…

வேலை விஷயமாக இரண்டு நாட்கள் அந்த ஊருக்கு வந்திருந்தான். அடிக்கடி வரும் ஊர்தான். பகல் முழுதும் அலுவலகத்தில் அயராத வேலை. இரவு மிகவும் லேட் ஆகி விட்டதால், அங்கேயே சாப்பிட்டுவிட்டு, தங்கியிருக்கும் விடுதியை நோக்கிக் குறுக்கு வழியில் நடந்து வந்தான்.
அதிக நடமாட்டமில்லாத தெரு. மாலை ஏழு மணிக்கு மேல் அவ்வப்போது கார்கள், ஆட்டோக்கள் மட்டும் வந்து போகும். வேடிக்கை பார்த்தபடி சில வீட்டு பால்கனிகளில் பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஊர்க்காரர்கள், அந்தத் தெருவைத் தவிர்த்துப்போகவே விரும்புவார்கள், ஒரு சிலரைத் தவிர!
அவன் அன்று அந்த ‘மூடி’ல் இல்லையென்றாலும், பழக்க தோஷத்தில் அந்தத் தெரு வழியே வந்தான். நேரமாகிவிட்டதும் ஒரு காரணம்.
அழகிய மஸ்லின் துணியில் முக்காடிட்டுத் தெரு ஓரமாய் அவள் சென்றுகொண்டிருந்தாள். பின்னால் நடந்து வந்த இவனுக்கு அதிசயமாக இருந்தது. பொதுவாகப் பெண்கள் அந்தத் தெருவில் நடந்து செல்ல மாட்டார்கள்.
சிறிது நடையைத் தள்ளிப் போட்டு, அவளைக் கடந்து செல்ல நினைத்தான். பின்னாலிருந்து பார்த்தபோது, இரண்டு வருடமாக அவன் அந்தத் தெரு வீடுகளில் தேடிவரும் ‘அவளை’ப் போலவே இருந்தாள். ‘இடையில் விசாரித்தபோது, அவள் வேறு ஊருக்குச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்ததே, ஒருவேளை இது அவளாக இருக்குமோ?’ அவனுக்கு ஆவல் அதிகமாகியது.. சற்று வேகமாக நடந்தான்.
காலடி கேட்டு அவள் திரும்பினாள் – அந்த இருட்டிலும் அதே அழகு. காண்டாக்ட் லென்ஸ் போட்டாபோன்ற கண்கள், அகன்ற நெற்றி, கூர்மையான நாசி, நீளமான விரல்கள்.
அவளேதான்!
அவள் மெதுவாக அருகில் வர, அவளது நீளமான விரல்கள் இன்னும் நீண்டன. தலையை நிமிர்த்திப் பார்க்க, இடது கண் இளம்பச்சை நிறத்தில் மினுமினுத்தது. வலது கண் இருந்த இடத்தில் ஓர் இருண்ட பள்ளம் மட்டும் இருந்தது.
அவன் மிரண்டு, திரும்பி ஓட, அவளது வலது கையும் நீ..ண்..டு. விரல்கள் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தன.
