உதடு/எஸ்.எல். நாணு

அந்தப் பார்வை அவனை என்னவோ செய்தது.

அதுவும் அடிக்கடி விரல்களால் புருவத்தை வருடிக் கொள்ளும் அழகில் தன்னையிழந்தான்.

அவளுடைய முக்காடு இன்னும் ஈர்ப்பைக் கூட்டியது.

இறுதியாக அந்த உதடு.. ரொம்பவே சாதாரண உதடு தான்.. இருந்தாலும் அதில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாக அவனுக்குப் பட்டது.. மறுபடியும் மறுபடியும் பார்த்துக் கொண்டிருந்தான்..

இதுவரை பல மாடல்கள் அவனுடைய ஓவியத்துக்காக பல விதமாக போஸ் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவன் பதம் பார்த்திருக்கிறான். பணம் கொடுத்து சரி கட்டியிருக்கிறான். ஒருத்தியைத் தவிற.. ரேகா.. முரண்டு பிடித்தாள்.. ஆனால் இறுதியில் அவன் ஜெயித்தான்..

இன்று இவள்..

இதுவரை அவன் கண்டிராத அழகு.. கண்டிராத கவர்ச்சி.. தூரிகையைப் பிடித்து கேன்வாஸில் அவள் பிம்பத்தை பிரதிபலிக்கும்போதே அவனுக்குள் இனம் புரியாத கிளர்ச்சி.. அதுவும் அந்த உதடு.. பிம்பத்தில் உதட்டை இன்னும் பிரதானப்படுத்தினான்.. 

வேலை முடியட்டும். கொண்டாட்டம் தான்..

மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.. 

தருணத்துக்காக காத்திருந்தான்.

திடீரென்று மின்வெட்டு..

எமெர்ஜென்ஸி விளக்கு வெளிச்சம் கொடுத்தது.

பத்து நிமிடங்கள்..

ஆசை வார்த்தைகள் பேசினான். கேட்டுக் கொண்டாள்..

மின்வெட்டு தளர்ந்ததும் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை ஒற்றி எடுக்கப் போனாள்..

அப்படியே ஒப்பனையை சீராக்கி உதட்டுச் சாயத்தை..

மீண்டும் வேலை தொடர்ந்தது..

அந்த உதடைப் பார்க்கப் பார்க்க அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை..

சட்டென்று அருகில் சென்று கவ்விக்கொண்டான்..

அரை விநாடியில் அப்படியே சரிந்து நுரை கக்கி முடிந்தான்..

அக்கா ரேகாவை நினைத்துக் கொண்டே கண்களில் நீருடன் விஷம் படிந்த உதட்டுச் சாயத்தை அவள் துடைத்து எடுத்தாள்..