லாவண்யா சத்யநாதன்

எங்கிருந்து வருமோ?
எப்படி வருமோ?
தெரியவில்லை.
இரவில் சரியாய்
இரண்டுமணிக்கு வரும்.
கனவைக் கலைத்து
கட்டிலை விட்டெழுப்பி
மேஜைமுன் உட்காரவைக்கும்.
கவிதை ஒன்றை
எழுதச் சொல்லி
தோள்மேல் அமரும்.
எழுதி முடித்ததும்
எழுதியதைப் படிக்கும்.
கிறுக்கல் இது
கவிதையில்லையென்று
காதில் சொல்லி
தலையில் குட்டும்.
தாளைக் கிழித்தெறிந்து
நாளை வருவேனெனச் சொல்லிச் செல்லும்.
