
4 வது கதை
வழக்கம்போல் மனோஜ் பவன் ஓட்டலில் காப்பிக் குடிக்கச் சென்றேன். அப்போதுதான் அந்தப் பெண்ணை குழந்தையுடன் பார்த்தேன்.
அந்தப் பெண் என்னைப் பார்த்து, “சார், இது உங்கள் குழந்தை,” எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் திடீரென்று.
“என்னம்மா சொல்றே நீ, ” என்று பதறியபடி கேட்டேன்.
அந்தப் பெண்ணும் சரி, குழந்தையும் சரி பார்க்க அழகாக இருந்தார்கள்.
அவள் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியாக இருக்க வேண்டும்.
நான் அவளைப் பார்த்து, ” உன் பெயர் என்ன? ” என்று கேட்டேன்.
“மிருணளி. குழந்தையின் பெயர் வசந்த கோகுலம்,” என்றாள் கேட்காமலே.
“அப்ப இது உன் குழந்தைதானே..”
“இல்லை..வாசு குழந்தை. அவன் சாப்பாடு போட மாட்டேங்கறான்..அவன் கிட்டே குழந்தை வளரக் கூடாது..அதான் உங்கக் கிட்டே கொடுக்கிறேன்.
எனக்கு அந்தப் பெண்ணை புரிந்து விட்டது.
“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டேன்.
அதற்கு அந்தப் பெண் பதில் சொல்லவில்லை.
” நீ காப்பி சாப்பிடுகிறாயா?” என்று கேட்டேன்.
“சாப்பிடுகிறேன்,” என்றாள்.
“கொஞ்ச நேரம் குழந்தையைப் பிடித்துக் கொள்ளுங்கள்,” என்று கொடுத்தாள்.
அவள் காப்பி குடித்துக் கொணாடிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
குழந்தை திடீரென சிணுங்கியது.
நான் சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.
மிருணளியைப் பார்த்தால் மிருணளியைக் காண முடியவில்லை.
