரு சமையல் எண்ணை பாக்கெட்டும் வாங்கிட்டு வாங்க ”
“என்ன விசேஷம் ? “
“நேர்ல வாங்க சொல்றேன் “
“போன்ல சொல்லக்கூடாதா ? “
“அதான் நேர்ல வாங்கன்னு சொல்றேனே ….உங்களைப் பாக்க இங்கே ஒரு விருந்தாளி காத்துகிட்டிருக்கார்”
‘டக்’ என்று போன் தொடர்பைத் துண்டித்தாள்.
நித்யா சொன்னதை மறக்காமல் கடையில் வாங்கிக் கொண்டு…. காத்திருக்கும் விருந்தாளி யாராய் இருக்கும் என்று யோசித்தவாறே வீட்டை அடைந்தான் ராஜேஷ்.
வாசலில் புல்லட் நின்று கொண்டிருந்தது … வெராந்தா சோபாவில் காலேஜ்-மேட் ரமேஷ் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தான். அவன் அருகில் ராஜேஷின் மகள் ஸ்ருதி அமர்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும், “அப்…பா…என்று ஸ்ருதி ஓடி வர, போன் தொடர்பைத் துண்டித்து ஒரு நட்புப் புன்னகையை வீசினான் ரமேஷ்.
“ஹாய் ரமேஷ் …எப்போ வந்த? என்ன திடீர்னு எங்க ஞாபகமெல்லாம் ?….என்ன சாப்பிட்ட? நித்யா ஏதாவது ஆஃபர் பண்ணினாளா இல்லையா ?”
வெகு நாட்கள் கழித்து நண்பனைப் பார்த்த சந்தோஷத்தில் படபட வென்று கேள்விகளை ஒருசேரக் கேட்டுவிட்டு கடையில் வாங்கி வந்த ஐட்டங்கள் கொண்ட பையை நித்யாவிடம் நீட்டினான் ராஜேஷ்.
“ஒவ்வொண்ணா கேளு! ! …இப்படி எல்லா கேள்வியையும் ஒண்ணா கேட்டா எப்படி …? பதிலைப் பின்னாலிருந்து ‘பிராம்ப்ட்’ பண்ண இங்க என் அசிஸ்டன்ட்டா இருக்கான் ? இல்ல இது ஷூட்டிங் ஸ்பாட்டா? “
“நீ மாறவே இல்லடா ரமேஷ் … ஏதாவது கேட்டா உடனே ஷூட்டிங்க கனெக்ட் பண்ணிப் பேசற அந்த பழக்கம் இன்னும் உன்னை விட்டுப் போகல.. …ஆமாம் …எப்படிடா இருக்க ..?
“ஏதோ ஓடிகிட்டிருக்கு..நீ எப்படி இருக்க?
இவ்வளவு நேரம் உன் பொண்ணு கூட பேசிக்கிட்டிருந்தேன்… உண்மையை சொல்றேன்! ‘சான்சே’ இல்ல …ரொம்ப ஸ்மார்ட்.. யூ ஆர் வெரி லக்கி! ..”
“அதுல ஆச்சரியம் ஒண்ணும் இல்ல …அவ….அம்மா மாதிரி .. சரி …ஒன் அண்ணனோடு ஏதோ தகறாறுன்னு ஒரு நாள் போன்ல சொன்ன ….அப்புறம் என்ன அச்சு ?
“அந்த உறவே முறிஞ்சு போச்சு ப்பா..”
” என்ன சொல்ற நீ ?”
“ஆமாம் …! என் அண்ணனுக்கு ஆரம்பத்துல இருந்து என்னைப் பிடிக்காது … அப்பா-அம்மா காலத்துக்கு அப்புறம், ஏதோ கூட பொறந்த பாவத்துக்கு என்னை அவரோடு வீட்டுல தங்க வச்சிருந்தார்.. போறாததுக்கு தினமும் ஷூட்டிங் முடிஞ்சு லேட்டா வரேன்னு அண்ணி என் மேல் புகார் .. .நான் என்ன செய்ய ? என் தோழில்ல ‘டான்னு’ மணி அடிச்சவுடனே வீட்டுக்குக் கிளம்பிட முடியுமா ? ..அவருக்கு சினிமா, நாடக சம்பந்தப்பட்ட தொழிலுன் னாவே கேவலம் … அவர் பார்வைக்கு நாங்க எல்லாம் கூத்தாடிகள் …அதனால ஒரு நல்ல நாளா பாத்து ரெண்டு பேரும் ஏக-மனதா என் ப்ரோஃபெஷனை முடிஞ்சவரை கேவலமாப் பேசி என்னையும் வீட்ட விட்டு அனுப்பிட்டாங்க..
ஏதோ கொஞ்சம் சினிமா, சீரியல் பத்தி விஷயம் தெரிஞ்சு இருக்கறதால வாழ்க்கை வண்டி ஓடிக்கிட்டிருக்கு … “
” இப்போ எங்க தங்கி இருக்க என்ன பண்ணிகிட்டு இருக்க ?”
” வட பழனியிலா ஒரு மேன்ஷன்ல……”
இதற்கிடையில்
இரண்டு தட்டுகளில் தலா நான்கு வெங்காய பஜ்ஜியும் கெட்டி சட்டினியும் கொண்டு வந்து
‘டீ ப்பாயின்’ மேல் வைத்தாள் நித்யா.
” எடுத்துக்கோ ரமேஷ்! இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கே ? “
” கலைந்த வேஷம்” னு ஒரு மெகா சீரியல்ல அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணி கிட்டிருக்கேன்…”
இதைக் கேட்டவுடன் ராஜேஷ் முகம் தாமரையாய் மலர்ந்தது .
“அப்படியா…! அப்புறம் ? “
“அப்புறம் என்ன? ஷூட்டிங் ஷெட்யூல் முடிஞ்சு ரெண்டு நாள் ‘பிரேக்’….அதான் ஒரெட்டு உன்னையும் நித்யாவையும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்…வந்ததுக்கு நித்யா கையாலா ருசியான பஜ்ஜியும் ஃபிளேவரோட ஃபில்டர்-காபியும் கிடைச்சுது …. நான் கிளம்பறேன் “
“அட …இப்ப தான் வந்தே … அதுக்குள்ள கெளம்பரேங்கறே ? .
” வேலை இருக்குப்பா .. …இன்னொரு நாள் சாவகாசமா வரேன் …நல்லா இருட்டிடுச்சு…மழை தூறிக்கிட்டே இருக்கு ..இன்னும் வலுத்துதுனா வண்டி ஓட்டறது கஷ்டம் “
டீப்பாயின் மேல் இருந்த புல்லட் சாவியைக் கையில் எடுத்தான்.
“ஒரு நிமிஷம் ரமேஷ் …உன் கிட்ட ஒண்ணு கேக்கணும் …
“கேளு “
“எனக்குச் சீரியல்ல நடிக்க ஏதாவது சான்ஸ் கிடைக்குமா ? முடிஞ்சா நீ ஒர்க் பண்ற சீரியல்லேயே எனக்கு ஒரு வேஷம் வாங்கிக் குடேன்?
” ஆர் யூ சீரியஸ்? ”
” ஆமாம்ப்பா .கொஞ்ச நாளா மனசில அப்படி ஒரு ஐடியா ….உன் மூலமா ஒரு ‘என்ட்ரி’ கெடச்சா அத வச்சு டெவலப் பண்ணிப்பேன்”
” என் சொந்த கதையைக் கேட்டதுக்கு அப்புறமும் உனக்கு ஏம்ப்பா இந்த சீரியல் ஆசை ? நல்ல உத்தியோகம் …என்ன… ஷிப்ட் டியூட்டி …அளவான குடும்பம் ..லட்டு மாதிரி இனிப்பா பேசற குழந்தை …சொந்த வீடு… நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு? இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஏன் ஆசை ?”
இடையில் நித்யா குறுக்கிட்டு
“நல்லாக் கேளுங்கண்ண …வீட்டில சதா இதே பேச்சுதான் …இவர் என்னவோ சீரியல்ல நடிச்சு ஒரே ராத்திரில சூப்பர் ஸ்டார் ஆயிடறா மாதிரி ..! அதெல்லாம் சினிமாவிலதான் நடக்கும் …
நித்யா பகலில் டி.வி.யில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று விடாமல் ரசித்துப் பார்ப்பாளே தவிற அவளுக்கு ராஜேஷ் சீரியலில் நடிப்பதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை.
” நித்யா…! இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க .. இன்னைக்கு சினிமாவுல பெரிய ஆளா இருக்கிறவங்கள்ள பலபேர் ஆரம்பத்துல நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஸ்டூடியோவா ஏறி இறங்கினவங்கதான் .. நமக்கு .நல்ல நேரம் வந்துட்டா எல்லாமே சாத்தியந்தான்….ஆனா நம்மோட முயற்சியும் கொஞ்சம் வேணும்.. …அதுக்குத்தான் நான் நடிக்க சான்ஸ் கேக்கறேன்…. நாமும் எப்பதான் கை நெறய காசு பாத்து …கார்… பங்களான்னு வசதியா சந்தோஷமா வாழறது?
மறுபடியும் நித்யா குறுக்கிட்டாள்.
“கொஞ்சம் இருங்க ..! என்று கோபமாய் சொன்னவள் ரமேஷ் பக்கம் திரும்பி …
“அண்ணே! ..நீங்களே சொல்லுங்க! இப்போ நாங்க வாழற வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்? சந்தோஷமாதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம் ….தயவு செஞ்சு .வேணாம்னு சொல்லுங்க அண்ணே ..இவருக்கு சீரியல் எல்லாம் ..செட்டே ஆகாது.நான் பழைய பஞ்சாங்கமாகவே இருந்துட்டுப் போறேன்”
ராஜேஷ், “நித்யா …கொஞ்சம் யோசிச்சுப் பாரு …நாளைக்கு நானே பெரிய ஸ்டாரா ஆனா உனக்குப் பெருமைதானே ?இதையெல்லாம் கூட விடு….’ஃபியூச்சர’ திங்க் பண்ணிப் பாரு நமக்கு இருக்கறது பெண் குழந்தை …. அவளைப் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டாமா.. ? நல்ல இடத்துல கட்டிக் குடுக்க வேண்டாமா ? இதுக்கெல்லாம் இப்போ வர்ர வருமானத்தை மட்டும் வச்சுகிட்டு ஒண்ணும் கிழிக்க முடியாது ”
ஆவேசமாய் பேசிய ராஜேஷையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் இவன் ஒரு சீரியலுக்கே வசனம்எழுதலாம்போலஇருக்கேஎன்று நினைத்தான்.
“சரிப்பா …நீ இவ்வளவு சொல்றதனால நான் முயற்சி பண்றேன் …இப்போ நான் ஒர்க் பண்ற சீரியல்ல சில திருப்பங்கள் இனிமே தான் வரப் போகுது … உனக்கு பொருத்தமான வேஷம் இருந்தா சொல்றேன்… வேஷம் உன் மனசுக்கு பிடிச்சா மாதிரி அமைஞ்சா சந்தோஷம் தான் …மாறா இருந்தா என்னத் திட்டக் கூடாது ! “
” நான் ஏம்ப்பா உன்னை திட்டப் போறேன்? நீ மட்டும் நடிக்க ஒரு வேஷம் வாங்கிக் குடுத்துப் பாரு …அப்புறம் தெரியும் என் திறமையைப் பத்தி … “
“அப்போ சரி …உன்னோட ஃபுல் சைஸ் போட்டோ பின்னால உன் போன் நம்பரையும் பேரையும் எழுதிக் குடு “
“எதுக்கு ..? .உனக்குதான் என்னை நல்லா தெரியுமே “
“குடுன்னாக் குடேன் …அதெல்லாம் யூனிட்டோட ப்ரோசீஜர்…அதில்லாம வேற சீரியல் கம்பனி எதுக்காவது ஆள் தேவைன்னா குடுக்கலாம் இல்ல ? “
“அப்போ சரி ” என்று பீரோவிலிருந்து ஒரு போட்டோவை தேடி எடுத்துப் பெயரும் போன் நம்பரும் எழுதி ரமேஷிடம் நீட்டினான்.
“…அப்போ நான் கெளம்பறேன்டா …..வரேன் நித்யா …….பை குட்டிப் பொண்ணு! “
” ஒகே ….மறந்துடாதே ….உன் போன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன் “
என்றான் ராஜேஷ்.
ரமேஷின் புல்லெட் புகைவிட்டுப் புறப்பட்டது.
“ஒரு நாயகன் …..உதயமாகிறான் ….”என்று பாடிக்கொண்டே உள்ளே சென்றான் ராஜேஷ்.
3
ரமேஷ் வந்துவிட்டுப் போய் ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாலை ராஜேஷு க்கு ஒரு போன் கால் வந்தது ..
“ஹலோ “
“ராஜேஷ் சாரா? வணக்கம்… நான் வி எம் பிரொடக்ஷன்ஸ் துணை நடிகர் ஏஜன்ட் கனகசபை பேசறேன் ..”
” வணக்கம்… ..சொல்லுங்க”
” ரமேஷ் ஸார் உங்கள கான்டாக்ட் பண்ணச் சொன்னார் …இப்போது எடுக்கிற சீரியல்ல ஒரு வேஷம் இருக்கு …நாளைக்கு நீங்க ஃபிரியா இருந்தா காலைல எட்டு மணிக்குக் கற்பகம் கார்டன்ஸ் வர முடியுமா…? “
இதைக் கேட்டவுடன் உலகத்தையே ஜெயிச்சுட்டதைப் போல் உணர்ந்தான் ராஜேஷ்.
“கட்டாயம் வரேன் …கதைப் படி என் கேரக்டர் என்ன?”
ரெண்டு கேரக்டருக்கு ரமேஷ் ஸார் உங்கள மனசுல வச்சிருக்கார் ..ஒண்ணு ஒரு நடுத்தர வயது போலீஸ் ஆபீஸர் ..இன்னொண்ணு கொஞ்சம் வயசான பேஷண்ட் . இதுல ஏதாவது ஒண்ணு நீங்க பண்ண வேண்டியிருக்கும்..
நான் என்ன டிரெஸ்ல வரணும் ?”
” சும்மா பாண்ட் சட்டை போட்டுட்டு வாங்க ”
“சரி … யாரை கான்டாக்ட் பண்ணனும் ?
“கனகசபைன்னு கேளுங்க ..நான் அங்கதான் இருப்பேன் “
“சரி வைச்சுடரேன்”
நித்யா உள்ளே கிச்சனில் கிரைண்டர் போடுவதில் பிஸியாக இருந்தாள். நித்யாவிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைச்சுடனும் …என்று தீர்மானித்த ..ராஜேஷ் அப்போதே வேஷம் போடத் தயாராகிவிட்டான்.
கிரைண்டர் வேலையை முடித்து நித்யா …
” யாருங்க போன்ல ? “
“ஆபீஸ்ல இருந்ததுதான் பேசினாங்க ..இன்னிக்கு நைட் போனேன்னா நாளைக்கு நைட் தான் வருவேன் .நாளை டே டியூட்டிக்கு வர வேண்டியவர் லீவு. …அதனால அந்த டியூட்டியையும் சேத்து நான் பாக்கவேண்டி வரும். “
“அப்படியா …சரிங்க …டியூட்டி ..டியூட்டின்னு நேரத்துக்கு சாப்பிடமா இருந்து ஒடம்ப கெடுத்துக்காதிங்க ..
” சரிம்மா ….”
4
அன்றைய நைட் டியூட்டி மறுநாள் காலை 5 மணிக்கு முடியவும்.. நாற்காலியில் அமர்ந்து 7.30 மணி வரைக்கும் ஒரு தூக்கம் போட்டு எழுந்து…வெளியே வந்த ராஜேஷ் ஒரு டீ குடித்து விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். கற்பகம் கார்டன்ஸ் நோக்கிப் பறந்தது வண்டி.
கற்பகம் கார்டனின் வாசல் முகப்பு சுவற்றில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் .. அதன் கீழே ஒரு மேடையில் ஆரத்தி தட்டு …அதில் இரண்டு சிறிய கிண்ணங்களில் விபூதி குங்குமம்…
பிரதான கதவைத் திறந்தால் உள்ளே ஒரு பிரைவேட் ரோட் ..அதன் இரு மருங்கிலும் மரங்கள், சிறு சிறு ‘க்ரோட்டன் ..பூச் செடிகள், கலைந்து போய் அடுக்கிவைக்கப் பட்ட பழைய சினிமா
கட் -அவுட்டுகள் .. அரை குறையாய் இடிக்கப் பட்டு மொட்டையாய் நிற்கும் சுவர்கள் அதன் கீழே கொட்டிக் கிடக்கும் செங்கல் குவியல்கள். சிமெண்ட் சாலையின் நடுவில் ஒரு நீர் ஊற்று.. மேலே தொடர்ந்து சென்றால் இடது பக்கம் கோர்ட் சீன் செட், அதனை ஒட்டிய இரண்டு தனித் தனி மேக்-அப் அறைகள் ..அதன் கதவுகளில் ஒன்றில் ஜென்ட்ஸ் என்றும் மற்றொன்றில் லேடீஸ் என்றும் எழுதிய வாசகங்கள், சற்றே இன்னும் உள்ளே போனால் வலது புறம் ஹாஸ்பிடல் செட் … இத்யாதி ..இத்யாதி …
ராஜேஷ் வண்டியை நிறுத்தி விட்டு வாசல் பிள்ளையாருக்கு
ஒரு கும்பிடு போட்டு உள்ளே நுழைந்தான்.. வாச்மேனைத் தவிர வேறு ஆள்-அரவமே இல்லை . ஷூட்டிங் நடந்ததற்கோ, நடக்கப் போவதற்கோ உண்டான அறிகுறி சிறிதும் இல்லை…
வாச்மேன் ராஜேஷைப் பார்த்தவுடன்
“யார் நீங்க..? யாரைப் பாக்கணும் ?”
“இங்கே ‘கலைந்த வேஷம்’ சீரியல் ஷூட்டிங் நடக்கறதா சொல்லி .என்னை … என்று ஆரம்பித்த ராஜேஷை இடை மறித்து
“ஓ …கனகசபை வரச் சொன்னாரா? நீங்க ஆர்ட்டிஸ்ட்தானே ? “
என்று கேட்டான் வாச்மேன்.
“ஆமாம்ப்பா”
” அப்போ நேரப் போய் லெஃப்ட் எடுங்க … அங்கே யூனிட் ஆட்கள் இருபாங்க … விசாரிங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது அங்குக் கனகசபை வந்தான்.
“வணக்கம் ஸார் ” என்றான் ராஜேஷ் .
“யாரு ? “
“நான்தான் ராஜேஷ் ஸார் …வரச் சொல்லி இருந்தீங்களே …மறந்துட்டுடிங்களா ? “
” ஓ ..ராஜேஷ் ! ….இப்போ ஞாபகம் வந்துடுச்சு …எப்ப வந்தீங்க ..?
“நான் அப்பவே வந்துட்டேன் …..ரமேஷ் எப்போ வருவாரு …?”
“கொஞ்சம் லேட்டாதான் வருவார் …அதுக்குள்ள நீங்க ரெடி ஆயிடுங்க !
“புரியலை “
“ஒண்ணு செய்யுங்க… நேரா மேக் அப் ரூமுக்குப் போய் மேக் அப் போட்டுகிட்டு அப்படியே பெஞ்ச்ல இன்ஸ்பெக்டர் டிரெஸ் ‘அயன்’ பண்ணி ரெடியா இருக்கும்… அதைப் போட்டுகிட்டு ஜம்முன்னு வாங்க…அதுக்குள்ள ரமேஷ் சார் வாதிடுவார்… சரியா ? “
“சரி …”
ராஜேஷ் அங்கிருந்து கிளம்பி மேக் ஆப் ரூமுக்குள் சென்றால் அங்கு செல்வராஜ், “என்ன வேஷம் ஸார் சொன்னார்கள் ? என்று கேட்டான் .
“இன்ஸ்பெக்டர் “
“அப்படியா ? உக்காருங்க .. “
என்று சொன்னவன் ராஜேஷுக்கு மங்களகரமாய் அவனுடைய கையால் ‘முதல் பொட்டு’ வைத்து மேக் அப்பை ஆரம்பித்து மட மட வென்று வேலையை முடித்தான் …
“என்னோட இந்தக் கையால பொட்டு வச்சி தொழிலை ஆரம்பிச்ச எத்தனை பேர் இன்னிக்கு ஓஹோன்னு இருக்காங்க தெரியுமா? “
“அப்படியா ” மலைத்துப் போனான் ராஜேஷ் “
“ம்ம் … நல்லா சாமிய வேண்டிக்கிட்டு ஒரு நூறு ரூபா உன் கையால இந்த உண்டியல்ல போட்டுட்டு போ …நீ ஓஹோன்னு வருவே…”
ராஜேஷ் மனதுக்குள்ளே ஒரு புது நம்பிக்கை பிறந்தது.
” மேக் அப் முடிஞ்சுதா ?
” ஒரு நிமிஷம்… ஒரு சின்ன வேலை மறந்துட்டேன்”
என்றவன் கடைசி டச்சாக ராஜேஷ் முகத்தில் ஏற்கனவே இருந்த மீசையின் மேல் இன்னொரு முரட்டு மீசையை ஒட்ட வைத்தான்.
ராஜேஷ் பர்ஸில் இருந்து நூறு ரூபாயை எடுத்து அங்கிருந்த உண்டியலில் போட்டான்.
பெஞ்சில் இருந்த மூன்று செட் காக்கி டிரெஸ்சில் தன்னுடைய சைஸ் பார்த்து போட்டுக்கொண்டு கீழே நன்கு துடைத்து வைத்திருந்த ‘பூட்ஸ்சை’ மீண்டும் ஒரு முறை துடைத்து மாட்டிக் கொண்டு பக்கத்திலிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் முன் நின்று தன் உருவத்தைப் பார்த்து தன்னை ‘தங்கப்பதக்கம் சிவாஜி’ யாய் பாவித்துக் கொண்டான்.
இதற்கிடையில் யூனிட் ஆட்களுக்குக் காலை உணவு வந்தது …ராஜேஷும் அதில்ல பங்கு கொண்டான்.
மணி 09.30. ஆச்சு …10.30 ஆச்சு …இன்னும் ரமேஷ் மற்றும் டைரெக்டர்
வரவில்லை.
சரியாக 12.00 மணி …
ஒரு ஹோண்டா சிடி கார் உள்ளே வந்தது ..அதிலிருந்து டைரக்டரும், கையில் ஒரு ரைட்டிங்க் பேடோடு ரமேஷும் இறங்கினார்கள் …
ரமேஷ் , “என்னப்பா …எல்லாரும் வந்துட்டாங்களா? ஒரே ஒரு மானிடர் பாத்துட்டு டேக் போயிடலாம் …ஒகே ? என்னப்பா ராஜேஷ் …டிரெஸ் உனக்குக் கன கச்சிதமா பொருந்தி இருக்கு …”
இப்போ எடுக்க வேண்டிய சீன விவரிக்கிறேன் …நல்லா மனசில பதிய வச்சுகிட்டு நடிகனும் ஓகே ? “
என்று ராஜேஷ் செய்ய வேண்டிய கேரக்டர் பத்தியும் பேச வேண்டிய வசனத்தையும் விவரித்தான் ரமேஷ் ..மானிட்டரும் பார்த்து முடிந்தாகி விட்டது .
அப்போது அங்கு வந்த டைரக்டர் இன்ஸ்பெக்டர் டிரெஸ்சில இருந்த
ராஜேஷை முறைத்துப் பார்த்து விட்டு …
“ஏம்ப்பா ரமேஷ் இன்னிக்கு என்ன சீன் எடுக்கிறோம் ?இவர் யாரு இன்ஸ்பெக்டர் வேஷத்திலா?
“அதான் ஸார் அந்த போலீஸ் ஆபீஸர் வில்லன அவன் எடத்துலயே போய் கைது பண்ணற சீன் . நல்லா சொல்லி குடுத்து இருக்கேன் ….ஒரு மானிட்டர் கூட பாத்துட்டேன் ஸார் ..நீங்களும் ஒரு தடவ பாத்துட்ட்டா n ‘டேக்’ போயிடலாம் ஸார்.”
“அப்படிங்கற? “
“பை தி வே …ஸார் …இவன் என்னோட ஃபிரண்ட்.. பேரு ராஜேஷ் புதுசா நம்ம யூனிட்ல நடிக்க வந்திருக்கான் …நல்லா நடிப்பான் ஸார்…மானிட்டர் பாத்தப்போ நல்லா பெர்பாம் பண்ணினான் ஸார் “
” நிறுத்துய்யா! அந்த கனகசபைக்குத் தான் யோசனை இல்ல .உனக்குக் கூடவா இல்ல … ? இன்னிக்கு நாம எடுக்க வேண்டிய சீனில் வரவேண்டியது’இன்டெலிஜென்ஸ் விங் ‘ இன்ஸ்பெக்டர் ..அவருக்கு போலீஸ் யூனி ஃபாமே கிடையாது …இதைக் கூட கவனிக்க மாடியா ? நீயெல்லாம் ஒரு அசிஸ்டன்ட் எனக்கு ! ! செய்யற வேலைல கவனம் இல்லன்னா ஏம்ப்பா வேலைக்கு வரீங்க ? என் மூடையே கெடுத்துட்டிங்களே …
‘பேக் அப்’ என்று சொல்லிவிட்டு விர்ரென்று காரில் ஏறிச் சென்று
விட்டார் டைரக்டர்.
வேதனை கொண்ட ரமேஷும் வேடம் கலைந்த ராஜேஷும்
அவரவர் விதியை நொந்து டைரக்டர் ஷூட்டிங்க அடுத்ததா என்னைக்கு வச்சுக்கறாரோ அது வரைக்கும் பொறுத்திருப்போம் என்ற முடிவுக்கு ஏக-மனதாய் வந்தனர்..
